12.2.15

‘தான்’உஷ்ஷ்ஷ் ‘அமி’‘தாப்’ - SHAMITHAB

‘தான்’உஷ்ஷ்ஷ் ‘அமி’‘தாப்’

மிகக் குறைந்த நேர இடைவெளியில் இரண்டு திரைப்படங்கள் ஒரு சேரப் பார்ப்பது, பல வருடங்களுக்குப் பிறகு, இப்போதுதான். இசைக்குப் பிறகு ஷமிதாப். ஒரு சேரப்பார்த்ததாலோ என்னவோ இரண்டுக்கும் இடையில் இடைவெளியே இல்லாதது போலவே இருந்தது. என்ன ஒன்று தமிழ் மற்றது இந்தி.

இசையில், சத்யராஜ் இளையராஜாவின் பிரதியோ என்ற சந்தேகத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் விதைத்தது. அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது. தன் போக்கில் தான் இன்னும் இளையராஜா ராஜாவாகவே இருக்கிறார் என்பதை ஷமிதாப் சொல்லுகிறது. ஷமிதாப்பில் துப்பும் இசையெல்லாம் இல்லை, துள்ளும் இசைதான். இசைஞானியின் இசை பிரமாண்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சூர்யாவின் இசை என்கிற திரைப்படம் ஈகோ – வை மையப்படுத்திய படம் என்றால் பால்கியின் ஷமிதாப்பும் ஈகோவை மையப்படுத்திய படம்தான். ஆனால் இரண்டு படங்களின் ஈகோவிற்கும் நிறைய வேற்றுமை. இசையில் அதில் சினிமாத்தனம் நிறைய புகுத்தப்பட்டிருக்கிறது. ஷமிதாப்பில் அது ரியலிஸ்ட்டிக்காக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சினிமாத்தனத்திற்குள்ளும் ரியலிஸம். இன்னும் மிகச் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணமாக இருந்தாலும் இதுவும் நன்றாகவே இருந்தது. முந்தைய ஈகோ பழையவனில் இருந்து உருவாகிறது. பிந்தையதில் தோல்வியுற்றவன் வெற்றிபெருபவன் இருவரிடமிருந்தும் உதிக்கிறது.

இசையிலும் நடிகர்கள் எண்ணிக்கை குறைவு. இதிலும்தான். இரண்டு ஆண்கள் ஒரு பெண் என்று மூவரைச் சுற்றி நடக்கும் இசையைப் போலவே, ஷமிதாப்பிலும் இரண்டு ஆண்கள் ஒரு பெண் என்று நகர்கிறது படம். இசையின் கனவு இசை என்றால், ஷமிதாப்பின் கனவு நடிப்பு. கனவுகள் நனவாகும் விதம் எப்போதும் புதிரானதுதான்.
சரி. இசையைப் பற்றி ஏற்கனவே கடந்த பதிவில் இயம்பிவிட்டதால், ஷமிதாப்பின் கனவுக்குள் மட்டும் இயங்குவோம்.

ஷமிதாப்... இசையில் உள்ள நீளம் இதில் இல்லாததாலோ என்னவோ இது எனக்கு மிகவும் நெருக்கமான படமாகவும் இருக்கிறது. படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது அமிதாப்பின் கரகரப்புக் குரல் நமது குரலிலும் ஒட்டிக் கொள்கிறது. அமிதாப்பின் நடிப்பும் அலாதியானதுதான். ஒவ்வொரு பிரேமிலும் அவரின் முத்திரை பதிக்கப் பட்டிருக்கிறது. இந்த வயதிலும் அவரது டெடிகேசன்... மிக அருமை.

தனுஷின் நடிப்பு அதற்கு ஈடு கொடுக்கும் நடிப்பு. ஆனால் தனுஷின் நடிப்பை முற்றிலும் பயன்படுத்தாமல் இயக்குனர் பால்கி விட்டு விட்டார் என்று சொல்லலாம். நடித்த வரையில் தனுஷ் அபாரம், சில இடங்களைத் தவிர. பி. சி. ஸ்ரீராம் (அவர்தானே) ஒளிப்பதிவு மிக நேர்த்தியானது. அதுவும் இந்தப் படத்திற்கு வலுச்சேர்க்கிறது.

சரி படத்தின் கதையைச் சொன்னால் பார்க்கும் சுவாரஸ்யம் குறைந்து விடும். சொல்லாவிட்டால் பதிவு சுமாராகி விடும். முற்றிலுமாகச் சொல்ல முடியாது எனினும் பாத்திரங்களை உள்ளிழுக்காமல் கதை சொல்ல இயலுமா? ம்.. முயற்சிக்கலாம்.

மனித வாழ்வை உயர்த்திப் பிடிப்பதும் அதே சமயம் அடி சறுக்கச் செய்வதும் ‘தான்’ என்ற ஈகோதான். சாதாரண நிலையில் ஒருவன் முன்னேறி வர வேண்டுமென்றால் அதற்கு ‘தான்’ என்கிற மனநிலை மிக அவசியமாகிறது. அதுவே நாட்கள் செல்லச்செல்ல பிறரைப் பற்றி எந்த அக்கறையும் (பிரக்ஜையா?) இல்லாமல் இருக்கப் பழக்கி விடுகிறது. ஏற்றி விட்டவர்களுக்கென்று வரும் போது கூட ஈகோ தடுக்கிறது. எது ஒருவனின் முன்னேற்றத்திற்குத் தேவையாக இருக்கிறதோ அதுவே அவனுடைய அழிவுக்கும் காரணமாக இருக்கிறது.

மத்திய அரசில் ஆட்சி அமைக்க திரு. மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நிச்சயம் அவரது ‘தான்’மையும், அதோடு சேர்ந்து இந்திய ஊடகங்களை தன்வயப்படுத்திய யுக்தி, அவரை நம்பி பணம் செலவழிக்கத் தயாராக இருந்த அதானி போன்றவர்கள் -  இவைகளெல்லாம் சேர்ந்து தான் அவரை ஒரு மிகப் பெரிய ஆளுமையாக உருவாக்கியது. ஆனால் தனது வாக்குறுதிகளுக்கு உண்மையில்லாமல் இருக்கிற போது ‘தான்’ என்பது ஒன்றும் செய்ய முடியாது. வெறும் மோடியை முன்னிறுத்தும் கோஷங்கள் – விளம்பர யுக்திகள், ஒன்றும் செய்து விட முடியாது. உஷ்.... அமைதி என்று தில்லி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.

மத்திய அரசின் மாற்றத்திற்கான வாக்கு எப்படி இருந்ததோ அதே போல ஒட்டு மொத்தமாக அறுபத்தி ஏழு இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றி இருக்கிறது. இங்கே பாரத் பிரதமரின் ஈகோவும், அவரது பெயர் பொறித்த கோட், இந்தியாவில் அடிக்கடி இல்லாதது, உறுதி மொழிகளைக் காப்பாற்றாதது, வெறும் திட்டங்கள் துவங்கும் பிரதமராகவும் அதை விளம்பரப் படுத்தும் தலைவராகவும் மட்டுமே இருப்பது, அவரது அமைதி என்று பல காரணங்கள். தான் என்பது தான்தோன்றித்தனத்திற்கும் வழிகோலும்.

‘தான்’ என்பது அடக்கி வாசிக்கப்படவில்லை என்றால் கேஜ்ரிவாலிற்கும் நாளை இதே நிலைதான். மோடி ஆதரவாளர்கள் இதைப் பற்றி பேசமாட்டார்கள். டெல்லி தேர்தல் முடிவுகளை வைத்து மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது என்று தேர்தலுக்கு முன்பே வெங்கையாநாயுடு போன்றோர் ஜகா வாங்கி விட்டார்கள். கடந்த ஆண்டு தேர்தலில் உதவிய ஊடக யுக்திகள் இந்த முறை பலனளிக்காமல் போய் விட்டன. அதோடு கூட த ரைஸ் அண்ட் பால் ஆப் பி.ஜே.பி என்று ஆய்வு நடத்தலாம்.

ஷமிதாப் ஒரு விதத்தில் (மேற்குறிக்கப்பட்ட) இவைகளைப் பற்றியெல்லாம் பேசுகிறது. ஈகோ இல்லாவிட்டால் வாழ்வில் வெற்றி இல்லை. ஆனால் அதுவே எப்படி நமது கண்களை மறைக்கிறது. யார் பெரியவன் என்கிற சர்ச்சை. எல்லாவற்றிலும் தன்னை முன்னிறுத்தும் நிலை. எவ்வளவு தூரத்திற்கு இது அழைத்துச் செல்லும்? எதுவரை மனிதன் தனியாகப் பயணம் செய்ய முடியும்? நான் என்கிற அகந்தை நான் உயிரோடு இருந்தாலும் என்னைக் கொன்று விடாதா? இந்தக் கேள்விகளையெல்லாம் இந்தப் படம் எழுப்பலாம் [சிலருக்கு].

ஆனால் என்னதான் திறமை, ‘தன்’நம்பிக்கை இருந்தாலும் சில சமயங்களில் அதிர்ஷ்டம் என்கிற தேவதை தேவைப்படுகிறது. திரைப்படத்தில் [ஷமிதாப்பில்] அக்ஷரா உருவத்தில் அது வருகிறது. கமலின் மகள். அழகாய் நடித்திருக்கிறாள். இயல்பாய் வந்து போகிறாள். ஆனால் எல்லாருக்கும் தேவதைகள் வருவதில்லை.அது தில்லியில், பா. ஜ. கா.விற்கு கிரண் பேடி வடிவத்தில் வரத் தயாராய் இல்லை. தில்லி தேர்தல் முடிவுகள் அதைத் தெளிவு படுத்தி விட்டன. என்ன செய்வது? எல்லாருக்குமா அதிஷ்டம் வரும்?

அதிஷ்டம் போலவே விபத்தும். எதிர் பார்க்கும் போது அது வராது. எதிர்பார்க்காத போது இது வரும். விபத்து என்றாலே எதிர்பார்க்காத போது நடப்பதுதானே. ஆனால் எப்படியோ விபத்து நடக்கும் முன்பு அது உங்களுக்குத் தெரியப்படுத்தப் படுகிறது. ஆனால் அதை சரியாய் முன்கூட்டியே கணிக்க முடியாது. முடிந்த பிறகுதான் தெரிந்ததையே உணர்கிறோம். முன்பே தெரிவதற்கும் உணர்வதற்கும் முடிந்தால் நாம் சித்தர்கள் அல்லவா?

கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை நானும் என் நண்பர் ஒருவரும் வீட்டில் கார் நிறுத்தும் இடத்தில் இருந்து பேசிக் கொண்டிருந்தோம். அவரது குடியிருப்பைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவரையே உற்றுப் பார்த்து நான் கேட்டேன் இது யாருக்குச் சொந்தம்? அவர் சொன்னார், “இந்தக் குடியிருப்புக்கென்று சொந்த சுற்றுச் சுவர் இல்லை. மூன்று புறமும் அருகில் இருப்பவர்கள் எழுப்பிக் கொண்டார்கள்.” நான் விளையாட்டாய்க் கேட்டேன், சுவர் இடிந்தால் அவர்கள்தானே கட்டுவார்கள்?

அடுத்த நாள் ஷமிதாப் பார்த்து விட்டு அதே குடியிருப்பில் கார் நிறுத்துமிடம். அவரது கார் நிறுத்துமிடத்திற்கும் சுவருக்கும் இருபது அடி இருக்கும். கொஞ்சம் இறக்கம். வண்டி கியரில் இருந்தது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை. வண்டியை இயக்கி அது கண்ட்ரோலை இழந்து நேரடியாக நான் வெறித்துப் பார்த்த சுற்றுச் சுவரின் மீது இடித்து நின்றது. பின்பார்க்கும் கண்ணாடி தூணில் இடிபட்டு தனியே விழ, விளையாட்டாய் நடக்கிறதா முன்பே போய் நிற்போமா என்ற எண்ணம் எனக்கு வர, அதற்கு செவிமடுக்காமல் நான் நிற்க, டமால் என்ற சத்தத்தோடு வண்டியும் நிற்கிறது. 

வண்டிக்கு சேதாரம். ஆளுக்கும் சுவற்றிற்கும் இல்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம்தான். அப்போதுதான் என் மனதில் – முதல் நாள் பேசிக்கொண்டது வந்து போகிறது. அதே சுவரை உற்றுப் பார்த்ததும் மனதில் வந்து போகிறது. நாம் உற்றுப் பார்க்கிறபோதே இது நடக்கும் என்று தெரியாது... நடந்த பிறகு நமக்கு முன்பே சொல்லப்பட்டது போல உணர்கிறோம்.

ஷமிதாப்பிலும் நடந்த பிறகு வந்து போகும் காட்சிகள் நிறைய உண்டு. அது நமது மனதிலும் சில நிகழ்வுகளை திரும்ப அழைக்கும். நடந்த பிறகுதானே நமக்கு ஞானம் வருகிறது.

ஷமிதாப் நல்ல படம். இடையிடையே சில காட்சிகள் பழைய படங்களை நினைவு படுத்துகின்றன. ஆசையைக் காத்துல தூது விட்டு பாடல் கூட... ஆனாலும் எனக்குப் பிடித்திருக்கிறது.  . உங்களுக்கும் பிடிக்கலாம்... ஆனால் வசூலை அள்ளுமா என்பது கேள்விக்குறியே? 

ஆனால் வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது. அதில் நம்ம கேப்டனுக்குப் பிடிக்காத ஒன்றும் இருக்கிறது. எல்லாமே எல்லாருக்கும் பிடிக்குமா என்ன?2 comments:

Selva raj சொன்னது…[பதிலளி]

அப்பு உங்க விமர்சனத்தை படிச்சா சமிதாப் பார்க்கணும்போல இருக்கு. இளையராஜா பற்றி சொன்னது கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கிருச்சு, வாழ்த்துக்கள்.

Appu U சொன்னது…[பதிலளி]

@Selva raj

நன்றி...

பாருங்கள்...

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்