24.2.14

தமிழர்கள் எமோஷனல் பக்கிகளா ?

குற்றச்சாட்டு

"தமிழர்கள் இமோஷனல் பக்கிகள்  என்றும், மரணதண்டனை ரத்து செய்யப் பட்டதற்கு தமிழர்கள் ஆராயாமல் ஆர்ப்பரிக்கிறார்கள் - தீவிரவாதிகளை எல்லாம் விடுவிக்கச் சொல்லுகிறார்கள். இது அடுக்குமா? ரோட்டில் தீவிரவாதிகள் எல்லாம் நடமாட ஆரம்பித்து விட்டால் நாடு நல்ல இருக்குமா? காப்பித்தண்ணி குடிச்சுட்டு, இட்லி சாம்பார் சாப்டுட்டு, கைலியை கட்டிக்கிட்டு, பட்டா பட்டி போட்டுக்குட்டு, எந்த அறிவும் இல்லாமல் முக நூலில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்" என்கிற ரீதியில்,

தமிழர்களைப் பற்றிய ஒரு தவறான, பிற்போக்குத்தனமான, இமொஷனல் நண்பர்கள், வலைப்பதிவில், நாளிதழில், ஆங்கில-இந்தி தொலைக் காட்சிகளில் கத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒத்தூதுவதற்கென சில காங்கிரஸ்காரர்கள், அவர்களுக்கு எதிரானவர்கள் என பல தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களும் அடக்கம். இதுல மட்டும் இவங்கெல்லாம் ஒன்னு சேர்ந்துவிடுகிறார்கள். 

காரணம் குழப்பம் ​​
எல்லாரும் பல விஷயங்களைப் போட்டு குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதைப் பற்றி நாம் ஏறக்குறைய மூன்று வருடங்களுக்கு முன்னதாகவே எழுதியிருக்கிறோம். மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் என்கிற ரீதியில், இந்தத் தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் உண்டு. அவர்கள் இமொஷனல் பக்கிகள் அல்ல. அதற்குப் பெயர் மனித உரிமைகளை வலியுறுத்துவது. ஒரு மனித உயிரைப் பறிக்கிற உரிமை அரசிற்கோ சட்டத்திற்கோ கிடையாது என்பதுதான். சரி ஒருவன் பலரைக் கொன்றிருந்தால், அவனை அரசு கொல்லக்கூடாதா என்கிற கேள்விக்கு அப்போது அரசும் பயங்கரவாதியாகி விடுகிறது என்று நினைப்பவர்கள் அவர்கள். எனவே தண்டனையே வேண்டாம் என்று சொல்லுபவர்கள் அல்ல அவர்கள்.

இன்னும் சிலர் இந்த மூவர் அல்லது அதில் ஒருவர் மரண தண்டனை கொடுக்கப் படும் அளவிற்கு குற்றம் செய்யவில்லை / அல்லது குற்றமே செய்யவில்லை என்கிற ரீதியில் - நிரபராதிகளுக்கு தண்டனை கொடுப்பதே தவறு - அதிலும் பொய் சாட்சியங்களை வைத்து தண்டனை தருவது தவறு / அந்த விதத்தில் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று சொல்லுபவர்களும் உண்டு. இந்த இரண்டு வகைக் காரர்களும் மரண தண்டனை நிறுத்தி வைக்கப் பட்டது சரி என்று சொல்லும் போது இரண்டையும் ஒன்றாக நினைப்பது, அவர்களின் குற்றமே தவிர நமதல்ல.

ஜெயின் கமிஷன் அறிக்கையும், அதைத்தொடர்ந்து அமைக்கப் பட்ட கமிஷங்களும் இன்னும் முடிவே தெரிவிக்காத நிலையில், ராஜீவ் காந்தியின் கொலையில் பலருக்குத் தொடர்பு உண்டு என்று சொல்லப்பட்டதை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் போது - இது ஒரு சோடிக்கப்பட்ட வழக்கு என்று இத்தனை ஆண்டுகளாகக் கத்திக் கொண்டிருந்தவர்கள் - தாமதமானதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி அளித்த தீர்ப்பை வரவேற்கிறார்கள்.

இதில் இமொஷனால் பக்கிகள் என்று ஒட்டு மொத்தமாக தமிழர்களைக் குற்றம் சாட்டும், இந்திக்காரர்களையும் அவர்களுக்கு வக்காளத்து வாங்கும், தமிழ் நாட்டுக்காரர்களையும் என்னவென்று சொல்லுவது. ஆனால், தொலைக் காட்சி அவர்கள் கையில் இருக்கிறது.  அதற்கு ஒத்தூதுவதற்கென்று எல்லாரும் சேர்ந்து கொள்கிறார்கள். 

கண்டிக்கப் படவேண்டியது 
மீடியாக்கள் எல்லாம் சேர்ந்து சில தவறான கருத்துக்களை முன்னெடுப்பதிலேயே குறியாக இருக்கின்றன. இது மிகத்தவறான அவதூறுகளை தென்னக மக்களை நோக்கி வீசுகிற அவர்களின் அநாகரிக போக்கு கண்டிக்கப்பட வேண்டியது. தினம் தினம் தமிழர்கள் கடலில் செத்துக் கொண்டிருக்கும் போது, அதைக் கண்டுகொள்ளாத மீடியா, ஒரு மோசடி தேவயானிக்காக வரிந்து கட்டிய மீடியா, அணுஉலைகளின் ஆபத்திற்கெதிராக வருடக் கணக்கில் போராடுபவர்களை கண்டு கொள்ளாத மீடியா - இப்போது விவாதங்களையும், நேர்காணல்களையும் சர்வேக்களையும் எடுத்து கொண்டிருக்கிறது. இது வெறும் தி.ஆர்.பி ரேட்டிங்கோடு முடிந்து போகிற ஒரு விஷயமல்ல. அதைத்தாண்டி, தமிழர்களை, தீவிரவாதிகளாக, ஒழுக்கமற்றவர்களாக, சித்தரிக்கும் போக்கு.

யார் பண்பாட்டோடு உடையவர்கள், யார், கலாச்சாரமற்றவர்கள்  என்பதை அறிந்து கொள்ள, ஒரு முறை சென்னையிலிருந்து டில்லிக்கு ரயிலில் சென்று வந்தால் புரியும். ரயில்வேத்துறை லாபம் ஈட்டுவது தென்னகத்தில், ஆனால், விரிவாக்கப் பணிகள், எல்லாம் வடக்கே.
அதேபோல ஆபத்து தரும் அணு உலைகள் தென் தமிழகத்தில் - தினம் செத்து செத்து பிழைக்கும் மீனவர்கள் தமிழகத்தில் - இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், இந்தியாவைத் தூக்கி நிறுத்துவது வடவர்கள் போலவும், அவர்கள் தான் சாத்வீக வாதிகள் போலவும் சித்தரிப்பதும், தென்னகத்து மக்களை எமோஷனல் பாக்கிகள் என்பதும் வேதனை தரும் நிகழ்வு.

அடுத்த குழப்பம் 
இது மரணதண்டனை ரத்து என்கிற விதத்தோடு முடிந்திருந்தால் கூட ஒன்றும் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், விடுதலை என்பதுதான் பிரச்சனை என்று சொல்லலாம்.

2008 - டில் கருணாநிதி அவர்களை விடுவிக்க இருக்கிறார் இது பயங்கரவாதம் என்று கடும் கண்டனம் தெரிவித்த அம்மையார் மூன்று நாட்களுக்குள், பதில் வராவிட்டால் விடுதலை செய்வோம் என்று சொல்லியது கேலிக் கூறியதுதான். அவருக்கு இந்த விளைவுகள் எல்லாம் தெரியாமல் இல்லை. சட்ட நுணுக்கங்கள் அறிந்திராமல் இருப்பதற்கும் வாய்ப்புகள் இல்லை. 

முன்னாள் முதல்வர் கருணாநிதி இவருக்குப் பயந்துதான் கருணை மனுக்களில் கூட இந்த மூவர் பெயரையும் சேர்க்காமல் இருந்தார். இன்று இதுவே கருணாநிதிக்கு  எமனாக வந்து நிற்கிறது. மிகச் சிறப்பாக தீர்மானம் நிறைவேற்றும் நமது சட்டசபை இந்தத் தீர்மானத்தின் வழியாக இந்த விவாதங்கள் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது.

விஷயம் என்னவெனில், இந்த மூன்று விஷயங்களையும் போட்டு குழப்புவதுதான். இதில் மறந்து போனதெல்லாம் - ஏன் இத்தனை வருடங்களாக என் ராஜீவ் கொலை வழக்கை முடிக்காமல் இருந்தார்கள், ஜெயின் கமிசன் அதைத்தொடர்ந்த கமிஷன்கள் எவற்றையும் ஏன்  சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. 

இன்னும் ஒன்றையும் புரிந்து கொள்ள வேண்டும் - நீதி மன்றங்களில் சாட்சியங்கள், வாதம் இவைகள் இரண்டும்தான் முக்கியம். உண்மையைப் பற்றியெல்லாம் யார் கவலைப் பட்டார்கள். நீதி மன்றங்களில் மட்டுமல்ல மீடியாக்களும்தான்...

நீதிமன்ற அவமதிப்பு அமைச்சர் செய்யலாமா?

நம் புதுச்சேரி ? அமைச்சர் வழக்கம் போல இந்தத் தீர்ப்பை நிதி மன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆதாரங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். யாராவது அவர் மீது வழக்கு தொடுத்தால் நலமாயிருக்கும்.

அமேரிக்கா செய்யுமா?

ஆங்கில சானல்களில் ஆ ஊன்னா அமேரிக்கா -- ஆப்ரிக்கா ன்னு பேசுறாங்க... ஜான் எப் கென்னெடியைக் கொன்றவருக்கு நாப்பது ஆண்டுகளுக்குப் பின்பும் பரோல் கிடையாது... இது தெரியுமா - ன்னு கேக்குறாங்க ---

எல்லாத்துக்கும் அமெரிக்காவைப் பாத்தா நல்ல இருக்கும். அங்கேயும் இதே பிரச்சனைதான். இது யார் பிளான் பண்ணினான்னு தெரியாம இருக்கவே பல கொலைகள் நடந்ததுங்கிறது வேற விஷயம். அங்கே ஊழல் அரசியல்வாதிகள் இங்க உள்ளது போல ஊர்க்கனக்குல இல்லையே.. அதைப் பத்தி பேசுவோமா? அங்க நீதித்துறை செயல்படும் விதம் சரின்னா -- தேவயாணி கேசுல என்னத்துக்கு பதறியடிச்சு இது தப்புன்னு கொட்டு போட்டுகிட்டு பேசுனீங்க.... ஒரு கேசுல அவங்க நல்லவங்க இன்னொரு கேசுல கேட்டவுங்களா...
அமெரிக்காவையும் ஆப்ப்ரிக்காவையும் விட்டுட்டு டெல்லிக்கு வாங்க. பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்த பிறகுதான் வரிசையா பாலியல் வன்முறைகள் --- தண்டனை மட்டுமே குடுக்குறதை விட்டுட்டு, என்ன செய்தால் குற்றங்கள் குறையும்னு மைக் தூக்கிப் பேசுங்க...

உண்மைக்குப் புறம்பாய் பேசலாமா?

காங்கிரசின் முக்கியத் தலைவரும், ராஜீவ் காந்தியின் மகனுமாகிய ராகுல் காந்தி, நாட்டின் பிரதம மந்திரியைக் கொன்றவர்களுக்கே  --- என்ற கேள்வியின் மூலம், மக்களை எமோஷனல் வழியில் தன்னைக் நோக்கித் திருப்பப் பார்க்கிறார். அப்போது ஆட்சியில் இல்லாத அவர் தேர்தலை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்ய வந்தார் என்றும், உண்மையைச் சொல்லப் போனால், அவரது கொலைக்குப் பிறகே காங்கிரஸ் நிறைய இடங்களைப் பிடித்தது என்பதும் வரலாறு. தந்தையை இழந்த ஒருவருக்கு அந்த இழப்பு ஈடு செய்ய முடியாதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒரு கட்சியின் அடுத்த பிரதமர் என்று பேசப் படுகிறவர், கொஞ்சம் உண்மையாகவும் இருப்பது நல்லது. ஒருவர் பிரதமராக இருக்கும் போது கொள்ளப் பட்டால், அவர் சொன்னது உண்மையாக இருக்கும். இல்லையெனில், 'எமோஷனல்' என்று தான் சொல்லவேண்டும்.

அவர்கள் எமொஷனலாக இருக்கலாம் அவர்கள் அரசியல்வாதிகள்.
அவர்கள் எமோஷனலாக இறக்கலாம், ஏனெனில் அவர்கள் இந்தி மீடியா...
அவர்கள் இருக்கலாம், ஏனெனில் ...
ஆனால் தமிழர்கள் இருக்காதீர்கள்!0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்