18.5.11

... திருவிளையாடல் ஆரம்பம் - முதலில் தமிழத்தில்

பணநாயகம் தோற்று ஜனநாயகம் வென்றது என்று எல்லாருமே எழுதித் தள்ளிவிட்டோம். அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து இருக்கும் அம்மா விற்கு வாழ்த்துகள்.

பழைய தவறுகளிலிருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்பார் என்று எல்லோரும் எதிர் பார்க்கிறார்கள். ஆனால் அப்படி கற்றுக் கொள்ளுதல் நிறைய இருக்குமா எனத் தெரியவில்லை.

கடும் கோபத்தோடு எல்லாரும் சேர்ந்து கலைஞரின் குடும்பத்தைத் திட்டித் தீர்த்து ஆட்சி மாற்றம் கொண்டு வந்தாயிற்று. இது மக்கள்விரும்பிய மாற்றம். நாம் ஒன்றும் பெரிதாய் செய்துவிட வில்லை. எப்போதும், யார் வந்தாலும் இந்த இடித்துரைக்கும் கொள்கையில் நாம் குறியாய் இருக்க வேண்டும். அது ஐயாவாக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி.

ஏற்கனவே மன்னார்குடிக் குடும்பத்தினால் வந்த ஆட்சி மாற்றம். இப்போது திருக்குவளைக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. ஆக மொத்தம் எப்படிப் பார்த்தாலும், மாற்றம் கருதி வாக்களித்த மக்களின் குடும்பங்கள் வாழ வேண்டும். 

ஏறக்குறைய ஆயிரம் கோடி செலவு செய்து கட்டப்பட்ட புதிய கட்டிடம் இப்போது  கேட்பாரற்றுக் கிடக்கப் போகிறது. இதற்கு யாரும் சரி என்று வக்காளத்தெல்லாம் வாங்கிக் கொண்டு இருக்க முடியாது. முந்தைய அரசு எல்லாக் கட்சியினரையும் ஒருங்கிணைத்துத்தான் இந்த முயற்சியில் இறங்கியிருக்க வேண்டும். அப்படியே இல்லை அது தவறு அல்லது குற்றம் என்றாலும், அதைப் பயன்படுத்தாமல் இருப்பது பெரிய குற்றம். 
ஏதோ, இதை கலைஞர் தனது தொலைக்காட்சியின் இலாபத்திலிருந்து கட்டியிருந்தால், [சும்மா ஒரு கற்பனைக்காக] அம்மா செய்வதை சரி என்றாவது சொல்லலாம். அம்மாவும் இன்னும் சில நாட்களில் இந்தக் கோட்டை சரியில்லை என்று இட மாற்றம் செய்வார். அது இன்னோர் இடத்தில், இன்னும் பிரமாண்டமாய் இன்னும் சில ஆயிரம் கோடிகள் கூடுதலாகவே இருக்கும்.  அதுவும் யார் பணம் - அம்மாவின் வருமானத்திலிருந்தா - இருந்தால் சந்தோசம்.
யாரும் கோபப்பட்டு - அவர்கள் போட்ட பாலங்களில் போக மாட்டீர்களா? என்றெல்லாம் கேட்டுவிடப் போகிறார்கள், அப்புறம் தனது வீட்டிலிருந்து கோட்டைக்கு ஹெலிகாப்டரில் மட்டும்தான் போவார்கள் - அப்படிப் போனாலும் சந்தோசம்தான் - சென்னை வாசிகள் முதல்வர் வருகைக்காக நிறுத்தி வைக்கப்படும் ட்ராபிக் கொடுமையிலிருந்து  தப்பிப்பார்கள்.

அம்மாவின் வருகையே ஆர்ப்பாட்டமாய் இருக்கிறது. சரவேடியோடு, அதிரடியால் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.

எனக்கு சின்னப் பிள்ளைகள் சொல்லும் - "உன் கூடக் கா!" ... சண்டைதான் நினைவுக்கு வருகிறது. 

நண்பர்களே:
இப்போதுதான் திருவிளையாடல் ஆரம்பம். 
இனிமேல்.......


0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்