விளையாட்டாய் ஒரு மெயில் அனுப்பப் போய் அது எதிர் வினையாகிவிட்டது.
நண்பர் ஒருவருக்கு மெயில் அனுப்பியது அனைவருக்கும் தெரியட்டுமே என்று மீண்டும் இங்கே.
முன்பே பதிவு செய்யப் பட வேண்டியது தாமதமாய் வருகிறது.
வேலைப் பளு - வேறென்ன செய்வது? இனி ...
ஞானியின் இந்தவாரப் பூச்செண்டும் இந்தவாரத் திட்டும் பலரால் விரும்பிப் படிக்கிற பகுதி. விகடன் வாங்கியவுடன் அந்தப் பகுதியை வாசித்து விடும் பழக்கம் இருந்தது. ஒவ்வொரு முறையும் பல்வேறு சிக்கல்களை சந்தித்த பகுதி அது. ஞாநி பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் - அரசின் மிரட்டல்களுக்கு பத்திரிக்கைகள் பணிந்து அவர் பக்கம் பத்திரிகையில் மறுக்கப்பட 'பத்திரிகை விட்டு பத்திரிகை தாவி' - ஒற்றைக் குரலாய் அரசு இயந்திரத்தைச் சாடும் அவருக்கு என்றும் நாம் பூச் செண்டு கொடுக்கலாம்.
ஆனால் அதே சமயம் - இ.வா.திட்டு. - சங்கமம் விழாவை தமிழ் மையத்துடன் இனைந்து நடத்தும் தமிழக அரசின் சுற்றுலாத் துறைக்கு சென்று சேரும் என்று ஞானி எழுதியதனால் அவரை நாமும் திட்டுவது சரி என்றும் படுகிறது என்றும் எழுதினேன்.
நமது "திட்டை" ஆயிரமாயிரம் பேர் படித்து கோபம் கொள்ளப் போவதுமில்லை - சண்டைக்கு வரப் போவதுமில்லை. இருந்தாலும் சில கேள்விகளை எழுப்புவதுதான் எனது நோக்கம்.
- இந்த ஆண்டு மட்டும் தமிழக அரசின் சுற்றுலாத் துறை தமிழ் மையத்தோடு இனைந்து சங்கமம் நடத்துமெனில் அவரின் திட்டு சரியாகும். எப்போதும் நிகழ்கிற நிகழ்வின் தொடர்ச்சி என்கிற போது இந்தத் திட்டு சரியா?
- ரெய்டு நடந்ததால் அவர் குற்றவாளி என்ற 'முன் முடிவோடு' அவரோடு இணைந்து ஒரு விழா நடத்துவது தவறு என்று சொல்வது சரியா?
- அரசு இயந்திரங்களின் அனுமதி இன்றி எதுவும் நடக்காது. பல சமயங்களில் அவைகளின் தூண்டுதலின் பேரில் ரெய்டு நடத்துவதும், அதற்குப் பிறகு அமைதி காப்பதும், என்கிற அவ நிலையில் இருக்கும் இந்த அமைப்புகளுக்கும் அரசிற்கும் இந்த வாரத் திட்டு பொருந்தும் என்று தோன்றுகிறது. மைய அரசின் அனுமதியின்றி ஊழல் ஒழிக்கப் படவேண்டும் என்கிற நீதியின் அடிப்படையில் மட்டும் நமது அரசு அதிகாரங்கள் பணி புரியும் சுதந்திரத்தோடும், அர்ப்பணத்தோடும் எப்போதைக்கு வருகிறதோ .... அது இப்போதைக்கு இல்லை என்பது ஞாநிக்கு மிக நன்றாகத் தெரியும். தனிப்பட்ட விதத்திலே அந்தக் கொடுமைகளுக்கு [ரெய்டு இல்லை / அனால் மிரட்டல்கள், இத்யாதிகள்] ஆளானவர் என்கிற விதத்தில் இதை அவர் அறிவார்.
- குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் தான் 'தான் எப்போதும் செய்யும் செயலைச் செய்ய வேண்டுமென்றால், இந்திய, தமிழக அரசியலில், ஊழலற்ற அமைச்சகங்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், குற்றம் சாட்டப்படாதவர்கள், எத்தனை உண்டு? அவர்கள் என்னதான் செய்ய முடியும்? எதுவும் அசையாது -
- அரசின் பணம் ஒரு தனி நிறுவனத்தோடு இனைந்து நடத்தப்படும் ஒரு நிகழ்விற்கு வழங்கப் பட வேண்டுமா என்பது கேட்கப் படலாம். ஆனால் இத்தகைய கேள்விகள் ஏற்கனவே கேட்கப் பட்டுவிட்டன. தமிழக பண்பாட்டுத் துறையில் - தமிழ் மையத்தோடு இனைந்து பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப் படும் சங்கமம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உண்டு என்றாலும், அதில் சில மாறுபட்ட கருத்துக்கள் உண்டு என்றாலும் - வருடா வருடம் நடந்து கொண்டிருக்கிற ஒரு நிகழ்விற்கு - இந்தவாரத் திட்டு என்பது குறித்தே நான் எழுதினேன் [என்று நினைக்கிறேன்].
- எப்படி இருப்பினும் அரசுக்கு எதிராய் தொடர் குரலாய் - ஒற்றைக் குரலாய் இருக்கும் ஞானிக்கே இந்தவாரப் பூச்செண்டும். ஆனாலும் நன்றாய் எழுதும் ஞானி தொடர்ந்து தேவையற்ற முன்முடிவுகளோடு எழுதுவதைத் தவிர்ப்பது நல்லது.
0 comments:
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்