13.8.10

சாதி குறித்து சில வினவுகள்

சாதி குறித்து சில வினவுகள்

இது நமது மண்ணிலிருந்து அவ்வளவு சுலபமாய் மறைந்து விடுமா என்ன?
நீண்ட நெடிய வரலாறு - அது மறையாது என்றால் அதை ஏற்றுக் கொள்வதும் - அதைப்பற்றி கேலி, கிண்டல் மற்றும் பகடி செய்வதும் - சாதிப் பிரச்சனை ஒழிகிறதோ இல்லையோ நமது இரட்டை வேடத்தையாவது கலைக்கும் அல்லவா?

சில வாரங்களுக்கு முன்னாள் திரு -ஜெயமோகனின் பக்கங்களில் படித்த சில கட்டுரைகள் பல நாட்களாக என் மனதிற்குள்ளேயே ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பற்றி சில கேள்விகள் - சில விளக்கங்கள் தேவைப் பட்டன. அவரிடம் கேட்பதற்கு முன்பு எனது கேள்விகளைப் பதிவு செய்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டதாலும் - கேள்விகளை ஒழுங்காக கோர்த்துக் கொள்வதற்கு அவகாசம் தேவைப் படுவதாலும் - இப்போதைக்கு இங்கே பதிவு செய்வது மட்டுமே உத்தேசம் எனப் படுகிறது.

அதுமட்டும் அல்லாமல் -  ஒரு கருத்தைப் பற்றிய பல பார்வைகள் உள்ளன - இதில் யார் சரி யார் தவறு என்பது அல்ல - ஜெயமோகன் கூறியுள்ள கருத்துக்கள் பல ஒரு மாற்றுப் பார்வையை வைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. எனவே சரி தவறு என்கிற விவாதத்திற்குள் செல்லாமல் இன்னோர் பார்வையை பதிய வேண்டிய தேவை உள்ளதால் அதைப் பதிகிறேன்.

இதற்கு முன்னோட்டமாக இந்தக் கட்டுரையை வாசிப்பது அவசியம்.

katturai 1 

சிறில் அலெக்ஸ் சொல்லிய ஒரு கருத்துக்கு மாற்றாக ஜெயமோகன் அவர்கள் எழுதிய கட்டுரை இது - அலெக்ஸின் இரண்டு கருத்துக்கள்: சாதிபற்றி கிண்டல் செய்வது உயர் சாதிகளுக்கே உரித்தானது - மற்றவர்கள் இதுபற்றி வெளியில் பேச மாட்டார்கள் - இரண்டாவது சாதி மறைய வேண்டியது எனவே அது பற்றி பேசிக்கொண்டிருக்கக் கூடாது .....

கேரளாவில் இன்னும் சாதிப் பெயர் சேர்த்துதான் சொல்கிறார்கள் - தமிழகம் இதை மறந்து விட்டது என்று சொல்கிறபோதும்  சாதியின் உணர்வுகள் அதிகமாக ஆகியிருக்கிறது என்று சொல்கிற போதும் அதை நம்மால் மறுக்க முடியவில்லை. அவர் சொல்லுவது சரிதான். கேரளாவில் சாதி பற்றி பகடி பண்ணுகிற அளவிற்கு அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள் - அதனால் சாதி இருந்தாலும் அதை வெளியில் காட்டினாலும் பகடி பண்ணுவது சதி உணர்வுகளிலிருந்து மீண்டு வர நல்ல வழி என்று ஜெயமோகன் இக்கட்டுரையில் முன்வைக்கிறார்.

 இதில் தமிழ் மக்கள் இரட்டை வேடம் போடக் கற்றுக் கொண்டுள்ளோம் என்று அவர் சொல்லுவது முற்றிலும் உண்மை. சாதி பற்றி வெளியே பேசத் தயங்குகிறோம் ஆனால் எல்லாமே சாதியின் வட்டத்திற்குள் தான் தீர்மானிக்கப் படுகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

சாதியைப் பற்றிய புறவய உண்மையான வரலாறு இல்லை என்பதைப் பற்றி வருத்தப் பட்டு பின்வருமாறு கூறுகின்றார்.
"உதாரணமாக தமிழினி மாத இதழில் ராமச்சந்திரன் அவர்கள் வேளாளர்களைப்பற்றி எழுதி வரும் கட்டுரை. புறவயமான ஓர் ஆய்வு அது. ஆனால் அதன்பொருட்டு இதழாளருக்கு மிரட்டல்கள் வந்தன. அந்த வகையில் தமிழக பிற்படுத்தப்பட்ட ஏதாவது சாதிகளைப்பற்றி எழுதியிருந்தால் எழுத கை இருந்திருக்காது. அத்தகைய பல முன் நிகழ்வுகள் இங்கே உள்ளன."

சிலர் ஒன்றுமில்லாத பெருமிதங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் - அதைச் சரி செய்ய வரலாறு உதவும் என்று சொல்வது சரிதான் - ஆனால் யார் ஒன்றுமில்லாத பெருமிதங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு படுத்தப் பட வேண்டிய ஒன்று.

வரலாறு - தெரிந்த வரலாறு - ஒரு மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஒரு சாரார் - ஒரு சாதியைச் சார்ந்தவர்கள் என்பதனால் அவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானார்கள் என்கிற போது அத்தகைய கொடுமைகளுக்கு ஏதோ ஒருவிதத்தில் நாமும் பொறுப்பு மிக்கவர்களாக உள்ளோம். சில வரலாற்றுக் கொடுமைகள் தவறு என்று சொல்கிற அளவிற்கான உண்மையை - ஏற்கனவே சொல்லியிருந்தாலும் - ஒவ்வொரு புதிய கட்டுரையிலும் அதைக் கோடிட்டுக் காட்டுவது அவசியம் - இல்லையெனில் சாதி என்பதை இவ்வாறு பகடி செய்யலாம் என்று சொல்லுவது நமக்குச் சுலபமான விஷயம்.

"அவர்கள் அதை எங்கும் விவாதிப்பதில்லை. ஆகவே எங்கும் அது மறுபரிசீலனைக்கு ஆளாவதுமில்லை. இது ‘உயர்’சாதி முதல் ‘தாழ்ந்த’ சாதி வரை எல்லாருக்கும் பொருந்தும்." உயர் மற்றும் தாழ்ந்த என்கிற சொற்களை மேற்கோள் இட்டு - அவைகள் உயர்ந்தவை சில தாழ்ந்தவை என்கிற உண்மையை மீண்டும் முன்மொழிகிற பொறுப்பு தெரிகிறது. வரலாற்றில் சில உயர்த்தப் பட்டன - பல தாழ்த்தப்பட்டன என்பதை மீண்டும் உணர்த்துவது அவசியம் என்பதையும் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

ஆதிக்க நிலையில் இருப்பவர்களுக்கு சாதியைப் பகடி செய்யும் நிலை இயல்பாய் வருகிறது.

அதே சமயத்தில் சாதியைக் கடந்து செல்ல அதை மறைப்பதும் - ஒதுங்கி ஓடுவதும் சரியல்ல என்பதை - ஜெயமோகன் அவர்களோடு சேர்ந்து ஆமோதிக்கிறோம் -

சாதியைப் பற்றி பகடி செய்ய வேண்டும் என்று சொல்கிற ஆசிரியர் - "தாழ்த்தப் பட்ட சாதிகளைப் பற்றி எழுதியிருந்தால் எழுத கை இருந்திருக்காது" என்று சொல்கிற போது சில சாதிகள் இப்படித்தான் என்கிற பகடி நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் இறுதியில் ஜெயமோகன் சொல்லுவது போல - சாதியை பற்றி நவீன மனிதன் பெருமையோ இகழ்ச்சியோ கொள்ள முடியாது என்கிற நிலை வரும் என்று நாம் எதிபார்க்க முடியுமா என்பதுதான் புரியவில்லை - ஒன்று இருக்கும் ஆனால் அது பெருமைக்கு உரிய விஷயமாகவோ அல்லது இகழ்ச்சிக்கு உள்ள விஷயமாகவோ இருக்காது என்பது எப்படி?

"சாதி என்றும் அழியாது. நவீன முதலாளித்துவம் மூலம் சாதியின் அடுக்குமுறை காலப்போக்கில் பொருளிழக்கும்போது பண்பாட்டு நீட்சி என்ற முறையில் அது மேலும் முக்கியத்துவம் பெறும் என்றே நான் நினைக்கிறேன். உலகம் எங்கும் ஏதேனும் முறையில் மனிதர்களிடம் பிறப்பு சார்ந்து உருவாக்கப்படும் பண்பாட்டுச்சின்னங்கள் நீடிக்கத்தான் செய்கிறன. அவற்றை உணர்ச்சிகள்சார்ந்து ஆராயாமல் அறிவார்ந்து அணுகும் முறை மட்டுமே புதிதாக உருவாகி வரும். அன்று எவரும் சாதிகுறித்து வெட்கவும் மாட்டார்கள் பெருமிதம் கொள்ளவும் மாட்டார்கள்."

பிறப்பு சார்ந்து உருவாக்கப் படும் பண்பாட்டுச் சின்னங்கள் - சாதியும் - கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.  பிறப்பினால் ஒருவன் ஒரு சாதிக்குரியவனாகவே இருப்பான் - ஆனால் அதைப் பற்றிய இகழ்ச்சியோ புகழ்ச்சியோ இருக்காது ----


ஆனால் பண்பாட்டுச் சின்னங்கள் சாதி சார்ந்து இல்லாத நிலை இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.


இதைச் சார்ந்த இன்னும் பல கேள்விகள் உண்டுதான். அதைத் தொடர்ந்து உள்ள இந்த இரண்டாவது கட்டுரையையும் வாசியுங்கள்...

Katturai 2


இந்தக் கட்டுரையையும் அதற்குப் பின் வந்திருக்கிற பின்னூட்டங்களையும் பார்க்கிற போது - ஏறக்குறைய அதில் பெரும்பான்மையானோர்   - 'உயர்' குடிமக்கள்  - அவர்களே ஜெயமோகனின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டது போலத் தெரிகிறது. அவரவர்களுக்குத் தான் வெளிச்சம்.


தலித் நண்பர்கள் மிகவும்  புண்படும் நிலையிலேயே தங்களைப் பார்க்கிறார்கள் என்கிற ஜெய மோகனின் கருத்து சரிதான் - இது பல நூற்றாண்டுகளாக உருவாக்கப் பட்ட வடு  - அதற்காக பார்ப்பனரும் தங்களை புண்படும் நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதும் உண்மையானால் - அதிகாரப் பீடத்தில் இருந்தவருக்கு புண்படும் நிலை வந்தால் - அடிபட்டவன் அவ்வளவு எளிதாய் வெளிவர முடியாது....


பின்னூட்டங்களைப் பாருங்கள் -


ஜெயமோகனின் கருத்துக்கு மாற்றுக் கருத்து எழுதியவருக்கு பல பேர் வசை பாடுவதைப் படிக்க இதையும் பாருங்கள்...Dondu Blogspot


சாதி - அதைப் பற்றி எப்படி எழுதினாலும் எதிர்வினைகள் இல்லாமல் இருக்க முடியாது. எவ்வளவு முயற்சிகள் நடந்தாலும் அது நம் கண் முன்னே இல்லாதது போலத் தோன்றினாலும் எல்லாவற்றிலும் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. 


என்ன சொல்லமுடியும் - சாதி தேவையற்றது என்று வீரவசனம் பேசலாம் - ஆனால் நாம் அதற்குள்ளேயே தான் இருக்கிறோம். தலித் எழுச்சி பார்த்து கலங்குகிற சிலர் - சாதி பற்றிய பேச்சு தேவையில்லை என்று கூடச் சொல்லலாம் - சாதியற்றவர்களின் ஒரு அடையாளம் இப்போது சாதியாய்த் தெரிகிறது.


உயர்சாதிக் காரர்கள் கூட தங்கள் சாதி அடையாளத்தை விட முன்வரலாம் ஆனால் தலித்துகள் அவ்வளவாக இல்லை என்று சொல்லலாம் - அடையாளம் அற்றவனாய் இருந்தபோதும் அவன் அமைதியாய் இருக்க வேண்டும் அடையாளம் கொள்ளும் போதும் அவன் அதை இழக்க வேண்டும் என்பது மேட்டிமை எண்ணம் தானோ?


சாதி அடையாளம் பற்றிப் பேசுகிற போது தலித்துகள் மனம் புண்படுவது போல பல பார்ப்பனர்கள் தங்கள் உரிமை மறுக்கப் படுவதை உணர்கிறார்கள் - உண்மைதான் - வரலாறு ...மாற்றுக் கருத்து - புதிய பார்வை என்று சொல்லும் போது கூட மறு எதிர்வினையைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில்தான் "உயர்" குடிமக்கள் இருக்கிறார்கள் - ஆனால் வாருங்கள் தோழர்களே நாம் மட்டும் நம்மைப் பகடி செய்து கொள்வோம்.


0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்