1.2.14

இந்தியக் குடியரசும் அரசியம் அமைப்பும் - 1

65 ஆவது குடியரசு  தினத்தை இந்தியா சிறப்பாக கொண்டாடி முடித்து தேர்தலை எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், குடியரசு பற்றியும் இந்தியாவின் அரசியல் பற்றியும் அலசுவது நல்லது  என படுகிறது.

பல சமயங்களில் ஜனநாயகத்திற்கும் குடியரசிற்கும் உள்ள வித்தியாசம் குழப்பம் விளைவிப்பதாகவே இருக்கிறது. இந்தியா ஜனநாயக நாடு மற்றும் குடியரசு நாடு. ஜன நாயகம் என்பது மக்கள் அல்லது ஜனங்கள்தான் நாட்டின் நாயகர்கள். தங்களைத் தாங்களே ஆள்வது என்பதுதான் ஜனநாயகத்தின் கரு.
ஆனால் எல்லா ஜனநாயகமும் உண்மையிலேயே எல்லா மக்களின் நலத்தையும் பூர்த்தி செய்யும் என்கிற எந்த உத்திரவாதமும் இல்லை. பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் கால கிரேக்க மக்களின் கலாச்சாரத்தில் கூட மக்களாட்சி தான் இருந்தது. ஆனால் எல்லா மக்களும் சமமாணவர்கள் என்கிற எண்ணம் அவர்களுக்கு இல்லை. அடிமைகள் ஒரு நாட்டின் ஆள்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமைகள் பெற்றவர்களாக இல்லை. ஆனால் இந்தியக் குடியரசு அப்படி இல்லை. நாட்டின் குடி மக்கள் எல்லாரும் சமமானவர்கள் என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இயங்குகிறது.

குடியரசு என்பது குடி மக்களின் அரசு என்கிற விதத்தில் ஜனநாயகத்தோடு தொடர்புடையதுதான். ஆனால், அதையும் தாண்டி குடி மக்கள் அனைவரும் எப்போதும், எக்காலத்திலும், யாராலும், எதனாலும், மறுக்கப் படாத இயற்கை உரிமைகளைக் கொண்டுள்ளார்கள் என்கிற தளத்தில் இருந்து, சட்டத்தையும், அரசியல் அமைப்பையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குவது குடியரசு.

ஹிட்லர் என்கிற மாபெரும் இன வெறித் தலைவன் ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப் பட்டவர்தான். ஆனால் அந்த ஆட்சியில் தனி மனித உரிமைகள் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டுமே சொந்தமானதாக அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு அந்த உரிமைகள் இல்லை என்பதாக கருதப் பட்டது. இந்தப் படிப்பினைக்குப் பிறகு, மனித உரிமைகள்   இனவெறிக் கொள்கைகளும் உலகில் எல்லா மக்களாலும் வெறுக்கப் பட்டது என்பதையும் நாம் அறிவோம்.

இந்திய சுதந்திரம் என்பது ஹிட்லருக்குப் பிறகு வந்தது. எனவே, இந்தியா வெறும் ஜனநாயக நாடாக மட்டுமில்லாமல் குடியரசாகவும் வேண்டும் என்கிற சிந்தனை நம் தலைவர்களுக்கு வரவே, அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா அமைப்புச் சட்டத்தினால் ஆளப்படுகிற அரசு என்பதை நாம் அடிக்கடி நினைவு கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.

வெறும் ஜனநாயக நாடு என்பது மெஜாரிட்டேரியன் அரசாகவும், பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றும் அரசாக மட்டுமே இருக்க முடியும். இதை ஒரு கற்பனை உதாரணத்தினால் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவில், ஓர் இந்து பாசிச அமைப்பு இது இந்துப் பெரும்பான்மை நாடு எனவே இங்கே இந்துக்கள் மட்டுமே இருக்க முடியும், பிறர் வெளியேற வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வர முடியும். அதனால், ஹிட்லர் போன்று சில முடிவுகளை எடுக்க முடியும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் மாற்றங்களை விரும்புகிற  ஒவ்வொருவரும், வேறு வழியின்றி இந்த முடிவுக்கு தள்ளப் படுவதற்கான  காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இத்தகைய காரணங்கள் இன்னும் பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.
இந்துத்துவ பெரும்பான்மை என்பது மட்டுமே ஆட்சி அமைக்க ஒரு கருவியாகப் பயன்படுத்தப் படும் போது, இன்னும் சிறிது காலத்திற்குப் பிறகு, இந்தி பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதனால், இந்தியாவின் எல்லா இந்துக்களும், இந்தி பேச வேண்டும் என்றோ அல்லது இந்தி பேசாத இந்துக்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று பெரும்பான்மை இந்துக்கள் முடிவுக்கு வரமுடியும்.  அதன் பிறகு, இந்துக்களுக்குள் சைவ வைணவ பிரிவு பெரும்பான்மை என்று வரிசையாக - பெரும்பான்மை என்பது எந்த விதமான வேறுபாடுகளையும் சகித்துக் கொள்ள முடியாத கொடூரமான பாசிசத்தில் முடியும் சாத்தியக் கூறுகளே இருக்கின்றன. இனவெறி என்பது எவ்வளவு கொடூரமான விடயம் என்பதைப் புரிந்து கொள்ள இது போதும்.

ஆனால், இது போன்ற பெரும்பான்மை எண்ணங்கள் உருவாக்கப்படுவது இமோஷன்ஸ் வழியாகத்தான். இன்று எல்லாரையும் மிகச் சுலபாமாக ட்ரிகர் பண்ணுவது மதம்தான். அதன் பிறகு மொழி. இது போன்ற அம்சங்கள் தவறு என்றெல்லாம் நான் வாதட வில்லை. இதில் எது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் எனக்கான கருத்து இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு, இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு... மீண்டும் நமது விஷயத்துக்கு வருவோம்.

இதுபோன்ற இமோஷனல் சமாச்சாரங்களால் ஒரு தவறான அல்லது இனவெறி, பாசிசக் கொள்கையில் நாம் புதைந்து போகாமல் இருக்க, நம்மை நெறிப் படுத்த உதவுவன அரசியல் அமைப்பும் சட்டங்களும். அதனால்தான் நீதி மன்றங்கள் தனி மனித உரிமையை நிலை நாட்டும் ஒரு தன்னாட்சி [அரசியல் கட்சிகளின் கைப்பாவைகளாக இல்லாமல் (!)] நிறுவனங்களாக இருக்கின்றன.

ஆம் ஆத்மியின் சட்ட அமைச்சரின் இனவெறிக் கெதிராக எல்லாரும் வெகுண்டெழுவது நாம் இன்னமும் குடியரசு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற நம்பிக்கையைக் கொடுக்கிறது. அதே சமயம், இன்று இனவெறிக் கொள்கைக்கு எதிராக வெகுண்டெழும் பத்திரிக்கைகள் தமிழக மீனவர்களுக்கெதிரான சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு மவுனத்தை பதிலாகத் தருவது பத்திரிகைத் தூண் எப்படி தனது பங்கை ஆற்றுகிறது என்று கேட்க வைக்கிறது. 

பங்களாதேஷில் மற்றும் பாகிஸ்தானில் இந்துக்கள் பாதிக்கப் படுவதிற்கு எதிராக இந்தியாவில் பா.ஜ.க. அமைப்பு போராட்டங்கள் நடத்தியது ஒரு நாட்டில் பன்முகத்தன்மை என்பது எப்போதும் பாதுக்காகப்பட வேண்டும் என்கிற உண்மையை உணர்த்துகிறது. அது இந்தியாவிற்கும் பொருந்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் அரசியல்  அமைப்பையும்,சட்டங்களையும் ஒழுங்கு படுத்தும் அமைப்பாக அரசு இருக்க வேண்டும்.

தொடரும்.....


2 comments:

selvaraj சொன்னது…[பதிலளி]

அன்னைக்கே பெரியார் சரியா சொன்னார். அரசியல்வாதிகள் பொறுக்கித்தின்ன ஜனநாயகம் அதிகாரிகள் பொறுக்கித்தின்ன அரசாங்கம் சாமியாருங்க பொறுக்கித்தின்ன மதம். இது இன்றைக்கும் பொருந்தும். உத்தரகாண்டில் எத்தனை ஆயிரம் பேர் செத்தாங்கன்னு இன்னும் யாருக்கும் தெரியாது. ஏறக்குறைய லட்சம் இருக்கும். அரசாங்கம் மறைச்சிருச்சு. உள்ளூரு வானிலை பத்தி தெளிவா சொல்லத்தெரியலை செவ்வாய்க்கு விடுராய்ங்க செய்மதி. இந்தியா வல்லரசாம், குடியரசாம். மக்களை பாதுகாக்கவேண்டிய அரசாங்கம் குடிச்சு சாக வைக்குது. குடிமக்களை கெடுக்கும் டாஸ்மாக்குக்கு காவல் துறை பாதுகாப்பு. எவன்யா சொன்னது இந்தியா குடி மக்களை பாதுகாக்கும் குடியரசுன்னு. கேட்டா இவ்வளவு பேச அனுமதிக்குதெ அதான் குடியரசுன்னு சப்பைக்கட்டு கட்ட ரெண்டு பேர் தயாரா இருப்பாங்க. வருசத்துக்கு 1 லட்சம் பேர் சாவுறாங்க சாலை விபத்தில் மட்டும். ஹிட்லர் கொன்னவங்களை விட பொறுப்பற்ற அரசாங்கம் அதிகம் பேரை இந்தியாவில் கொன்னுகிட்டு இருக்குது, சமீபத்திய அந்தமான் தீவில் நடந்த 42 பேர் கொலை விபத்து வரை. போங்கையா நீங்களும் ஒங்க ஜனநாயகமும்

selvaraj சொன்னது…[பதிலளி]

அப்பு ஜனநாயகத்திற்கும் குடியரசுக்குமான நீங்க கொடுத்திருக்கும் வரையறைகள் புதியதாக வித்யாசமாக இருக்கிறது. 1 என்று போட்டிருப்பதைப் பார்த்தால் தொடரும் போலிருக்கிறது. இரண்டாம் பாகத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்