18.1.11

தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு.
நாம் அதைப் பற்றிக் கவலைப் படுவது இல்லை.
நமக்கென்று இருக்கவே இருக்கிறது ஆங்கிலப் புத்தாண்டு – அரையாண்டு விடுமுறையில் வருவதால் நன்றாகக் கொண்டாடவும் முடிகிறது.

அது மட்டுமல்லாமல் ஒரே ஆண்டில் எத்தனைப் புத்தாண்டுதான் கொண்டாடுவது என்ற கேள்வி வேறு எழுகிறது? ஆங்கிலப் புத்தாண்டு, பிறகு, தமிழ் புத்தாண்டு; பிறகு தெலுங்குப் புத்தாண்டு. சிறு பிள்ளைகள் போல நினைத்தால், அவைகளெல்லாம் வெறும் விடுமுறை நாட்களாகவே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அதற்குப் பின்புலம் எதுவும் உண்டா என்பது புரியாமலே இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் காரணம் அடையாளம்தான் [identity]. நமது அடையாளம் எது என்பது புரியாத நிலையில் நாம் இருக்கிறோம். மொழி மட்டுமா அல்லது அதனோடு தொடர்புடைய விழாக்களா / பண்பாட்டுக் காரணிகளா , அல்லது சமயமா, அல்லது தேசமா, உலகமா? எதில் நம் அடையாளம் இருக்கிறது. எல்லாமே என்றால் தனித்துவ அடையாளம் என்று ஒன்று இருக்க வேண்டுமே? அது எது? எதனடிப்படையில் அதை வரையறுப்பது? புத்தாண்டுக் கேள்வியாய் இது இருக்கட்டும்.

வேறு விடயத்திற்கு வருவோம்.
நாம் தமிழ் புத்தாண்டை கொண்டாட விருப்பம் இல்லாதவர்கள் என்று நானே எண்ணிக் கொள்கிறேன். எனவே அதற்கான தர்க்கத்திற்கு வருவோம்.
சித்திரையைத் தான் இத்தனை ஆண்டுகளாய் நாம் தமிழர் புத்தாண்டு என்று எண்ணிக் கொண்டிருந்தோம். எனவே அதை கலைஞர் மாற்றி விட்டார் என்பதனால், அந்தக் கோபத்தினால் இந்தப் புத்தாண்டு வேண்டாமென்றால் நாம் தமிழர் வரலாற்றை [இதை எப்போது முடிவு செய்தார்கள், யார் யார் செய்தார்கள் – எதற்காக முடிவெடுத்தார்கள் என்பது பற்றியெல்லாம்] ஆழ்ந்து படிக்க வேண்டியிருக்கிறது. அ.தி.மு.க நண்பர்கள் இதைக் கொண்டாட மாட்டார்கள். அம்மையார் இதை அனுமதிக்க மாட்டார். இதுவரை ஏப்ரலில் வாழ்த்துச் சொன்ன கலைஞர் மூன்று ஆண்டுகளாய் “தை”யில் வாழ்த்துச் சொல்கிறார். மீண்டும் அம்மையார் வந்தால் மீண்டும் இந்தப் புத்தாண்டு ஏப்ரலில்தான் கொண்டாடப் படவேண்டும் என்று சட்டம் இயற்றினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அரசு அலுவலகங்களுக்கு தை மாதம் நக்கிற அலங்கார விளக்குகள் சித்திரைக்கு மாறும். அது “நந்தன” ஆண்டு சித்திரையில் [ஏப்ரல் 14 ல்] தொடங்கலாம்.

அல்லது "புத்தாண்டு வாழ்த்துக்கள்" சற்று இடைவெளி விட்டு - "மூன்று மாதங்களுக்கு முன்பாகவே" என்று சோ போல கிண்டல் அடிக்கலாம்.
வேதங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்ட சமஸ்கிருத வருடங்கள் ஏப்ரலில் தொடங்குகிறது. கடந்த ஆண்டு விரோதி ஆண்டு. இப்போது விக்ருதி ஆண்டில் இருக்கிறோம். இது பங்குனி மாதம் முடிந்து “கர” ஆண்டு சித்திரையில் தான் தொடங்குகிறது. எனவே அப்போதுதான் தமிழ் ஆண்டு தொடங்குகிறது என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. “இந்து இந்தி இந்தியா” பற்றி நிறைய அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

வெற்றுச் சடங்காககிப் போன இந்தப் பொங்கலைக் கொண்டாடித்தான் ஆக வேண்டுமா என்ற வேதனை இருப்பதால் இப்பொங்கல் விழாவை கொண்டாட மனதில்லை என்றால் சடங்காக இல்லாமல் உண்மையான பண்பாட்டு விழாவாய்க் கொண்டாட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.
அல்லது
இதைக் கொண்டாடுகிறவர்கள் என்றால் எதற்காக இந்த விழா அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து கொண்டாடுவதும் முக்கியமானது. மொழி என்பது வெறும் தொடர்பு இணைப்பான் – எனவே இந்த மொழி பேசுகிறவர்கள் கொண்டாடுவது என்கிற மேலோட்டமான புரிதல் மட்டுமே போதாது. ஏனென்றால் விழாக்களுக்கு மட்டுமே நாம் பேர் போனவர்கள் – எனவே இதன் சிறப்பும் நமக்குப் புரியாது.

ஆக என்ன செய்யலாம். இதை எழுதிய என்னை இரண்டு திட்டு திட்டிவிட்டு வேறு வேலை இருந்தால் செய்யலாம்: அல்லது இந்தப் பண்பாட்டு விழாவை பொருள் உணர்ந்து கொண்டாடலாம். பொங்கலாம்.
இது வெறும் புத்தாண்டு மட்டுமல்ல – அடையாள விழா! ஆனால் அடையாளம் பற்றிய நீண்ட விவாதமும் தேவைப்படுகிறது. விவாதிப்போம்.
வாழ்த்துக்கள்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்