17.9.13

மதச்சார்பின்மை- அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

மதச்சார்பின்மை என்ன என்பதை ராணுவ வீரர்களிடம்தான் அனைத்து அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று திரு நரேந்திர மோடி அவர்கள் நேற்று உரையாற்றினார்...

நன்றி தினமணி 

இதற்கு முந்தய பதிவில் இடிக்கத் தூண்டியவரை விட எரிக்கத் தூண்டியவர்தான் அதிக செல்வாக்கோடு இருக்கின்றார் என்று எழுதியதற்கு நண்பர் ஒருவர் பின்வருமாறு பின்னுரை எழுதியிருந்தார்...
கோத்ரா ரயில் எரிப்பில் ஈடுபட்டது முஸ்லிம்கள்.கலவரத்தை ஆரம்பித்தது முஸ்லிம்கள்.அதன் பலனை அவர்கள் அனுபவித்தனர்."
நண்பர் சொன்ன கருத்தைத்தான் மோடியின் வரவை விரும்புகிற அனைவரும் சொல்லுகிறார்கள். ஆரம்பித்தது இஸ்லாமியர்கள்... எனவே அதன் பலன் மீண்டும் அவர்களை மற்றவர்கள் சேர்ந்து கொல்லுவது. அதனால்தான் அவர் வலுவான தலைமை என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள்.

குஜராத் முதல்வர் மீது இருக்கிற குற்றச்சாட்டே, தொடர்ந்த அல்லது தொடர விட்ட கலவரங்களை அடக்க மறந்தவர் அல்லது மறுத்தவர் என்பதுதான்... அரசு அதிகாரத்தில் இருக்கிறவர்கள் கலவரத்தை வளர்ப்பது என்பது இந்திய சட்டத்தின் மீதும் நீதி மன்றத்தின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. இதை நாம் மறந்து விட முடியாது என்பதைத் தான் நான் சொல்ல விரும்புகிறேன். மக்கள்தான் சட்டத்தை மதிக்கவில்லை என்றாலும் முதல்வராவது மதிக்க வேண்டுமல்லவா? [யார் மதிக்கிறா அப்படின்னு பதில் கேள்வி கேட்டா அப்ப திரு மோடி அப்படித்தானான்னு பதில் கேள்வி கேக்க வேண்டியதுதான்].

கலவரம் விளைவிக்கிறவர்கள் குற்றவாளிகள். அவர்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள். அது யாராக இருந்தாலும்.... அதைக் காரணம் காட்டி நம் விருப்பப் படி செயல்பட இது ஒன்றும் தமிழ் திரைப்படம் இல்லையல்லவா​?

காங்கிரஸ் அரசுக்கு மாற்றான ஒரு அரசு வர வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். அது பா.ஜ.க வாக இருக்கலாம்.  அதற்காக மதத்தை அரசியலில் கலப்பது தவறு. மீண்டும் மீண்டும் மதத்தை மட்டுமே பா.ஜ.க. முன்னிறுத்துவது தவறு என்பதை மீண்டும் சுட்டிக்காட்டுவது நல்லது. காங்கிரசை எல்லாரும்தான் எதிர்க்கின்றனர். ஏதோ காங்கிரஸ் ஆட்சி மைனாரிட்டி மக்களுக்கு மட்டுமே நல்லது செய்வது போலவும், மைனாரிட்டி மக்களுக்கு மட்டுமான ஆட்சி என்பது போலவும், இந்து மக்களை வாழ விடாது போலவும் பேசுவது அல்லது அப்படி ஒரு பிரம்மையை உருவாக்கி அதற்காக இந்தியக் குடிமக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்துத்தான் பா.ஜ. க. வை வளர்க்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

உண்மை என்னவெனில் காங்கிரஸ் அரசு எந்த ஒரு இந்தியனையும் வாழ விடாது... அதற்கு பிரித்துப் பார்க்கத் தெரியாது. எல்லாரையும் வெறுக்கும். பணக்காரர்களை மட்டுமே மதிக்கும். உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பே. விவசாயிகளின் வெறுப்பு, சொந்த நாட்டு மீனவர்களையே காக்க துப்பில்லாத அரசு, மக்கள் கூடி வாழும் இடங்களில் ஒட்டு மொத்தமான அணு உலைகள், அந்நிய முதலீடு என்ற பெயரில் அனைத்தையும் வெளியாருக்குத் தாரைவார்க்கும் பொருளாதாரக் கொள்கை, ஊழல், பெட்ரோல் விலை உயர்வைக் கட்டுப் படுத்தாத தாரள மாயம், பெரு முதலாளிகளின் கைக் கூலிகளாக இருக்கும் அரசு, என்று அதன் மீது குற்றம் சாட்டுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன... 

இவைகளுக்கான மாற்றாக புதிய கொள்கைகள், திட்டங்கள் இவைகளை மட்டுமே முன்னிறுத்த வேண்டும். சும்மா அதை விட்டுவிட்டு இந்த அரசு இஸ்லாமியர்களைப் பாதுகாக்கிறது இந்துக்களை எதிர்க்கிறது என்று மக்களை எமோஷனல் பெயரில் வன்முறையையும், வெறுப்பையும் விதைப்பது - பா. ஜ.க விடம் மாற்றுக் கொள்கைகள் ஒன்றும் இல்லை என்பதைத் தான் காட்டும். அது இதை ஒரு போதும் காங்கிரசிடமிருந்து வேறுபட்ட கட்சியாக காண்பிக்காது. 

கொள்கைகள் இல்லாமல் இருப்பது நல்லதல்ல. தெளிவு படுத்த வேண்டியவைகள் கொள்கைகளே தவிர பிளவுகள் அல்ல... 

மதச் சார்பின்மையை நாம் ராணுவ வீரர்களிடம் கற்றுக் கொள்ளலாம். அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற திரு மோடியின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். அவரும் அரசியல்வாதி என்பதனால் இந்தக் கேள்வியை அவரிடம் கேட்கலாம் - 
நீங்க எப்ப சார் கத்துக்கப் போறீங்க?

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்