15.8.10

சுதந்திரம் - ? ? ? ? ?

 •  கனவில் கண்டேன் பல்வேறு கனிகள் தரும் ஓர் ஒற்றை மரம் - நம் தேசம் போலவே - நம்ப முடியவில்லை! 


  • சுதந்திர தினம்  - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி ஒரு போதும் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் இருக்காது... நல்ல சுதந்திரம்.

  • இது சுதந்திர தினக் கொண்டாட்டம் என்று சொல்வதை விடுத்து ஒருமைப் பாட்டை வலியுறுத்தும் தினம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

  • மீண்டும் மீண்டும் சொல்கிற போது எதுவும் உண்மையாக வாய்ப்பு இருக்கிறது. அல்லது கடினமான ஒன்றை மீண்டும் மீண்டும் சொல்கிற போது அது இலகுவாகிறது - அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகி விடுகிறது.

  • தேசிய ஒருமைப் பாடு என்று சொல்கிற போது - இந்தியாவை - United States of India - என்றாவது பெயரிடலாம். உள்ளுக்குள்ளேயே வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்லிக் கொண்டிருப்பதற்குப் பதில் உலக நாடுகளுக்கு இந்த உண்மையை எடுத்துரைக்கலாம். பெயர் மாற்றுவதால் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை. பெயரிடாமல் விட்டாலும் இந்த நிலை மாறிவிடப் போவதில்லை.

  • நாட்டைப் பற்றிக் குறை சொல்லாதே என்கிறார்கள் - சொன்னாலும், பல நாடுகளை விட இந்தியா மிகவும் உயர்ந்த நாடு - பதில் மொழி சொல்கிறார்கள். மீண்டும் கேட்டால் நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே - நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று சொல் - என்கிற கேள்வி வேறு! [அதெப்படி எப்போதுமே நமக்கு மட்டும் நமக்குக் கீழ் உள்ளவர்களைப் பார்த்து நாம் சுகத்தில் வாழ்கிறோம். மகிழ்ச்சிக்கு அது நல்லதுதான் ஆனால் வளர்ச்சிக்கு அல்லவே - அப்புறம்] 

  • சுதந்திரத்தில், சகிப்புத் தன்மையில், மக்களுக்கு நன்மை செய்வதில், போக்குவரத்து வசதியில், .... இதெல்லாம் இந்த நாட்டுத் தலைவர்களால் நடப்பதாகத் தெரியவில்லை - நாடு, மக்களால் நடப்பதகாவே தெரிகிறது. எந்த அரசு வந்தாலும் மக்கள் சகிப்புத் தன்மையோடுதான் இருக்கப் போகிறார்கள். விலை வாசி உயர்ந்தாலும் அமைதியைத் தான் இருக்கிறார்கள் - அடிமைத் தனம் இருந்தாலும் அமைதியாய்த்தான் இருக்கிறார்கள். ஊழல் நடந்தாலும் அப்படியே - கட்ட வேண்டிய பாலம் கட்டப்படாமலேயே முடிக்கப் பட்டாலும் அமைதிதான் - ரயில் விபத்தா, பாதுகாப்பின்மையா - காவல் துறையே மோசமானதாக இருக்கிறதா - அமைதிதான் - மீண்டும் மீண்டும் வரிசையாய் பன்னாட்டு நிறுவனங்கள் வந்து நம் வளங்களைச் சுரண்டவும், நமக்குக் கிடைக்காத வசிதிகள் எல்லாம் அவர்களுக்குக் கிடைத்தாலும் அமைதிதான்... இந்த நாடு இப்படி பல நாடுகளுக்கு மேலான நாடாக இருப்பதற்கு - இந்த நாடு அல்ல - நாட்டு மக்கள்தான் காரணம்- இந்தப் பெருமை நம்மையே சாரும்; நாட்டுக்கல்ல.  இனிமேல் யாரும் நம்மைக் கேட்கக் கூடாது "நாட்டுக்கு என்ன செய்தாய்" - இதை விட வேறென்ன செய்ய முடியும்? 

  • எல்லா தேசிய கட்டமைப்பிற்குப் பின்னும் ஒரு இரும்பு மனிதன் இருந்திருக்கிறான். அப்படி இருந்திருக்கவில்லையென்றால் இன்றைய உலக வரைபடத்தில் பல நாடுகளின் எல்லைக் கோடுகள் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்தியாவுக்கும் ஒருவர் இருந்ததாக வரலாறு சொல்லுகிறது. இரும்புக்கு இதயம் இல்லை - எவ்வளவு மோதினாலும் நாம்தான் உடைந்து போவோம். எனக்கென்னவோ இந்தியாவை ஆளும் எல்லாருமே இரும்பு மனிதர்கள் போலவே தெரிகிறார்கள்.

  • நாம் நாட்டின் பிரதமர் - இன்றைய உரையில் "ஆம் -விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப் பட்டிருப்பது உண்மைதான்" என்று கூறியிருக்கிறார். இரும்பு மனிதர்கள் என்பது சரிதானா - அல்லது அன்றைய அரசர்கள் போல நாடு எப்படி இருக்கிறது என்று அமைச்சர்கள் ஒற்றர்கள் வழியாக கேட்டுத் தெரிந்து கொள்ள இவ்வளவு நாளாயிற்றா? அல்லது இவர் ஒத்துக்கொண்டால்தான் அது உண்மை என அறியப்படுமா? சரி.... உண்மை - என்ன செய்யலாம்? நாம என்ன செய்யலாம் இந்த நாட்டுக்கு.

  0 comments:

  கருத்துரையிடுக

  பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்