12.12.13

நானும் என் (கை) எழுத்தும்


நானும் என் (கை) எழுத்தும் 
- அ. பிரபாகரன் 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
 வழக்கம் போல் இந்த முறையும் சங்கல்பம் செய்து கொண்டேன். இனிமேல் வாரம் ஒருமுறை எதையாவது எழுதுவது என்று. சரி. இந்த முறை நானும் என் எழுத்தும் என்று எழுதிப் பார்க்கலாமே என்று நினைத்தேன். இந்தத் தலைப்பில் எழுதுவதற்கு நான் என்ன சுஜாதாவா அல்லது நாஞ்சில் நாடனா என்று நீங்கள் நினைக்கக் கூடும். 
அவர்கள் மட்டும்தான் எழுத வேண்டுமா? தன்னை எழுத்தாளனாக நினைக்கும் ஒவ்வொருவனுக்கும் எழுத உரிமையிருக்கிறது.
எழுதுகிற ஒவ்வொருவனுமே தன்னை எழுத்தானாக நினைத்துக்கொண்டுதான் எழுதுகிறான். மற்றவர்களையும் அப்படி நினைக்க வைப்பதில்தான் அவன் வெற்றி இருக்கிறது. 

வாழ்நாள் முழுவதும் முயற்சித்தாலும் என்னால் பிறரை அப்படி நினைக்க வைக்க முடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் நானும் என் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை. சரி! அது போகட்டும். 

நானும் என் எழுத்தும் என்ற தலைப்பின் தொடக்கம் 1975 ம் வருடம் ஜூன் மாதம் மறவமங்கலத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்குகிறது. எல்லாக் கேள்விக்கும் டாண் டாண் என்று பதில் சொல்லி வகுப்பில் முதல் மாணவனாக வரும் எனக்கு கையெழுத்து கேவலமாக இருக்கிறது என்பதை சரஸ்வதி டீச்சர் கண்டுபிடித்துச் சொன்னார். பிறகு வந்த வகுப்புகளில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்களால் என் கையெழுத்து பிரதானமாக விவாதிக்கப்படும். மூன்றாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வில் நான் முதன் முறையாகப் பென்சில் வைத்துப் பேப்பரில் தேர்வு எழுதியபோது, ராஜசேகர வாத்தியார் என் வினாத்தாளை மட்டும் எல்லா மாணவர்களுக்கும் முன்பாகத் தூக்கிக் காட்டி, "இங்க பாருங்கடா, கொமட்டிக்கிட்டு வருது", என்று கேவலப் படுத்தியது நினைவுக்கு வருகிறது. 

என் தந்தைக்கு மாற்றம் கிடைத்து நான் வேறொரு கிறிஸ்தவப் பள்ளியில் சேர்ந்தபோது, ஐந்தாம் வகுப்பில் எனக்கு ஆசிரியையாயிருந்த மிக்கேலம்மா என்னும் கன்னியாஸ்திரி 'சுத்தமாக எழுது' என்று புறங்கை மொழியிலேயே அடிப்பார். ஆனால் எத்தகு தண்டனைகளையும் என் கையெழுத்து ஏற்றுக்கொண்டதில்லை.

என் கையெழுத்து என் பழக்க வழக்கங்களைப் போலவே எப்போதும் திருந்த மாட்டேன் என்றது. என் மாணவப் பருவத்திலிருந்து என் கையெழுத்து என் ஆளுமைக்கு விடப்பட்ட சவாலாகவும், என் குறைபாடுகளின் பிரதிநிதியாகவுமே தென்படுகிறது.
மானுடத்தின் மறுபுறம் குறைபாடுகள்தானே. அறிவியலல்லாத மானுடம் சார்ந்த படிப்பு படிக்கிற ஒருவனுக்கு தேர்வுகளில் கையெழுத்து எவ்வளவு முக்கியம் என்பதை நன்றாகப் படித்தும் தொலைதூரக் கல்வித்தேர்வுகளில் தோல்வியடைந்த ஒருவனால்தான் புரிந்துகொள்ள முடியும்.

பள்ளிப் படிப்பு முடிந்த காலத்தில் காந்தியின் சுயசரிதையை வாசிக்க நேர்ந்து, காந்தியின் எழுத்தும் அசிங்கமாகத்தான் இருக்கும் என்று படித்தபோது, 'பரவாயில்லை, நாம் காந்தியைப் பின்பற்றுவதற்கு இது ஒன்றாவது கிடைத்ததே' என்று பெருமைப் பட்டுக்கொண்டேன். இப்பொழுதும் இந்தக் கையெழுத்தொடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

கணினி வந்து என்னைப்போன்றவர்களை காந்தியின் சீடர்களாக வாழ்வதிலிருந்து காப்பாற்றியிருக்கிறது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அவசரத்திற்கு யாரிடமும் எழுதிக் கொடுத்து தட்டச்சு செய்யுமாறு கோரமுடியாது. நானும் என் எழுத்தும் என்று ஆரம்பித்து கடைசியில் கையெழுத்தைப் பற்றியதாக இந்தக் கட்டுரை நீள்கிறது. 

உண்மையில் நான் சொல்ல வந்தது என் எழுத்தைப் பற்றி. படைப்பு அனுபவம் (?!!!) பற்றி. அது என்னவோ தெரியவில்லை கதைகளும் கற்பனைகளும் எப்போதும் என்னை ஈர்த்து வந்திருக்கின்றன. வாராந்திரப் பத்திரிகைகளுக்கு அடிமையாகிப் போன ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்ததும், சிறிய அரசு நூலகமுள்ள கிராமத்தில் பிறந்ததும், கதைகளுக்கும் கற்பனைகளுக்கு அடிமையாகிப் போகும் வாய்ப்பைத் தந்தது. என்னைப் புத்தகங்கள் ஈர்த்திருக்கின்றன. சிறுவயதில் நானும் சிலவற்றை எழுதிப் பார்த்திருக்கின்றேன். 

எதையாவது எழுதிப் பார்த்து என்னை வருங்கால தமிழகத்தின் மிகப் பெரிய எழுத்தாளனாக வருவேன் என்று நினைக்கா விட்டாலும், நாமும் எழுதலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தேன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து முயற்சித்து நீங்களெல்லாம் கேட்டறியாத சில பத்திரிகைகளில் என் சில படைப்புகள் வந்திருக்கின்றன. இவற்றில் சில அரசியல் கட்டுரைகள் கூட அடக்கம். அ. தாஸ், அ. பிரபாகரன் என்று சில பெயர்களில் எழுதியிருக்கிறேன். கணையாழியில் கூட ஓரிரு படைப்புகள் வந்திருக்கின்றன. 

பிறகு வந்த காலங்களில் வாழ்க்கை வெவ்வேறு விதமான சூழல்களை அமைத்துக் கொடுத்ததால் நான் என் எழுத்து வேலைக்கு ஓய்வு கொடுத்து என் நண்பர்களை இம்சிக்காமலும் தமிழ் கூறும் நல்லுலகுக்கு இலக்கியப் பணி செய்வதை விடுத்து 'தேமே' என்று என்பாட்டுக்கு இருந்தேன். 

விதி யாரை விட்டது? இணையம் என்று ஒன்று வந்து என்னைப் போன்றவர்களுக்கு ஒரு வாழ்வு கொடுத்திருக்கிறது. தாமே எழுதி தாமே பதிவிடும் நார்சிசத்தில் நானும் ஒருவனாகி விட்டேன்

 இப்படி நானும் என் பொழப்பும் என்றிருந்த என்னை இணையம் மட்டுமல்லாது சமீபத்தில் நான் பயணித்த ஒரு பேருந்தும் எழுதச் சொல்லி வம்பிழுக்கிறது. மறவமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் தொடங்கிய என் எழுத்து வாழ்வு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்தில் ஒரு திருப்பு முனையைச் சந்தித்தது. 

மதுரையில் இருந்து சென்னைக்குச் செல்லும் அந்தப் பேருந்தில் பெரியார் பேருந்து நிலையத்தின் நசநசப்புக்கும் இரைச்சலுக்கும் தப்பி பரபரப்புடன் ஏறி அமர்ந்தேன். அப்படி சத்தத்திற்குத் தப்பி வருகிற என்னைப் போன்றவர்களைச் சோதிப்பதற்கேன்றேதான் தனியார் பேருந்துகளில் வீடியோ படத்தைப் போடுகிறார்கள். என்னதான் இதை எதிர்கொள்ளும் முன் தயாரிப்போடு ஏறினாலும் எரிச்சலும் இயலாமையும் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

அன்றும் அப்படித்தான். சிவா கார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் என்ற படத்தை என்னைப் போலக் களைத்து வந்து பஸ்ஸிலேறியவர்களின் தூக்கத்தைக் கெடுக்கவென்றே போட்டார்கள். எரிச்சலோடு படத்தைப் பார்க்க ஆரம்பித்த எனக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. அங்கேதான் என் எழுத்திற்கான மறு அழைப்பு காத்திருந்தது. 

அந்தப் படத்தில் கதாநாயகனுக்குத் தன பெயர் குறித்த பிரச்னை. அவனுக்குப் பிடிக்காத அசிங்கமான அந்தப் பெயர் அவன் ஆளுமைக்கு விடப்பட்ட சவாலாக இருப்பதாக அவன் கருதுவதுதான் அந்தப் படத்தின் முதல் பாதியின் கரு. ஏறத்தாழ பதினாறு ஆண்டுகளுக்கு முன் 1997 ம் ஆண்டு கணையாழியில் 'பெயர்' என்ற தலைப்பில் வந்திருந்த என் கதைக் கருவோடு இது அப்படியே ஒத்துப் போனது

கதையை இத்துடன் இணைத்திருக்கிறேன் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது நான் சொல்ல வந்தது என்னவென்றால் இதோ இனி நானும் தொடர்ந்து எழுதப் போகிறேன். இது எனக்கு எழுத ஏதோ ஓர் உத்வேகம். தந்திருக்கிறது. "தொடங்கிட்டான்யா... தொடங்கிட்டான்யா" என்றெல்லாம் திட்டப்படாது. எங்களுக்கும் எழுத வருமுல்ல.
அ. பிரபாகரன்
°°°°°

எதிர் நீச்சல் படம் எடுத்த துரை செந்தில்குமார் இந்தக் கதையைப் படிக்க வில்லை என்பதை நான் நம்பத் தயாராக இல்லை.                             -  அப்பு 1 comments:

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

un kathaiyai thirudanthak kooda theriyaatha appaviyaa irukkiuriye?

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்