19.10.11

அப்துல்கலாம்: அணுஉலை: அவகாசம்

உயர்திரு. அப்துல் கலாம் - நான் மதிக்கும் மற்றும் நேசிக்கும் மனிதர்களுள் ஒருவர். அணு உலை பற்றி அவர் - மிகவும் நல்ல எனெர்ஜி என்று அவர் சொல்லுவதால் அவர் மீது இருக்கும் மதிப்பு ஒரு போதும் குறையாது என்றாலும், இனி மேலும் அந்த மதிப்பு கூடுமா என்பதுதான் தெரியவில்லை.

அவரது முடி - சங்கருக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது - அது அந்நியனில் வெளிவந்தது. அது போல உயர்திரு. அப்துல்கலாம் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் இருக்கும் பலரையும் நேர்மறையாகவே  தனது பாதிப்பைத் தந்து கொண்டிருக்கிறார். 

சம்சாரிகள், சாமியார்கள் என்று வேடம் போட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்திலும் பிரம்மச்சார்யத்தின் அடையாளம். இஸ்லாமியராக இருந்தாலும் எந்த விதத்திலும் தனது மதக் கொள்கைகளை தனது சிந்தனைகளின் தாக்கத்தில் அதிகம் அலை பாய விடாதவர் - இதனாலேயே இஸ்லாமிய சமூகம் அவரை நன்முறையில் கண்டு கொள்ள வில்லையோ என்பது கூட கேள்வி. திரு. அப்துல்கலாம் இந்திய விஞ்ஞானிகளின் மகுடமாகப் போற்றப்படுகிறார் என்பது அவரது கண்டு பிடிப்புகளுக்காக என்பதைக் காட்டிலும் அவரது அர்ப்பணிப்பு என்பதுதான் நம்மை மிகவும் பாதித்திருக்கிறது.

கூடங்குளம் - அணு மின் உலை விவகாரத்தில் உயர்திரு. கலாம் அதில் அச்சப் பட ஒன்றுமில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மேற்கொண்டு தனது நிலைப்பாட்டை, தனது கருத்தை தெரிவிக்க இன்னும் சில நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார். ஏற்கனவே ஜூன் மாதம்இருபத்திஒன்பதாம் தேதி சிவகாசியில் இதைச் சொன்னார். ஏறக்குறைய நூறு நாட்களுக்குப் பிறகு இன்னும் பத்து நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார். அவரது கருத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு புலத்தில் மட்டுமே புலமை பெற்றவர்களாக இருப்போம் - எனக்கு கணிதம் பற்றி அதிகம் தெரியாது எனில், அதில் புலமை பெற்றிருக்கிற ஒருவரின் கருத்துக்கு செவி மடுப்போம். அல்லது மருத்துவம் பற்றி ஒன்றும் தெரியாதெனில் அதி சிறந்த மருத்துவரின் கருத்து சரியே என்று சொல்லுவோம். சாதாரண மனிதர்கள் இப்படி துறை வல்லுனர்களின் கருத்துக்களை நம்பியே இருக்கிறோம்.
இதனால் அறிவியல் பூர்வமான கருத்துக்களை சில விஞ்ஞானிகள் கூறும் போது அது அந்தத் துறை வல்லுநர் என்கிற முறையில் அவரது கருத்துக்கு நாம் கொஞ்சம் கூடுதலாகவே மதிப்பளிக்கிறோம். அப்படியே பெரும்பான்மையானவர்கள் திரு. அப்துல் கலாம் அவர்களின் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடும்.  அப்புறம் எதற்கு அவருக்கு இன்னும் பத்து நாட்கள் அவகாசம்... [ஏற்கனவே நூறுக்கும் மேல் ஆகிவிட்டது].

பிரச்சனை என்னவென்றால் ஒவ்வொரு துறைக்குள்ளும் இன்னும் சில கூடுதல் புலங்கள் இருப்பதாலும் ஒவ்வொன்றிலும் எல்லாரும் பாண்டித்தியம் பெற முடியாது என்பதும் உண்மை. மருத்துவத் துறை என்றாலும் அதிலும் காதுக்குத் தனி, எலும்புக்குத் தனி, பல்லுக்குத் தனி என்று பாகு போட்டு வல்லுனர்கள் பிரிந்து இருப்பது போல அறிவியலிலும் பல்வேறு உட்கூறுகள் அறிவியல் வல்லுனர்களை பிரித்து வைத்திருக்கிறது.

அதனால்தான் திரு. அப்துல் கலாம் அணு உலை பற்றி மேலும் கருத்துத் தெரிவிக்க இன்னும் பத்து நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறாரோ? இப்பப் பிரச்சனையின் உச்ச கட்டம் - நம் பதிவர் ஜீவா கேட்பது மிகவும் சரியாகத் தோன்றுகிறது - அறிவியலாளர் உங்களுக்கே பத்து நாட்கள் தேவைப் படுகிறது என்பதே அதில் எதோ உட்குத்து இருக்கு என்பதைக் காட்டுகிறது என்று சொல்லுகிறார். அது மிகச் சரி என்றே தோன்றுகிறது. 

ஸ்பெசல் துறை என்பது ஒரு விதத்தில் வளர்ச்சி என்றாலும் அவைகளினால்தான் நாம் ஒன்று பட்ட அல்லது முழுமையாக பார்க்கும் எல்லாவற்றையும் விட்டுத் தூர வந்து விட்டோம் அல்லது பார்க்க முடியாமல் இருக்கிறோம். மருத்துவர்கள் ஒரு மனிதனை ட்ரீட் பண்றோம் என்பதை மறந்து விட்டு வெறும் பல்லாகவும், வெறும் காலையும் அல்லது எலும்பையும் இப்படி ஒவ்வொன்றாக ட்ரீட் பண்றது தான் ப்ராப்ளம். [அறிவியல் என்பது அப்படித்தான் வளரும் என்பது கட்டாயம் கவனிக்கப் பட வேண்டியது]

அதேபோலத் தான் அறிவியலும் வெறும் பகுதிகளை மட்டும் காண்கிறதே தவிர ஒட்டுமொத்தமாகப் பார்க்கத் தவறுகிறது. நிச்சயமாக இன்றையச் சூழலில் அறிவியல் மற்றும் அறம் இரண்டும் சேர்வதற்கான வாய்ப்புகள் முற்றிலுமாக இல்லை என்றுதான் தோன்றுகிறது; ஒட்டு மொத்தமாக மனித குலத்தின் வளர்ச்சி என்பதோ அல்லது அழிவு என்பதோஅதன் வரம்புக்குள் வருவது மாதிரி தெரியவில்லை.அந்தச் சூழலுக்குள் நாம் நேசிக்கும் முன்னாள் முதல் குடிமகன் சென்று விட்டாரோ என்றே அஞ்ச வேண்டியிருக்கின்றது.

அதாவது துறை வல்லுனர்கள் ஒன்று சில விஷயங்களை ரொம்பவும் காம்ப்ளிகேட் பண்ணுவார்கள் - அல்லது ரொம்ப சிம்பிளா ஆக்கிவிடுவார்கள். திரு . அப்துல் கலாம் அவர்கள் ரொம்ப சிம்பிளா ஆக்கிவிட்டார்கள். ரோடு விபத்து நடப்பதால் ரோட்டில் போகாமல் இருக்கிறோமா என்பது ஒரு விஞ்ஞானி கேட்கக் கூடிய கேள்வி அல்ல. அதை நாம் கேட்கலாம். மலைக்கும் மடுவுக்கும் முடிச்சுப் போடா முடியுமா? அணு உலை விபத்துக்கும், சாலை விபத்துக்கும் நிறைய வேறுபாடுகள், அழிவின் கொடூரம், பரந்து விரியும் கதிர் வீச்சுகள் என்று....

உயர்திரு. அப்துல்கலாம் என்ற மனிதருக்கு முதல் குடிமகன் என்கிற உயர்ந்த மரியாதையை அரசியல்வாதிகள், பல்வேறு [அரசியல்] காரணுங்களுக்காக அவருக்கு வழங்கினார்கள். அப்போது அந்தப் பதவியின் நிமித்தம் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது - அது வெறும் 'பதவி பதவி' - அதிகாரம் ஏட்டளவில் மட்டுமே இருக்கக் கூடியது. எனவே அவரின் அரசியல் சம்மந்தப் பட்ட பேச்சுகள் எல்லாமே அரசியல்வாதிகளின் கருத்தைப் பிரதிபலிக்கக் கூடியதாகவே இருந்தது. வேறு சில அரசியல் காரணங்களால், இரண்டாம் தடவை கூட அவரால் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஏற்கனவே பொக்ரான் சோதனையில் அவரது பங்களிப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. அதனால் அணு பவர் பற்றித் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதனால் சில ஸ்பெஷல் துறை என்பதனால் இந்த அவகாசத்தை எடுத்துக் கொள்ள முடியாது. அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவர் விஞ்ஞானி என்ற முறையிலும் மக்கள் குடியரசுத் தலைவர் என்கிற முறையிலும் அவர் சொல்லுகிற எல்லாமும் மிகவும் கவனிக்கப் படும். எனவே அவர் நேரமெடுத்துப் பேசுவதே நல்லது.

நிச்சயமாய் அணு உலைகள் பாதுகாப்பானவை என்று மீண்டும் சொல்லுவார் என்றே நம்புகிறேன். அந்தப் பதிலுக்குள் - அணு உலையின் அழிவு பெரிதா அல்லது நாட்டின் வளர்ச்சி பெரிதா என்கிற கேள்வியை முன்னிறுத்தி அணுஉலை தேவை என்று சொல்லலாம். அல்லது பல்வேறு இடங்களில் உள்ள அணு உலைகளுக்கு அருகில் உள்ள மக்களின் அச்சம் போக்குவதற்கான தேவையில், அணு உலைகள் பாதுகாப்பானவை என்று சொல்லலாம். அவரது நிலையை ஓரளவு புரிந்து கொண்டாலும் எனக்குள் சில கேள்விகள் எழாமல் இல்லை.

"எதிர்கால இந்தியா 2020" என்பது அல்லது வளர்ச்சி என்பது நமது கல்லறைகளின் மேல் அல்லது நமது சந்ததியினரின் ஒட்டு மொத்தச் சுடுகாட்டின் மீது கட்டப் படவேண்டுமா?
அல்லது கல்பாக்கம் என்கிற ஒரு தவறை செய்துவிட்டோம் அல்லது அது போல பல தவறுகளை நாம் ஏற்கனவே செய்துவிட்டோம் என்பதற்காக அடுத்த தவறை தெரிந்தே அனுமதிக்க முடியுமா? அதனாலேயே கூடங்குளம் அணு உலை தேவைப் படுகிறதா?

நமது குற்றங்களை ஏதாவது ஒரு புள்ளியில் நிச்சயமாய் நிறுத்த வேண்டாமா? நிறுத்துவதற்கான புள்ளி போராட்டாங்களாக வரும்போது, உயர்திரு அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள் அதை கமாவாக, [அரைப்புள்ளியாக] மாற்றித் தொடருவதும், இந்தத் தவறுகளும், குற்றங்களும் தொடரவே வழிவகுக்கும் என்பதாகாதா?


அவகாசத்திற்குப் பிறகு அவரின் பதில் ஒரு அரைப் புள்ளியாக இருந்தாலும் அல்லது முழுப்புள்ளியாய் இருந்தாலும் அது அவரை நான் நேசிக்கும் மனிதர்களின் பட்டியலிலிருந்து நீக்கிவிடாது - ஒரு வேளை எண்ணிக்கையில் சரிவு இருக்கலாம். நமது நேசப் பட்டியலில் அவர் இருப்பதால் அவருக்கு பெரிய புகழ் ஒன்றும் வந்துவிடப் போவதில்லை அல்லது நமது நேசப் பட்டியலில் இருந்து நீக்கப் படுவதால் அவருக்கு பெரிய இழப்பு ஒன்றும் நேர்ந்துவிடப் போவதும் இல்லை என்பதை நாம் அறிவோம். இருந்தாலும் நல்லதொரு நிலைப்பாட்டை எடுப்பார் என்றே நம்புகிறேன். அதற்காகவே அவரின் இந்த அவகாசம் எதைச் செய்யப் போகிறது என்று அறிய நாம் காத்திருப்போம்.அறிவு - அறிவியல் அழிவை ஏற்படுத்துமெனில் அதைப் பற்றிக் கண்டு கொள்ளாதேனில் அந்த அறிவால் என்ன பயன்...

கொசுறு 
இதுவரைக்கும் எந்த மருத்துவராவது ஐயா நாங்கள் உண்மையிலேயே வியாபார நோக்கோடுதான் மருத்துவம் பார்க்கிறோம் - கம்பெனிகள் கொடுக்கிற சாம்பிள் மாத்திரைகள் மற்றும் கமிஷனுக்காகவே சில மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறோம் என்று சொன்னதுண்டா? 
அல்லது 
எந்த அரசியல் வாதியும் நாங்களெல்லாம் கறை படிந்தவர்கள்தான்  - எல்லாவற்றிலும் எப்படி ஊழல் செய்யலாம் என்றுதான் பார்க்கிறோம் என்று சொன்னதுண்டா?
அல்லது
.... நீங்களே மற்ற கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள்.

அப்புறம் எதற்கு நாம் விஞ்ஞானிகளிடம் எங்கள் கண்டு பிடிப்புகள் அழிவுக்கு இட்டுச் செல்லும் என்று சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்?

இன்னுமொரு கொசுறு - சிலர் சொல்லியிருக்கிறார்கள்...
ஆட்டம் பாம் முதல் சோதனைக்குப் பிறகு [1945  ] அதில் சம்பந்தப் பட்டிருந்த விஞ்ஞானிகள் சொன்னது...
"To me, science is an expression of the human spirit, which reaches every sphere of human culture. It gives an aim and meaning to existence as well as a knowledge, understanding, love, and admiration for the world. It gives a deeper meaning to morality and another dimension to esthetics."
— Isidor Isaac Rabi

"I am become death, the destroyer of worlds."
- J . Robert Oppenheimer

"Now we're all sons-of-bitches."
Remark to Robert Oppenheimer immediately after the first atom bomb test explosion at Alamogordo.
— Kenneth Tompkins Bainbridge 

 இறுதிக் கொசுறு

ஆட்டம் பாமுக்கும் அணு உலைக்கும் வித்தியாசம் தெரியாமல் இல்லை -  ஒட்டு மொத்த எனெர்ஜி எப்படி இருக்கும்னு அதைப் பத்தி சொன்னாதானே புரியும். அதுக்காக!

19 comments:

Muthu சொன்னது…[பதிலளி]

"ஏற்கனவே பொக்ரான் சோதனையில் அவரது பங்களிப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. அதனால் அணு பவர் பற்றித் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதனால் சில ஸ்பெஷல் துறை என்பதனால் இந்த அவகாசத்தை எடுத்துக் கொள்ள முடியாது"

என் அனுமானத்தில் இதுதான் காரணமாக இருக்கக்கூடும்.

கலாம் துறை சார்ந்து ஒரு வானூர்தி பொறியியல் நிபுணர் (Aeronautical Enginerring) அணுவியல் நிபுணர் அல்ல. அவர் அணுவியலிலும் அறிவுள்ளவராக இருக்கலாம். ஆனால் அது theoritical level-லிலேயே இருக்கக்கூடும். காரணம் அணுபொறியியல் துறையில் அவர் வேலை பார்த்ததாகவோ பங்களிப்பு செய்ததாகவோ நானறிந்த வரையில் தகவல் இல்லை. பொக்ரான் அணுவெடிப்பு சோதனையில் அவரது பங்களிப்பு என்ன என்பது தெரியாதவரையில் அவர் அணுசக்தித்துறையிலும் நிபுணர் என்று கருதுவது பிழை. அவர் கேட்கும் அவகாசம் தனது theoritical அறிவை தீட்டிக்கொள்ளும் முகமாக அணுசக்திப்பொறியியல் நிறுவனங்களில் (IGCAR, BARC போன்ற) உலை வடிவமைப்பு, கட்டுமானம், இயக்கம், பராமரிப்பு போன்ற துறைகளில் வேலை பார்த்த நிபுணர்களோடு கலந்தாலோசித்து சம்பந்தமான தகவல்களை சேகரித்து தொகுத்துக்கொள்வதற்காகவே இருக்கும் என்பது என் எண்ணம்.

அன்புடன்
பொன்.முத்துக்குமார்

koodal bala சொன்னது…[பதிலளி]

திரு அப்துல்கலாம் அவர்கள் ஒரு மாபெரும் பண்பாளர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .இருப்பினும் இதுபோன்ற விஷயங்களில் அவருக்கு நிபுணத்துவம் இல்லாததாலேதான் பத்து நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார் .இந்நாட்களில் அவர் துறை சார்ந்த நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தக்கூடும் .ஆனால் நிபுணர்கள் கருத்து அணுசக்தி துறையை காப்பாற்றும் வகையில் இருக்குமா அல்லது மக்களைக் காப்பாற்றும் வகையில் இருக்குமா என்பது சந்தேகம்தான் .எனவே இந்த விஷயத்தில் திரு அப்துல்கலாம் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை .

மாய உலகம் சொன்னது…[பதிலளி]

எந்த முடிவானாலும் மக்களுக்கு சாதகமான முடிவா இருந்தால் நல்லது... பகிர்வுக்கு நன்றி சகோ!

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களுக்கு போதிய ஞானம் இல்லை என அணு எதிர்ப்பு கமிட்டி சொல்லுகிறது. ஆனால் அணு எதிர்ப்பு கமிட்டியில் இருக்கும் பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் யார் சொனாலும் நாங்கள் ஏற்றுகொள்ள மாட்டோம் என்கிறார்கள். இந்தியா கல்வி அறிவு இல்லாத நாடு என்று எவன் சொன்னது ..? அப்துல் கலாமை விட பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் உண்ணாவிரத்தில் இருக்கிறார்கள் .

அப்படி எனில் அவர்களை அரசு பயன்படுத்தலாமே என நீங்கள் கேட்கலாம். அந்த விஞ்ஞானிகள் எல்லாம் கதை கட்டுவதில் மாத்திரம் தான் சிறந்தவர்கள். விஞ்ஞானம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள். 8 கோடி மக்களுக்கும் நாங்கள் தான் தலைவர்கள் என்பவர்கள் ( நடிகர் விஜய் அல்ல ).

போங்கையா ... போங்க ... எங்கயோ போகுது நாடு ...

suryajeeva சொன்னது…[பதிலளி]

அருமையான அலசல், பல்வேறு துறையின் நிபுணர்கள் இப்பொழுது உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பதால் சற்று குழம்புகிறார்.. பத்து நாட்கள் பத்து நாட்களாகவே இருக்கும் என்றால் நல்லது... விபத்து ஏற்படாது என்றால் ஏன் அதை நிறுவும் வெளிநாட்டு நிறுவனங்கள் விபத்து ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பு அல்ல என்று தட்டி கழிக்க வேண்டும்.. என்ற கேள்வி எழுந்தால் விடை கிடைத்து விடும்

Sankar Gurusamy சொன்னது…[பதிலளி]

சிறப்பான கட்டுரை... சிறந்த கருத்து செறிவு..

திரு அப்துல்கலாம் அரசு சொல்ல விரும்புவதைத்தான் சொல்வார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..

இங்கு விஞ்ஞானிகளோ அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ உண்மை பேசாமல் இருப்பதையே விரும்புகிறார்கள் என்பதே நிஜம்..

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/

அப்பு சொன்னது…[பதிலளி]

முத்து - வருக, வணக்கம்
திரு.கலாம் அவர்கள் பற்றிய உங்கள் விளக்கத்தை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். அவர் அணுவியல் துறை நிபுணர் அல்ல என்பது சரியே. அவரைப் பொறுத்தவரை இதைப் பற்றி அறிய நூறு நாட்களுக்கு மேல் தேவையா என்பது மட்டுமல்ல - அவர் இப்போது சேர்க்கிற தகவல்களைக் கொண்டு மிக நல்ல முடிவை எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

அப்பு சொன்னது…[பதிலளி]

வணக்கம் கூடல் பாலா,
உடல் நிலை எப்படி இருக்கிறது.
நீங்கள் சொன்னது சரியே - ஆனால் அதற்காகா நாம் அவரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இல்லை என்பதை அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், அவரின் எந்தக் கருத்தாக இருந்தாலும் மீடியாவும் மக்களும் கொடுக்கும் அட்டேன்ஷனை அவ்வளவு மெதுவாக நாம் ஒதுக்கி விட முடியாது.

அப்பு சொன்னது…[பதிலளி]

ராஜேஷ்,
நன்றி..
நானும் அதையே விரும்புகிறேன்.

அப்பு சொன்னது…[பதிலளி]

பெயரில்லாத நண்பருக்கு,
வாங்க வணக்கம்.
உங்க நக்கல் மிக அருமை.
உண்ணா விரதப் போராட்டத்தில் இருப்பவர்கள் அனைவரும் திரு.கலாமை விடப் பெரிய விஞ்ஞானிகள் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி அவர்கள் இருந்தால் பிரச்சனை இல்லையே. சாதாரண மக்கள். தங்கள் வாழ்வாதாரங்கள், வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை, எல்லாம் பாதிப்புக்குள்ளாகும் என்கிற வேதனையில் இருந்து எழும் குரல். அந்தப் பயத்தை போக்குவதோ அல்லது சரியான விளக்கத்தையோ, அல்லது எதையுமே செய்யாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்.
மக்களாட்சிதானே இது...

வருகைக்கு நன்றி நண்பரே - எந்தக் கருத்தையும் விவாதிக்க இடம் உண்டு.. உங்கள் கருத்தினை இன்னும் விளக்கமாக வெளிப்படுத்தினால் வாசிப்பாளர்களுக்கும் எனக்கும் நல்ல தெளிவைக் கொடுக்கும். மீண்டும் வாருங்கள்...

அப்பு சொன்னது…[பதிலளி]

ஜீவா,
எந்தக் கேள்விகளும் சரியான தளத்தில் இருந்து புரிந்து கொள்ளப் படுத்தல் இல்லை. நிபுணர்கள் இதில் இறங்குவதுதான் சரி. பார்ப்போம்..

அப்பு சொன்னது…[பதிலளி]

வாங்க சங்கர்,
வணக்கம்.
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

அப்துல் கலாமுக்கு அணுசக்தி பற்றித் தெரியாதென்பது நகைப்புக்குரியது. இங்கே யாரும் அணுசக்தி என்றால் என்ன என்று பாடம் எடுக்கச் சொல்லவில்லை. அது பற்றிய அபிப்ராயமே கேட்கப்பட்டது. இவ்வளவு நாள் விஞ்சானியாக இருந்தவர், இனிமேல்தான் அதைப் பற்றி யோசிக்கிறார் என்றால்......அவரது அபிப்ராயம் நம் எதிர்பார்ப்புக்கு இணக்கமாக இல்லை என்றே அர்த்தம்.

-- செங்கோவி

அப்பு சொன்னது…[பதிலளி]

வணக்கம், செங்கோவி -
ஆனால் சில பேரு தெரியாது என்று சொல்லுகிறார்களே - எனக்குத் தெரியாது என்று அவர் சொல்லிட்டா பிரச்சனை இல்லையே?
[செங்கோவி தானா ? அல்லது வேறு யாரும் செங்கோவி பெயரிலா?]

கோகுல் சொன்னது…[பதிலளி]

அப்துல்கலாம் மீது மிகுந்த பற்று வைத்திருக்கிறேன்!
இந்த விசயத்தில் அவரது பதிலை எதிர் நோக்கியுள்ளேன்.

அலசல் அருமை!

அப்பு சொன்னது…[பதிலளி]

கோகுல்,
நானும் அதே நம்பிக்கையில்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]

சிறப்பாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள்....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]

மக்களின் பாதுகாப்புக்கு இன்னும் உத்திரவாதம் யாரும் தரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை...!!!

அப்பு சொன்னது…[பதிலளி]

வணக்கம் மனோ,
வாருங்கள்
பாதுகாப்பான வாழ்வுதானே முக்கியம்..

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்