5.2.15

இசை - இருக்கா இல்லையா?

  • அகில உலக சூர்யா (எஸ். ஜே) ரசிகர் மன்றத்தின் அறிவிக்கப்படாத தலைவரான என் நண்பருடன்தான் இசை என்ற படத்தைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அப்போதுதான் சில பல காமேண்டுகளுடன் படத்தைத் தொய்வில்லாமல் பார்க்க முடியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் மற்றொரு நண்பர் எங்கோ திரை விமர்சனம் படித்து கட்டாயம் இன்றே போயாக வேண்டும் என்று ம்சைப் படுத்தவே வேறு வழியில்லாமல் இரவு இரண்டாம் காட்சி என்றாலும் நன் அவரது வேண்டுகோளுக்கு – இசைந்தேன். ஆனால் ஒரு நண்பர் வராத குறையை படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலர் சேர்ந்து போக்கினார்கள். அவ்வப்போது பல காமேண்டுகள், கைதட்டல்கள் என்று படம் இசை கட்டியது.

  • இந்தத் தருணத்தில் தமிழின் பெருமையைப் பற்றியும் பேசித்தான் ஆகவேண்டும். இசை என்ற சொல் இயை என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்ததாம். அவன் அவளோடு இசைந்து வாழ்ந்தான் என்றால் பொருந்தி  வாழ்ந்தான் என்பது பொருள். அதாவது பாவும், பண்ணும் இயைந்து வருவதால் அது இசை எனப் பட்டது. அது இசைக்கப் பட்டது என்று சொல்லும் போது ஒலிக்கப்பட்டது என்கிற பொருள் தருகிறது. இசைகேடாக ஒரு செயலைச் செய்வது என்பது உரிய முறையில் இல்லாமல் என்று பொருள் தருகிறது. ஏழிசையின் பெயர்களும் அவைகளோடு தொடர்பு படுத்தும் விலங்குகளும் பின்வருமாறு: குரல் (மயிலின் ஒலி), துத்தம் (மாட்டின் ஒலி), கைக்கிளை (ஆட்டின் ஒலி), உழை (கிரவுஞ்சப் பறவையின் ஒலி), இளி (பஞ்சமம்), விளரி (குதிரையின் ஒலி), மற்றும் தாரம் (யானையின் ஒலி).  ஆதாரம்  http://www.tamilvu.org/courses/diploma/d061/d0613/html/d0613111.htm

  •  இதைப் பற்றியெல்லாம் இந்தப் படம் பேசவில்லை. நேற்று பாவாணரின் வேர்ச்சொல் ஆராய்ச்சி பற்றி வேறொர் இடத்தில் கேட்டதனால் இங்கே இதைப் பற்றி எழுதினேன், வேறொன்றுமில்லை. பாவாணர் சொல்லு என்ற சொல்லுக்கு தமிழில் இணையான சொற்கள் ஏறக்குறைய இருபத்தி எட்டு உண்டு என்கிறார். அளை, உரை, எண், ஓது, கிள, கூறு, சாற்று, செப்பு, சொல், நவில், பகர், பேசு, மொழி, விளம்பு என்று வார்த்தைகள் உண்டு. எண்ணினாள், உரைத்தாள், சொன்னாள், மொழிந்தாள், சாற்றினாள், நன்றி நவிலல், பகர்ந்தாள் என்று சொல்லிப் பார்த்தால் நமக்கே அந்த உண்மை புரியும். இதோடு கூட இசை மற்றும் இயம்பு என்பதும் சொல்லு என்ற அந்தப் பொருள் தரும் என்று பாவாணர் கூறுகிறார்.

  • இந்தப் படத்தின் இசைக்கு வருவோம். இசை படத்தின் சில பாடல்கள் இசைக்கப்பட்டன இன்னும் சில பாடல்கள் சொல்லப்பட்டன என்றுதான் எனக்குத் தோன்றியது. இது இசைக்கடல் பற்றிய படமாக இல்லாதிருந்தால் சூர்யா இசைவாணராக தேர்ச்சி பெற்றார் என்று சொல்லலாம். ஆனால் இது இசை பற்றியது என்பதனால் இது இசைக்குளம் என்று கூட சொல்ல என் மனம் ஒப்பவில்லை. சில இடங்களில் இசையாய் இருந்தது சில இடங்களில் சொல்லாய் இருந்தது. அவரது பாடலைக் காட்டிலும், அவரது காட்சிகள் இசை மழை பொழிந்தன. இசையின் ஒலியை முதலில் அவன் ஒவ்வொன்றிலும் காண்பதாகக்  காட்டுகிற காட்சியும், மனதை வருடும் இசையே. காட்டினுள் வரும் அந்த வீடும் தொடக்க இசையும் ஒளிப்பதிவும் அருமை. இந்தப் படத்திற்கான இசையை வேறு ஒரு இசையமைப்பாளர் இசைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • இந்தப் படத்தில் முதல் பாதியில் ஒரு முப்பது நிமிடக் கருமமும் மறு பாதியில் ஒரு பத்து நிமிடமும் வெட்டப்பட்டிருந்தால் இந்தப் படம் மிக நன்றாக ஓடும் என்று நினைத்துக் கொண்டே வந்தேன். ஆனால் சூர்யா வெரி இன்டெலிஜென்ட். ஏறக்குறைய பன்னிரண்டு நிமிடக் காட்சிகளைக் குறைத்து இன்றிலிருந்து படம் வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார். வாட் அ கோ இன்சிடேன்ஸ். (ஏற்கனவே ஏழு நிமிடங்கள் குறைக்கப்பட்டதாம்). நான் பார்த்ததே மூன்று மணிநேரம் பத்து நிமிடங்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பி பார்த்தேன். அதுவும் மூன்று மணி நேரம். ஏன் இப்படி நமது இயக்குனர்கள் மூன்று மணி நேரப் படத்திற்கு அலைகிறார்கள் என்றே தெரியவில்லை. ஹையையோ என்றிருக்க வேண்டிய படம் ஐயோ என்றிருந்தது. விக்ரமும், பி. சி. யும் இல்லையென்றால் அந்தப் படம் ஒன்றுமில்லை. அந்த பட ஹீரோயினை நிர்வாணமாகக் காட்டவில்லை. அவ்வளவே. எப்படி இப்போது இதையெல்லாம் சென்சாரில் அனுமதிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இசையில், தமிழ் சினிமா சில காலமாய் மறந்து போயிருந்த தொப்புளை நினைவு படுத்தியிருக்கிறார் எஸ். ஜே. ஆனால் இதை எதிர் பார்த்தே சூர்யா படத்திற்கு வருவார்கள் என்று நினைத்து விட்டாரோ என்னவோ. இவரின் விரல்கள் கீ போர்டில் விளையாடும் நேரத்தைக் காட்டிலும் சாவித்ரியின் உடல் பியானாவாக மாற்றியது சூர்யாவின் படைப்புத் திறன்.

  • சரி கதைக்கு வருவோம். இளமைக்கு வழி விட வேண்டிய வயதில், வயதானவர்கள் புதியவர்கள் பெரும் புகழை வலியாக மாற்றிக் கொண்டால் எந்த அளவுக்குப் போவார்கள் என்பதே கதை. அதாவது ஒரு ஜீனியசை பொறாமை வாட்டினால் என்ன ஆகும் என்பதுதான் கதை என்பதை முதலிலேயே  சொல்லிவிடுகிறார் சூர்யா. இது இளையராஜாவையும் ரகுமானையும் குறிக்கிறதா என்கிற விஷயத்தை பார்வையாளர்களுக்கு விட்டுவிட வேண்டியதுதான். எனக்கு ராஜாவையும் பிடிக்கும், ரகுமானையும் பிடிக்கும். இருபது வருட கால ஆட்சியை இளையராஜாவைத் தவிர வேறு யாருக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. சொல்லப் பட்ட செய்தி உண்மையா என்று தெரியாது. அதை இங்கே பேசுவதை விட கதைக் களன் நன்றாக இருக்கிறது என்பதைப் பதிவு செய்யலாம். இன்னும் என்ன செய்திருந்தால் இந்தப் படம் சிறப்பாக ஓடும என்பதைப் பதிவு செய்யலாம்.

  • ஏற்கனவே சொன்னதுபோல பலவற்றை வெட்டிவிட்டு இதை ஒரு இரண்டரை மணி நேர படமாக மாற்றினால் அதை நிச்சயமாக நான் ரசிப்பேன்.

  •  ஈகோ அதிகமானால் என்ன ஆகும் என்பதைப் பற்றிய கதையை சூர்யா இசைத்து, நடித்து, இயக்கியிருக்கிறார். இயக்கி மட்டும் இருந்தால் ஒரு சூப்பரான படமாக இருந்திருக்கும். வாலி, குஷிக்குப் பிறகு மிக முக்கியமான இயக்குனராக வர வேண்டியவர் நடிக்கவும் வந்து தனது திறமையை வீணடித்து விட்டதாகவே தெரிகிறது. 
  • இணைய தள பகடிகளுக்கு பத்து ஆண்டுகளாக –இருக்கு ஆனா இல்லை என்பது நிறைந்து வழிந்தது. இதுவே அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். அந்த இடத்தை இப்போது பவர் ஸ்டார் நிரப்பி இருக்கிறார். எனவே சூர்யா அவர்களே தயவு செய்து நடிப்பதை விட்டு விட்டு இயக்கம் மட்டும் செய்தால் நன்றாக இருக்கும். பல இடங்களில் உங்கள் நடிப்பு மிக அருமைதான்... ஆனால் தேவையான சில இடங்களில் அது மிஸ்ஸிங். ஏனெனில் கதை இருக்கு. இசையும் இருக்கு. நிறைய காட்சிகள் இருக்கு. இரண்டாம் பாதியில் நடிப்பும் நிறைய இருக்கு. ஆனால் ஏதோ இன்று இல்லை. அது என்னவென்று தெரியவில்லை.

  • மீண்டும் ஒரு முறை வலம் வரும் திறமை இருக்கு... இயக்குனராய் வந்தால் அது வெறும் இசைக் கடலாய் இல்லை இன்னிசைக் கடலாய் இருக்கும்..0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்