6.10.14

எங்கெங்கு காணினும் சக்தியடா !


எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி 

ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத் 
தங்கும் வெளியினிற் கோடியண்டம்  - அந்தத் 
தாயின் கைப்பந்தென ஓடுமடா!.. 
- பாரதி தாசன்

##########
நான் என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். சில சமயங்களில் நடக்கும் நல்லதெல்லாம் உண்மைதானா - என்று உணர்ந்தது கொள்வதற்கு இப்படிச் செய்வதுண்டு. ஆனால் கடந்த இருபத்தி ஏழாம் தேதியிலிருந்து நடக்கும் பல நல்லவைகளை நினைத்துப் பார்க்கும் போது இவைகளெல்லாம் உண்மைதானா என்று என்னையே கிள்ளிப் பார்த்து பார்த்து நகக் கண்கள் உடைந்தே போய்விட்டன. கிள்ளிப் பார்ப்பதற்கு என்னுடம்பில் இடமும் இல்லாமல் போய்விட்டது. எங்கெங்கு காணினும் அம்மாவே! காலை செய்தித்தாட்களில், சாலையில் போஸ்டர்களில், நாள் முழுவதும் தொலைக்காட்சிகளில் என எல்லா இடங்களிலும். ஆளும் கட்சி இடைத்தேர்தல்களில் மட்டுமல்ல, நீதித்துறையை எதிர்ப்பதிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது.

பதிவியில் இருக்கும் போது தண்டனை பேரும் முதல் நபராக மட்டும் அவர் அல்ல. அப்படிப் பதவியில் இருக்கும் போது அந்தத் தண்டனையைக் கூட தனக்கு சாதகமானதாக மாற்றக்கூடிய சக்தியையும் கொண்டவர் என்பதை என்பித்திருப்பதிலும் அவர்தான் முதல்வர்.
இது நீதித் துறைக்கு நல்லதல்ல.

###

ஆளும் கட்சி, தான் எப்போதும் தனது தலைவருக்கு விசுவாசம் உள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. அதைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றுமில்லாமல், ஒரு சில இடங்களில் இருந்த இந்த விசுவாசக் காட்சிகளை தமிழகம் முழுவதும் பரப்பி விட்ட பரப்புரையாளர்கள் நமது செய்தித் தாள்களும், செய்தித் தொலைக் காட்சிகளும். 
பெயருக்கு ஒன்றிரண்டு ஊடகங்களைத் தவிர ஒட்டு மொத்தமாக பத்திரிக்கைகள் இது நீதித் துறையின் வெற்றியாகவோ, அநீதிக்குக் கிடைத்த தண்டனையாகவோ கருதாமல் - சிலரின் சூழ்ச்சிகளால், மாயவலைக்குள் அவர் சிக்கிக் கொண்டது போல சித்தரித்தால், படிப்பவன் என்ன நினைப்பான்? நேற்று தொடங்கி இன்று தண்டனை விதித்தால் அதில் சூழ்ச்சி பற்றிப் பேசலாம். இதில் எப்படிப் பேசுவது? பத்திரிக்கைகள் தங்களது நம்பகத் தன்மையை முற்றிலுமாக அடகு வைத்து விட்டன. 
இதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தை இவைகள் அடகு வைத்து விட்டன. இது பத்திரிகை தர்மத்திற்கு நல்லதல்ல.

###

ஒட்டு மொத்த சினிமாத் துறையும், ஒருங்கே அமர்ந்து - அல்லது அவ்வாறு இருந்தது போல ஒரு பிரம்மையை உருவாக்கி அதில் நீதி அரசர்கள் அமர்ந்து இருப்பதைப் பார்த்த போது- 
ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்தவே முடியாது என்று நமக்கு சொன்ன விவேக் நீதியரசராகத் தெரிந்தார்.
ஊழலுக்கு எதிராக அன்னியனான விக்ரம் நீதியர்சராகத் தெரிந்தார்.
தெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா 
என்ற வசனத்தைப் பார்த்த போது 
ஐயகோ 
எந்த வசனகவிக்கும் தோன்றாத இந்தச் சிந்தனை எந்த நீதியரசருக்குத் தெரிந்தது என்று உள்ளுக்குள்ளே 
குடைந்து எடுத்து விட்டது.

இவர்கள் ஏன் நீதியர்சர்களாகவோ, அடுத்த முதல்வர்களாகவோ வரக்கூடாது?
இந்தப் போக்கு சினிமாவிற்கும் நல்லதல்ல
தமிழகத்துக்கும் நல்லதல்ல.

###

அன்னைக்கு ஆதரவாக தனியார் பள்ளிகள் மூடப்படும் என்று அறிக்கை விட்டு மீண்டும் அதை வாபஸ் செய்தது / நீதித் துறைக்கான முடிவுகளில் பள்ளிகள் தலையிடுவது ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகள் தடம் புரள்கின்றன என்பதையே காட்டுகிறது. இது நல்லதல்ல.
###

கட்சி ஆட்சியில் இருக்கும் போது அதன் தலைவர் சிறை பிடிக்கப்பட்டால் இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் இனிமேல் சர்வ சாதரனமாய்ப் பார்க்கலாம். இந்த நிகழ்வுகளெல்லாம் நமக்குள் பல கேள்விகளை கொடுக்கின்றன.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விடயங்கள் இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வரலாறு தெரியாமல் இருந்தால் என்னென்ன பாதகங்கள் நிகழும் என்பதற்கு இதுவே சாட்சி. ஆனால் பத்திரிகைகளுக்குத் தெரியவில்லை என்பது மிக ஆச்சரியமானதே! வரலாறு தெரியாமல் இருக்க முடியுமா?

ஜனநாயக நாட்டில், மக்கள் போராட்டங்கள் என்பது அவர்களுக்கான உரிமை. ஒரு ஊழல் வாதியை தங்களது தலைவர்களாக ஏற்றுக்கொள்வது அவர்களது சுதந்திரம். அதில் தலையிட நாம் யார். அதற்காக சாதாரண மக்களை துன்பத்திற்கு ஆளாக்குவதை யாராவது அவர்களது உரிமை என்று சொல்லிவிட முடியுமா? 

இத்தைகைய போக்கு, இன்றைய தேதியில் ஆயிரக்கணக்கான கோடிகள் அளவிற்கு ஊழல் செய்தவர்களுக்குச் சாதகமாக இருக்குமே தவிர வேறு யாருக்கும் எந்த வித நன்மையையும் செய்து விட முடியாது. இனிமேல் ஊழல் வழக்குகள் என்று வந்தால் அதனால் தண்டிக்கப் படப போவது சாதாரண ட்ராபிக் கான்ஸ்டபிள்கள் மட்டுமே. பழம் தின்னிக் கொட்டைகள் எல்லாரும் மிகச் சாதரணமாய் ஒரு பேருந்தை எரிப்பதன் மூலம் தப்பித்து வரமுடியும். அறிவாளிகள், தாங்கள் ஆட்சியில் இருக்கும் போதே தங்கம் மீதான வழக்குகளை எதிர் கொண்டு இலகுவாக வெளியே வந்து விட முடியும்.
ஊழல் வழக்குகள் தவறு என்று சொல்லிவிட முடியுமா?

தவறு செய்தவர்கள் திருந்தலாம். இல்லையென்று மறுப்பதற்கில்லை. அதற்காக செய்த தவறுகளுக்கு தண்டனை இல்லை என்று சொல்ல முடியுமா? 
###

மூடர்கள் இருக்கும் வரை ஊழல் பேர்வழிகள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள்.
###


துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? -

அறமி தென்றும் யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது - யாம்

அறிகி லாத போது - தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா? 
பாரதிதாசன் 0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்