19.2.14

எல்லாம் சிவமயம் - குடியரசு - 2

இது இந்தியக் குடியரசும் அரசியல் அமைப்பும் - 1 என்ற முந்தைய தொடர்ச்சியாக படிக்க விரும்புவோர் இந்தச் சுட்டியை அழுத்தவும்.

உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கடந்த ஏழு மாதங்களுள் மிக உன்னதமான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். ஏற்கனவே ஜனவரியில் அவர் வழங்கிய தீர்ப்பு நேற்று வழங்கிய தீர்ப்பை முன்னறிவித்ததாகவே கொள்ளலாம். ஒரு குடியரசின் மிக முக்கியமான அம்சம் என்பது நீதித் துறை. அது மிகவும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடக்கும் போதுதான் மக்களுக்கு குடியரசின் மீதும், அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை ஏற்படும்.

ஏற்கனவே பேரறிவாளனை பொறுத்த வரை, அவரது சாட்சியம் மாற்றி எழுதப்பட்டு அவரையும் குற்றவாளியாக்கிய உண்மை, சாட்சியம் வாங்கிய அதிகாரியால் ஒப்புக்கொள்ளப் பட்டபோதே, நீதி மன்றமே தானாக அந்த வழக்கை எடுத்துக் கொண்டு, குறைந்த பட்சம் பேரறிவாளனையாவது விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் இன்று வரை அது நடக்க வில்லை என்றாலும், இத்தனை ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட கருணை மனு காரணமாக மரண தண்டனை ரத்து செய்யப் பட்டிருக்கிறது என்கிற போது - அது கொஞ்சம் நீதி மன்றங்களின் மீதான நம்பிக்கையை அதிகப் படுத்தியிருக்கிறது. 

தலைமை நீதிபதி சதாசிவம் அவர்களைப் போல நீதிபதிகள் அனைவரும் நேர்மையோடும், துணிச்சலோடும் இருப்பது அவசியமாகிறது. நிரபராதிகள் ஒரு போதும் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்பதுதான் நீதி தேவதையின் அறைகூவலாக இருந்தாலும், நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும், குற்றவாளிகள் நிரபராதிகள் போல வெளிவிடப் படுவதும் தான் குடியரசின் மீதான நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்து விடுகிறது.

எப்போது ஒரு நாட்டின் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து விசா மோசடி செய்த ஒரு தேவயானிக்காக தவம் இருந்து அவரை வரவழைத்து அதைக் கொண்டாடியதோ, அவருக்கு பதவி உயர்வு கொடுத்ததோ அப்போதே நாம் உண்மையையும் நீதியையும் தூக்கிப் பிடிக்கிறோமா இல்லையா என்பது உலகுக்கு தெரிந்து விட்டது. எப்போதும் பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே வழங்கப்பட்டு வருகிறதோ என்கிற சந்தேகத்தை இந்தத் தீர்ப்பு உடைத்தெறிந்திருக்கிறது. இது போல தொடர்ந்து நீதி பட்சத்தில் உண்மையான குடியரசாக இந்தியா மலர வாய்ப்புள்ளது.

இந்த மரண தண்டனை ரத்து ஒரு சிலரால் கேலி செய்யப் படலாம். திரு ராகுல் காந்தி போல - "ஒரு பிரதமரைக் கொன்றவர்களுக்கே மரண தண்டனை ரத்து, விடுதலை என்றால் சாதாரண மக்களைக் கொன்றவர்களுக்கு என்ன நடக்கும் என்று பயந்து போயிருக்கிறார். அதிகாரம் தனது கையில் இருந்து, சாட்சியங்களை மாற்றிய அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு நிரபராதியை 23 ஆண்டுகளாக சிறையில் வைத்திருந்த இவர்களை - என்னவென்று கேள்வி கேட்பது? இவ்வளவு பேசப்பட்ட வழக்கிலேயே நீங்கள் சாட்சியங்களை மாற்றியிருக்கிறீர்களே - யாருக்கும் தெரியாத வழக்குகளில் உங்களின் கை வரிசை எப்படி இருந்திருக்கும் என்று கேட்கலாம் அல்லவா?

எது எப்படியெனினும், இப்போது இவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் அம்மாவுக்கு இருப்பதால், எல்லாம் சிவமயத்திலிருந்து, அம்மாமயத்திற்கு மாறியிருக்கிறது. ஒரு சிலரை விடுவிப்பதாலேயே, குடியரசின் மீதும் அரசியல் அமைப்பின் மீதும், சட்டத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடாது.

முன்னால் நீதிபதி சுரேஷ் குஜராத் கலவரத்தில், தங்கள் வஞ்சம் தீர்க்க வருபவர்களை அனுமதியுங்கள் என்று சொன்னதற்கான 'ஒலிப்பதிவு' இருப்பதாக சொல்லியிருக்கிறார். இதைத் தெரிவித்த திரு பாண்ட்யா சுட்டுக் கொள்ளப் பட்டதும் அனைவருக்கும் தெரியும். சஞ்சீவ்பட் என்கிற போலிஸ் அதிகாரி திரு மோடி இவ்வாறு சொன்னார் என்று சொன்னதும், அவரை வேறு சில காரணங்களுக்காக சஸ்பெண்ட் செய்ததும் அனைவரும் அறிந்ததே. இது போல எத்தனை வந்தாலும், அரசியல் வாதிகள் விடுவிக்கப் படலாம்... ஆனால் சதாசிவம் போல சில உண்மையான நீதிபதிகள் நேர்மையோடு செயலாற்றும் வரை நீதி தாமதமானாலும், காப்பாற்றப் படலாம் என்கிற நம்பிக்கையையும் தான் குடியரசின் மீதும் வைக்க வேண்டியிருக்கிறது.0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்