14.1.11

பொங்கல் வாழ்த்துகள்

தமிழர் திருநாள் – பொங்கல் – வாழ்த்துகள்
  • பொங்கல் தமிழர் திருநாளில் ஒரு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இது தமிழர்களின் அடையாளம் என்று அழுத்திச் சொல்லலாம். அதோடு கூட இது தமிழர் புத்தாண்டாகவும் கொண்டாடப் படுவது கூடுதல் சிறப்பு.

  • சித்திரைத் திருநாளை ஆண்டின் முதல் நாளாகக் கொண்டாடி வந்தவர்கள் – நீண்ட நெடிய ஆய்வு, போராட்டம், விரக்தி, வேண்டுதல்களுக்குப் பிறகு அரசின் கட்டிடங்கள் விழாக் கோலம் பூண்டு மக்கள் இதை நமது புத்தாண்டாகக் கொண்டாட வழி வகுத்திருப்பது போற்றக் கூடியதே. ஆனாலும் நம்மில் பலருக்கு இது கலைஞர் மேலுள்ள வெறுப்பு காரணமாகவும் அல்லது மரபின் காரணமாகவும், சித்திரையை மாற்றுவதில் உடன்பாடற்று இருக்கிறோம். தவறான மரபில் ஊறிப்போய் அதிலே உழலும் நமக்கு மாறுவதும், மாற்றுவதும் கடினமே. நமக்கென இருக்கும் அடையாளங்கள் மறைந்து கொண்டிருக்கும் வேளையில் நமக்கென ஒரு புத்தாண்டாவது இருந்து விட்டுப் போகட்டுமே. அடையாளம் அழியாமல் இருக்கட்டும்.
  • தமிழக முதல்வரின் வேண்டுதலுக்கு இணங்க கேரள முதல்வர் அய்ந்து மாவட்டங்களுக்கு பதினைந்தாம் தேதி விடுமுறை விட்டிருப்பது சிறப்புச் செய்தி. அதற்குப் பதில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மன சாட்சியோடு நடப்பதே சரியான செயல் பாடாக இருக்கும்.
  • இது சூரியனுக்குப் பொங்கலிட்டு நன்றி தெரிவிக்கும் விழா. அதோடு சேர்த்து மற்ற வான் கடவுளர்கள், உழவுக்குத் துணை புரியும் அனைத்திற்கும் நன்றி செலுத்தும் விழா. சூரியன் எல்லாப் பண்பாடுகளிலும் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதும் – சூரியனே முதல் கடவுளாக பழமையான சமயங்களில் இருப்பதும் நாம் அறிந்ததுதான். பழைய எகிப்தில் ... அல்லது ஹீலேயோஸ் என்கிற கிரேக்க சூரியக் கடவுள், சமாஸ் என்கிற பாபிலோனிய சூரியக் கடவுள் ... இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழர்களாகிய நாம் நமது ஆதியை விட்டுவிடாமல் இருப்பது ஆச்சரியமே. ஆனால் சூரியன் என்பது நமது அரசியலோடு தொடர்பு கொண்டுள்ளதால் சூரியன் பற்றி நாம் யோசிப்பதையே விட்டுவிட்டோம்.“சுட்டெரிக்கும் சூரியன்” என்று மட்டுமே சொல்லப் பழகிப் போய் விட்டோம் – ஆனால் நமது பிரிவினைகளை சுட்டெரிக்க அனுமதிக்காமல் நமது சாதிகள், மதங்கள் மேல் கூரை கட்டப்பழகி விட்டோம். அதனின் “இயங்காமல் இயக்கும் தன்மை”, “வாழ்வாக்கம்” ... இன்னபிறக்களில் நம் கவனம் செல்ல இப்புதிய ஆண்டு வழி வகுக்கட்டும்.
  • ஏறக்குறைய, 320 கோடி ரூபாய் செலவில் இந்தப் புதிய ஆண்டில் அனைவருக்கும் [உழைக்காமல்] இலவசப் பொருட்கள் வழங்கப் படுகின்றன. உழைப்பாளர் தின வாழ்த்துக்களை கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும். எல்லாருக்கும் தவிர்த்து உழவர்களுக்கென மட்டுமேன்றிருந்தாலும் உழைப்பாளர் தினத்தன்றாவது அவர்களை மதிக்கிறோம் என்றாகி இருக்கும். இப்போது அதற்கும் வழியில்லை.
  • விவசாயத்தை மதிக்காமல் – விளை நிலங்களைப் பராமரிக்காமல் – அதற்கு வழியே விடாமல் – வெறும் ரியல் எஸ்டேட் பிசினஸ் – குளம் குட்டைகள் ஆக்கிரமிப்பு – அறைக்குள் மட்டும் கணனிகளின் அணிவரிசை – உணவு உற்பத்திக்கான முயற்சிகளில் இறங்குபவரை ஊக்கப் படுத்தாமல், நீராதார வளங்களைப் பெருக்காமல் இப்போது விலை வாசி உயர்வு – ஒரு நாள் பொங்கல் பொட்டலம் ஒன்றும் செய்யாது.உழைப்பாளர் அழியாமல் இருக்கட்டும்.
வாழ்த்துகள்


0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்