"எல்லாவற்றிற்கும் நான்தான் பொறுப்பு - கடந்த வரலாற்றிற்கு, எதிர்கால நிகழ்விற்கு எல்லாவற்றிற்குமே நான் பொறுப்பு" - இந்த உலகின் ஒவ்வொரு நிகழ்வும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டது அதன் வழியாய் என்னோடு தொடர்பு கொண்டது - என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தார் ஒரு ஞானி -
ஒருவிதத்தில் நானும் இந்த நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் - நடந்ததை மாற்ற முடியாது எனினும் இனிமேல் ஏதாவது செய்ய முடியும்.
அதே ஞானி சிசுகொலை என்பது தவறல்ல என்றபோது - சிசுகொலை செய்யவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறதா அல்லது அதை எதிர்க்கிற பொறுப்பு எனக்கிருக்கிறதா என்று புரியவில்லை. அனைத்தையும் நேசி என்று புல்லையும் பூண்டையும், மண்ணையும் மரத்தையும் நேசிக்க வேண்டிய நான் ஏன்....
இந்த அண்ட சராசரம் அனைத்தும் இங்கு நடக்கிற நிகழ்வு வழியாக தன்னையே அது சரி செய்து கொள்கிறது என்பது உண்மை என்றாலும் கூட-
போர், அடக்கு முறை, அடிமைத் தனம் இவைகளையெல்லாம் கூட நாம் இயற்கை தன்னைச் சரி செய்து கொள்கிறது என்று சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை.
சில தத்துவ ஞானிகள், தன்னுணர்வு பெற்ற ஞானிகள் - போர்களைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை செய்வதற்கும் ஒன்றும் இல்லை என்று சொன்னது நமக்குத் தெரியும். "காட்டிற்குள் சென்று ஒரு சிங்கம் மானை வேட்டையாடுவதை படம் பிடிக்கிற ஒருவன் வெறும் பார்வையாளனாய் தான் இருக்கிறேநானே தவிர அவன் எதையும் காப்பாற்றுவது இல்லை என்பது போலத்தான்" என்று சில ஞானிகள் சொல்லுவதில் தவறு இல்லைதான் -
ஆனால் அதைப்போலவே மனிதனும் அப்படித்தான் - மனிதன் போர் புரிகிற போது நாம் அதைப் பற்றி ஒன்றும் செய்வதற்கில்லை என்று சொல்லுகிற போதுதான் சிக்கலே. எல்லாம் தன்னை சரி செய்து கொள்கிறது என்றால் ஞானம் அடைந்த ஞானிகள் தாங்கள் மட்டுமே ஞானத்தை வைத்துக் கொண்டிருக்கலாமே - "யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்" என்று எம் ஞானிகள் சொல்ல வேண்டியதில்லையே! பிற மனிதனை ஞானத்திற்கு இட்டுச் செல்ல வேண்டிய கடமை இருக்கின்றது என்று கருத வேண்டிய தேவை இல்லையே?
கடவுள் நம்பிக்கையற்ற தத்துவவியலாளர்கள் கூட - மனிதப் பொறுப்புணர்வு பற்றிப் பேசினார்கள். ஆல்பர்ட் கமுஸ் என்ற பிரெஞ்சு எழுத்தாளன் - நான் இறக்கப் போகிறேன், நான் உதவி செய்கிறவர்களும் இறக்கப் போகிறார்கள் என்று தெரிந்தாலும் உதவி செய்வதை நான் நிறுத்த முடியாது என்று சொன்னான் - கடவுள் நம்பிக்கை இல்லாதவன்தான்.
ஸார்த் - (Sartre) என்கிற மற்றொரு பிரெஞ்சு தத்துவவாதி - நாம் சுதந்திரம் கொண்டவர்கள் நமக்கான பொறுப்பை நாமே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்று அறப் பொறுப்பைப் பற்றி பேசுகிற அவன் அஞ்ஞானி - அதாவது உயர் தத்துவத் தளத்தில் நாம் ஒன்றுமில்லாதவர்கள் தான் என்றாலும் சாமானியத் தளத்தில் மானுட மையம் என்கிற விதத்திலும் அப்படியே இல்லை என்றாலும் சார்தே போன்றோர் பொறுப்பு என்கிற விதத்திலாவது பேசியிருக்கிறார்கள்.அதாவது உயர் தளத்தை பின்னே வைத்து சாமானியத் தளத்தை முன்னே வைத்தார்கள்.
ஆனால் எப்படி ....?- எல்லாம் பிரம்மம் என்று நம்புகிற நமக்கு - இவைகள் நிகழத்தான் வேண்டும் என்று நாம் சொல்லி - நாம் இதைப் பற்றி ஒன்றும் செய்வதற்கு இல்லை என்று சொல்கிற போது - நாம் நமது அறப் பொறுப்பை தட்டித்தானே கழிக்கிறோம்.சிலர் ஞானம் அடையக் கூடத் தகுதி அற்றவர்கள் என்றுதானே பல ஞானிகள் கருதினார்கள் - இதுசாமானியத் தளமா அல்லது தத்துவத் தளமா?
இந்திய தத்துவங்கள் - மிகப் பெரிய பிரபஞ்சத்தின் மானுடனை மையப் படுத்தாத நிலை இருந்தது உண்மை என்பது மட்டுமல்ல அது எல்லாவற்றையும் மையப்படுத்தியது என்பதும் உண்மை.
அதற்காக அது மானுட விரோதப் போக்கை கொண்டிருந்ததா என்பதெல்லாம் பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட முடியாது. சில ஞானிகள் கொண்டிருந்தார்கள் - சிலரிடம் இல்லை.
நமது பண்பாட்டுச் சின்னங்களை, குறியீடுகளை காக்கின்ற அவசரத்தில் பல சமயங்களில் நாம் எல்லாவற்றையும் சரி என்றோ நியாயப் படுத்தவோ வேண்டிய அவசியம் இல்லை.
இரண்டு பக்கங்கள் - சாமானியத் தளத்தில் மானுட மையம் என்பதும் உயர் தத்துவத் தளத்தில் மானுடம் தாண்டி அனைத்தையும் மையப்படுத்துதல் என்பது மிகச் சரியான உண்மை.
ஆனால் பல சமயங்களில் உயர் தளம் என்பது வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ நமது ஞானிகளால் சாமானியத் தளத்தில் பயன் படுத்தப் பட்டிருக்கிறது என்பதையும் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். மானுட அறப் பொறுப்பும் மானுட நேயமும் மிக அதிகமாக நமது மண்ணில் ஞானிகள் நிகழ்த்தியிருக்கின்றனர் - வள்ளலார் போல..
அதே சமயத்தில் மனிதனை வெறும் ஜடமாக - அடிமையாக - மூடனாக நடத்தியதும் பல ஞானிகள்தான் என்பதையும் மறக்கக் கூடாது.
எது எப்படி இருந்தாலும் - நாம் இந்தப் பிரபஞ்சத்தின் மையமாக இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி - நமக்கென பொறுப்பும் , நாம் எல்லாவற்றோடும் இணைந்த நிலையில் இருக்கும் நிலை உணர்ந்தால் - நம் அறப் பொறுப்பும் மானுடத்திர்கான பொறுப்பும் - பிரபஞ்சப் பொறுப்பும் நன்றாய் உணர்வோம்.
வெறும் மானுட மையம் - மரம் அழிக்கும் இப்பிரபஞ்சம் அழிக்கும் - வெறும் பிரபஞ்ச மையம் மானுடம் அழிக்கும்.
0 comments:
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்