5.10.16

வெற்றிலைப் பாட்டியும் நானும்

எங்க ஊர்ல ஒரு பெரிய பங்களா. ஆனா அந்தப் பங்களாவுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி ஒரு பாட்டி அங்க இருக்கும். அதுல தங்கி இருக்குற ஆள் பயங்கரமான ஆளு. பாக்குறதுக்கு பயமாவெல்லாம் இருக்காது. அட்டகத்தி மாதிரிதான். ஆனா அவரைப் பத்தி அப்படி ஒரு பில்ட் அப். பல பேரை ஏமாத்திதான் அந்த இடத்தை வாங்கினதாவும். பாட்டிய நம்பி கடன் கொடுத்தவனை எல்லாம் ‘போட்டுட்டு’ அந்த இடத்தையே வாங்கினதாவும் பேச்சு இருக்கும். பாட்டியும் பேசியே கடன் வாங்கிரும். அது பேசுனா அப்புடிப் பேசும். நம்புற மாதிரி வேற பேசுமா. உங்ககிட்ட நீங்க ரெண்டு நிமிஷம் பேச விட்டா நீங்களே கடன் குடுப்பீங்க.

அந்தப் பங்களாவுக்கு காம்பவுண்டு எல்லாம் கிடையாது. இப்ப அந்தப் பாட்டிக்கு வயசு ஆயிடுச்சு. அது நடக்கிறதே அபூர்வம். அது யாருகிட்டயும் பேசுறது எல்லாம் இல்லை. ஜிகிர் தண்டா பாட்டி மாதிரி. அது பாட்டுக்கு வெளில வந்து எப்போதும் உக்காந்து வெற்றிலை இடிச்சுக்கிட்டே இருக்கும். அப்புறம் வெற்றிலையை குதப்பித் துப்பிக்கொண்டே இருக்கும். அதுக்கு அதைத் தவிர வேற வேலையே இல்லை. அந்த இடமே இரத்தக்காடாய் கிடக்கும். அதுவும் அது பையனும்  பண்ணுன பாவத்தின் அடையாளமா அது தெரியும்.

ஆனாலும் அந்தப் பாட்டியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். யாரும் அவ்வளவு சீக்கிரம் அந்தப் பாட்டிக்குப் பக்கத்தில போட முடியாது. பாட்டி மேல உள்ள பயம் எல்லாம் இல்லை அவங்க பையனுக்கு பயந்துகிட்டு எவனும் அது பக்கத்துலேயே போறதில்லை. நான் மட்டும் ஸ்கூலுக்குப் போறப்ப தைரியமா கொஞ்சம் ஓரத்தில நின்னு அந்தப் பாட்டியைப் பார்த்து சிரிப்பேன். உள்ளேருந்து ஏதாவது சத்தம் வந்தா ஒரே ஓட்டம். அப்புறம் பக்கத்துல போவேன். அவங்க பயன் வந்தா ஓடுவேன்.

பாட்டிதான், ‘பயப்ப்படுமா நில்லுடா’ என்னைய மீறி அவன் ஒன்னும் பன்ன மாட்டான்னு சொல்லும். பாட்டிக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கும் அப்படின்னு நான் நினைச்சேன். ஏதோ பெத்த கடமைக்கும், அங்கங்க கடன் வாங்கி அவருக்கு பணம் சேர்த்துக் கொடுத்த கடமைக்காக அந்தப் பாட்டிக்கு கஞ்சி ஊத்துறார்னு லேட்டாதான் தெரிஞ்சிச்சு. அதனால என்ன? பாட்டியே சொல்லிருச்சுன்னு நானும் தைரியமா நின்னேன். நிப்பேன். அவரும் முறைச்சாரு. ஒடுறான்னாரு. இரட்டைக்கரைக் காரரு பையன்தானே. நீயெல்லாம் இங்க வரக் கூடாது ஓடுறான்னாரு. அப்புறம் பழகிருச்சு. அப்புறம் ஒன்னும் சொல்றது இல்ல.

ஸ்கூல் இல்லையின்னா அப்புறம் அங்கதான் இருந்தேன். நாளாக நாளாக நமக்கு ஊருக்குள்ளே ஒரே மரியாதை. எவனும் போகத் துணியாத இடத்துக்கு நான் போயிட்டேன். அதுனால அங்க ஏதாவது தப்புக் காரியம் பண்ண ஐயாவைப் பாக்கனும்னா நம்மகிட்டதான் வந்து கேப்பாங்க.

நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு. திடீர்னு ஒரு நாள் காலையில போறேன் நைட்டோட நைட்டா காம்பவுண்டு போட்டாங்க. அங்கங்க ஆளுக துப்பாக்கியோட நிக்காணுக. நான் போறேன். விட மாட்டேங்கிறாங்க. எட்டி அந்தப் பாட்டி இருக்குற இடத்தைப் பாக்கேன். அது எம்ப்டியா இருக்கு. ஒன்னும் புரியல. என்ன ஆச்சுன்னு தெரியலை. கேட்டா பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க.

பத்து நாளாச்சு. ஒண்ணுமே தெரியலை. துப்பாக்கிக்காரன் அப்படியே இருக்கான்க. ஊரெல்லாம் ஒரே பேச்சு – கடன் குடுத்த யாரோ வந்து பாட்டிய வெட்டிப் புளந்துட்டான் பேச்சு மூச்சு இல்லாமக் கிடக்குங்கிறான். இன்னொருத்தன் பாட்டியே இருட்டுல வெத்தலைக்குப் பதில ஏதோ பூச்சிய முழுங்கி அது தொண்டையில அடைச்சுக்கிச்சுங்கிறான். நல்லா இருக்கப்பவே நீங்களல்லாம் பங்களாப் பக்கம் வர மாட்டிங்களே உங்களுக்கு இதெல்லாம் யாருடா சொன்னான்னு கேட்கத் தோனுச்சு. உள்ளே போனப்பல்லாம் எத்தனை பேர கெத்தாப் பாத்தேன். இன்னைக்கு அவன் எல்லாம் சிரிக்கான். ஆனா இது இல்லைன்னு சொல்ல எனக்கு ஒன்னும் தெரியலையே. கைவசம் வேற ஆதாரம் இல்லை. எனக்கு வேற ஒரே அவமானமாப் போச்சு.

என் பிரண்டு ஒருத்தனைப் பாக்கப் போனேன் – என்னாடா, நீதான் பாட்டிக்கு ஏதோ குடுத்து அது படுத்த படுக்கையாக் கிடக்காம்னு குண்டைத் தூக்கிப் போட்டான். ஆகா ! இது நல்லதுக்கு இல்லை. என்ன ஆனாலும் இன்னைக்கு எப்படியாவது போயே ஆகணும்னு பங்களா பக்கம் வந்து நின்னேன்.

எப்படியாவது உள்ள போயே ஆகணும்னு விடாப் பிடியாய் கேட்டுலே கிடந்தேன். இருந்தாலும் விடலை. எப்போதும் வெளியே விருட் விருட்டுன்னு போற பாட்டி பையனை வேற காணோம். அழுது கெஞ்சிக் கூத்தாடி கேட்டுகிட்ட போனப்ப பாட்டி பயன் வந்தான். சாப்பிடக் கூப்பிட அந்த நேரம் பாத்து என் ஆத்தா வர, அதைப் பாத்தோன, பாட்டி பையன் டே உள்ள போடா – ன்னார். எங்க ஆத்தா என்னை வஞ்சுட்டுப் போச்சு.

வெளில வேடிக்கை பாத்தவன எல்லாம், கெத்தாப் பாத்துட்டு நான் உள்ளே போனேன். பாட்டி எச்சி துப்புற எடத்துல ரத்தம் காயாம இருக்க மாதிரியே தெரிஞ்சுச்சு. பங்களாவுக்குள்ள போனேன். உள்ள விட்டுட்டு வெளில கேட்டப் பூட்டிட்டான் அந்த மீசைக் காரன்.

உள்ள போய் அந்தப் பாட்டியைப் பாத்த எனக்கு ஒன்னும் புரியலை. மயக்கம் போட்டு விழுந்தேன். யாரும் உதவிக்கு வரலை.

நானும் கதவைத் தட்டிகிட்டே இருக்கேன். மீசைக் காரன் தொறக்குற வழியைக் காணோம். பாட்டியைப் பாத்துட்டு அது என்ன நிலைமையில இருக்குன்னு வெளியில சொல்லனும்னு தோணுது. என்னைய ஏன் அடிச்சு வச்சாங்க? நான் என்ன பண்ணினேன்? எதுவும் புரியலை. இன்னியோட மூணாவது நாள் நான் உள்ள வந்து. நிச்சயம் என் ஆத்தா வந்துட்டுப் போயிருக்கும். இல்லை அங்கேயே கிடக்கும். இப்பப் பாட்டியை நான்தான் நல்ல்லாப்ப் பாத்துகிறேன்னு பேசுவாங்க. என் ஆத்தாதான் பாவம். உள்ளே என்ன நடக்குதுன்னே தெரியாம கிடக்கும்.

கதவைத் தட்டித் தட்டி கை வீங்கி,. சாகப் போகிறேன் என்கிற நினைவோடு நான் அப்படியே மயங்கி விழுந்திருக்கிறேன்.. ஒன்று மட்டும் புரிந்தது அந்தப் பாட்டியின் பையன் அட்டகத்தியெல்லாம் இல்லை.

1 comments:

bernard சொன்னது…[பதிலளி]

Everything is mysterious in Tamil Nadu Government. Shame on the people who stand helpless and clueless after electing this mysterious government. What can we expect from our people who get bribe for exercising their vote?

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்