3.12.14

கனவு

என்னிடம் சிலர் சொன்னார்கள் 

கனவு காணும் உரிமை எல்லார்க்கும் உண்டு...
அதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை...

அதை நம்பினேன் 

இது என்ன காவிரியா தடுத்து இரண்டு அணை கட்டுவதற்கு 
அல்லது முல்லைப் பெரியாறா 10 அடி குறைத்துச் சேமிக்க..
கனவு மக்களே கனவு...
இதற்கு யாரும் தடுப்பணை கட்ட முடியாது 
இதன் உயரத்தையும் யாரும் குறைக்க முடியாது

இதையும் நம்பினேன் 
மேலும் சொன்னார்கள் 
கனவு காற்றைப் போல எல்லாருக்கும் சொந்தம்...
காற்றைச் சுவாசிப்பவன் உயிர் வாழ்கிறான்
கனவைச் சுவாசிப்பவன் உயரே வாழ்கிறான்...

தொடர்ந்து காற்றையும் கனவையும் சுவாசியுங்கள்...
உயிரோடும் வாழுங்கள் 
உயரேவும் வாழுங்கள் 

கனவை நனவாக்குங்கள்!

அத்தனையையும் நம்பினேன்
பிறகே உறங்கினேன் 
கனவு கண்டேன் 

கறுப்புப் பணம் அனைத்தும் திரும்பி வரும் கனவு கண்டேன்
ஏழைகள் இன்புறக் கண்டேன் 
ஒன்றிக்கப்பட்ட ஆறுகள் பற்றிக் கனவு கண்டேன் 
மொழிப்போர் அற்ற இந்தியாவும் 
மதப்போர் அற்ற பாரதமும் கனவு கண்டேன்
எந்த பயமும் இல்லாமல் என் கருத்தை 
தெளிவாய்ப் பதிவதாயும் கனவு கண்டேன்
கருத்துச் சுதந்திரம் இருந்தால் வேறென்ன வேண்டும்


இந்த உயரம் போதுமென்றேன்
மெதுவாய் கண்விழித்தேன் 

பெட்ரோல் விலை குறைந்ததாய் செய்தி வந்தது 
ஆஹா கனவு பலித்து விட்டதா?

இன்னும் பார்த்தேன்

அத்தியாவசிய மருந்துகள் விலை ஏற்றமாம்
அதானிக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனாம்

வங்கிக் கணக்கை நாம் ஆரம்பித்தோம்
அதானிக் கணக்கில் பணமாம்

கறுப்புப் பண கணக்கிருக்கிறது ஆனால் பணமில்லையாம்

நான் ராமரின் மகன் இல்லை என்பேனால் நாட்டிலேயே 
எனக்கு இடமில்லையாம் 

வை.கோ. வை மிரட்டிய எச். ராசா பற்றி 
எக்கச் சக்க செய்திகள் - கருத்து சுதந்திரமாம்

 போதுமடா சாமி 


இன்னும் கொஞ்சம் உயரே கனவு கண்டு 
நான் விழித்திருந்தால் 
நிச்சயம் 
புதிதாய் இரண்டு அணைகள்
இருந்திருக்கும்.


0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்