9.11.16

ஊழல் ஒழிந்தது

 
ஏற்கனவே வாக்களித்தது போல மத்திய அரசு சுவிஸ் வங்கியிலிருந்து அனைத்து கறுப்புப் பணத்தையும் மீட்டு வந்தது நமக்குத் தெரியும். அந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த அத்துனை நபர்களின் பெயரை எல்லாம் வெளியிட்டு மிகப் பெரிய புரட்சி செய்ததை நாம் அனைவரும் அறிந்ததே. அதற்கே மிகப் பெரிய பாராட்டு விழா வைக்கலாம் என்று அனைத்துப் பத்திரிக்கைகளும் எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மத்திய அரசு ஊழலையும், கறுப்புப் பணத்தையும் ஒழிக்க தனது அடுத்த அஸ்திரத்தைக் கையில் எடுத்திருக்கிறது.

இதுபோல ஒரு அறிவிப்பு வந்தவுடன் நேற்று எல்லா பணம் வழங்கும் தானியங்கி எந்திரங்கள் முன்பு எந்திரத்தனமாய் மக்கள். எப்படியாவது பணத்தை நூறு ரூபாய் நோட்டுக்களாக மாற்றி விட முடியாதா என்கிற ஏக்கம் தெரிந்தது.

அறைகளில் ஆயிரம் மற்றும் நூறு ரூபாய் நோட்டுக்களாக அடுக்கி வைத்திருந்தவர்கள் எல்லாரும் பீதியில் வயிறு கலங்கி ஒரே நாளில் பத்து கிலோ குறைந்து பார்பதற்கே பரிதாபமாக இருக்கிறார்கள்.

இந்த அதிரடி முயற்சிக்காக நமது சர்க்காரை பாராட்டியே ஆக வேண்டும். இனிமேல் யாரும் கணக்கில் வராத பணத்தை வைத்திருக்க முடியாது. ஒன்று பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும் அல்லது கோவிந்தா என்று திருப்பதியில் போட வேண்டும். நல்ல வருமானம் நமது சமஸ்தானத்திற்குத்தான்.

சரி – அதை விடுவோம் – இந்திய நாட்டில் எத்தனை சதவீதம் பேர் கறுப்புப் பணம் வைத்திருப்பான் – இரண்டு மூன்று சதவீதம் இருக்குமா? அட பத்து சதவீதம் வைத்துக் கொள்ளுங்கள். அவங்களை நமது சர்க்காரால் கண்டு பிடிக்க முடியாதா? அது எதுக்கு இந்த அதிரடி நடவடிக்கை. குப்பனும் சுப்பனுமா சுவிஸ் வங்கியில கணக்கு வைத்திருந்தான். அந்த பெயர்களை வெளியிட நமக்குத் துணிச்சல் இல்லை இதுல இது வேற?

இன்னும் ஐநூறு ரூபாய் அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டுகளையே பாக்காத மக்கள்தான் இன்னும் எங்கள் அருகில் இருக்கிறார்கள். இனிமேல் அதை ஒன்று சாலை ஓரங்களில் உள்ள குப்பைத்தொட்டிகளில் பார்க்கலாம். அதற்கடுத்து மொத்த வருமானமே ஐந்நூறு ஆயிரம் என்று உள்ள நபர்கள்தான் அந்த நோட்டுகளை மாற்றுவதற்கு கஷ்டப் படனும். பாவம். அதுதான் நமது பிரதமர் மன்னிப்பு கேட்டு விட்டாரே. அப்புறம் என்ன?

வெளிநாட்டில் பங்களா வைத்திருப்பவர்கள் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் இல்லையா? அவர்கள் இன்னமும் ஆயிரம் ஐந்நூறு ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்களா? அல்லது பவுண்ட்ஸ் / யூரோ வைத்திருப்பவர்களா?
வச்சிருக்கவன் எல்லாம் நல்லாத்தான் இருக்கான்.

இனிமே யாரு என்ன பண்ண முடியும்? இந்த நோட்டுக்களை கொஞ்சம் சாதாரண மக்கள் மத்தியில் காண்பிக்க அரசே எக்ஸ்ஷிபிஷனுக்கு ஏற்பாடு செய்யலாம். சாதாரண மக்கள்தான் பாவம். நூறு ரூபாயை வைத்து வாழ்க்கை நடத்தும் மக்கள் பாவம். காய்கறிகளை விற்கும் மக்கள் வியாபாரம் செய்ய முடியாது. தள்ளு வண்டி வியாபாரி வியாபாரம் செய்ய முடியாது. கெட்டுப் போகாத பொருள் வைத்திருப்பவர்கள் பரவாயில்லை. அழுகும் பொருட்களை வைத்திருப்பவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

இப்ப ஐந்நூறு ரூபா குடுத்தாக் கூட  ஒரு ஐம்பது ரூபா கிடைக்க மாட்டேங்குது. சின்னப் பிள்ளைகளைப் போல நோட்டுக்கு ஆசைப் படாம சில்லரைகளுக்கு ஆசைப்பட பழகிக்க வேண்டியதுதான். ஏன்னா பெருசுதான் பதுக்க வழி வகுக்குமாம்?

சரி என் சந்தேகம்
·         பெரிய நோட்டுதான் பதுக்களுக்கு வழிவகுக்கும்னா அப்புறம் எதுக்கு திரும்பவும் ஐந்நூறு ரூபா நோட்டு – புதுசா இரண்டாயிரம் ரூபாய் நோட்டு? ஈசியா பதுக்கவா? இரண்டாயிரம் ரூபாயையும் ஐந்நூறு ரூபாயையும் நாளை வெளியிடுவதாகச் செய்தி வருகிறதே அவைகளைப் பற்றிய விவரங்களும் செய்தித்தாள்களில் வெளியிடப் பட்டிருக்கின்றவே. ஏற்கனவே அடித்து வைத்ததால் வெளியிடுகிறீர்களா அல்லது வேறு யாருக்கும் உதவ இந்த ஏற்பாடா?

·         இன்று எல்லா நாளிதழ்களிலும் இந்தப் புரட்சி ஏழை மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் உதவி செய்யும் என்று அரசு விளம்பரம் செய்திருக்கிறது. அது எப்படி உதவும் என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.·         ஒரு மாதத்திற்கு முன்பே ஒரு பொருளியல் நிபுணரிடம் ஆயிரம் கோடிக்கு ஆயரம் ரூபாய் நோட்டு இருக்கிறது அதை மாற்றிக் கொடுத்தால் இருபத்தி ஐந்து சதவீதம் வரை கமிஷன் என்று ஒரு தொழிலதிபர் கேட்டதாகச் செய்தி வந்திருக்கிறது. அவருக்கு மட்டும் தெரிந்ததா அல்லது எல்லா தொழிலதிபர்களுக்கும் தெரிந்ததா?

 

3 comments:

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

Nobody expect this move. The new currency Rs:2000/- picture is also publish in whatsapp. But,no news about money devalue. The dinakaran always write against modi.

Yacob சொன்னது…[பதிலளி]

Super

Yacob சொன்னது…[பதிலளி]

Super

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்