11.8.11

கலவரம் - அமெரிக்கா - கடன் அன்பை முறிக்கும்?

வளர்ந்த நாடுகள் என்று மார்தட்டிக்கொண்ட இரு நாடுகளுக்கு பலத்த அடி விழுந்திருக்கிறது. உலக பொருளாதாரத்தின் வல்லரசு என்று கருதப்பட்ட ஒரு நாடு - அமெரிக்கா - தனது கடன் வரம்பை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டது. அதன் வழியாகவே அது உடனடியாக மிகப் பெரிய இக்கட்டிலிருந்து தப்பிக்க முடிந்தது.காவல் துறையினர் செய்த ஒரு தவறு ஒருவரின் உயிரைக் குடிக்க இங்கிலாந்தில் மிகப் பெரிய கலவரம் வெடித்திருக்கிறது. ஏதோ ஒரு வேகத்தில் நடந்த கலவரம் என்று எண்ணி விட முடியவில்லை.
இன்று அமெரிக்கக் கலவரம் பற்றி -

அமெரிக்கா என்ற உடன், வானளாவிய கோபுரங்களும், வழுக்கிச் செல்லும் சாலைகளும், மின்னொளி நகரங்களும், ஹாலிவுட் தொழில் நுட்பம், நாகரிகத்தின் உச்ச கட்டம் என எல்லாரையும் நினைக்க வைத்தது மட்டுமல்ல – இப்படித்தான் ஒரு நாடு இருக்க வேண்டும் என்ற ஒரு நிலைக்கு எல்லாரையும் மயக்கி வைத்திருக்கிறது. ஷங்கர் படங்களில் அந்த தாக்கம் தெரியும்.
இந்த மயக்கத்தில் அமெரிக்கர்களும் இருந்தார்கள் – அமெரிக்க மோகத்தில் [நாம் எல்லாரும்தான்?] இருந்தவர்களும் மயக்கத்தில் இருந்தார்கள். இந்தப் பொருளாதார நெருக்கடி என்பது எல்லாரையும் மயக்கத்தில் இருந்து எழுப்பும் மருந்து என்றே என்றத் தோன்றுகிறது.

அமெரிக்கர்களைப் பொருத்தவரை அவர்களது மமதைக்குக் கிடைத்த அடி – அம்மாவுக்கு நேற்று கிடைத்தது போல. ஊரு உலகத்துக்கு எல்லாம் கட்டப் பஞ்சாயத்துப் பண்ணி லோக்கல் பஞ்சாயத்துல கோட்டை விட்ட கதைதான். கோடிக்கணக்கான டாலர்கள் இன்னும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் விரயமாகிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க மமதையில் இருப்போர் கொஞ்சம் விழித்துக் கொள்வது நல்லது. கடன் வாங்கிக் கடன் வாங்கித் தனது பொருளாதாரத்தை மேல் நோக்கி வைத்திருப்பது – மேக்-அப்பு கதைதானே. எவ்வளவு நாளைக்குத்  தான் சாயம் பூசிக்கிட்டே இருக்க முடியும். அப்படி என்னய்யா கடன் வாங்கி சாயம் பூசி? ஒரு மனிதன் எப்போது செயற்கையாய் தனது அழகைக் கூட்ட முயற்சிக்கிறானோ அது அவனுக்கு ஆபத்திலேதான் முடியும் – என்ன இருக்கிறதோ அதை வைத்து பிழைப்பு நடத்துவது என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. அமெரிக்கா அதற்கு நல்ல உதாரணம்.

இந்தியாவும் அமெரிக்கக் கடன்பத்திரம் நிறைய வாங்கி வைத்திருக்கிறதே – நாளைக்கு என்ன ஆகுமோ? இந்த வீழ்ச்சியிலிருந்து இந்தியா எதுவும் கற்றுக் கொள்ளுமா என்பது தெரியாது. புதிய பொருளாதாரக் கொள்கைதான் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு வழி வகுத்தது என்று எல்லாரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவின் கதிதான் நமக்கும் நாளைக்கு. இதற்குப் பிறகுதான் அளவுக்கு அதிகமான ஊழலையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
உலகமயமாக்கல் என்கிற ஒரு மாய வலையில் நாம் எல்லாருமே சிக்கிக் கொண்டிருக்கிறோம். அதில் இருந்து நாம் எப்போது விழிக்கிறோமோ அப்ப தான் நாம் தப்பிக்க முடியும்.

இன்னைக்கு பொருளாதாரத் தரம் நம்ம நாட்டில உயந்திருக்கு என்று சொல்கிறவர்கள் எல்லாரும் கடன் அட்டை வைத்திருப்பவர்கள்தான் [என்றே நான் நினைக்கிறேன்]. எல்லாவற்றையும் கடன் அட்டை வழியாகத் தேய்க்கிறோம். வருமானம் உயர்ந்ததால் மக்களுக்கிடையே இருந்த இடைவெளி பன்மடங்கு உயர்ந்தது [முன்பு பணக்காரர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்தது இப்போது அதிகமாய் இருக்கிறது – அதோடு கடனும் அதிகமாய் இருக்கிறது]– ஒரு மனிதன் கடன் வாங்கி கார் வாங்குகிறான் – மாத மாதம் வட்டியோடு சேர்த்து திருப்பிக் கட்டிகிறான் – அதோடு வீடு வாங்குகிறான் – அதற்கும் கடன் வாங்குகிறான் – இப்போது வீடு இருக்கிறது, கார் இருக்கிறது, ... இருக்கிறது எல்லாவற்றிற்கும் வட்டியோடு சேர்ந்து கடன் இருக்கிறது – வெளியிலிருந்து பார்க்கிறவனுக்கு – இருந்தா இப்படி இருக்கணும் என்று தோன்றுகிறது. அமெரிக்கா அதைத்தான் செய்தது – இந்தியா அதைத் தான் செய்து கொண்டிருக்கிறது – நாமும்தான்.

முன்பு ஒரே வீட்டில் எல்லாம் இருந்தோம் – இப்ப அப்படி இல்லை. எல்லாம் தனித் தனி – இனி ஒரு வீட்டில் எத்தனை பேரோ அத்தனை கார் – அவ்வளவு கடன் – அளவுக்கு மீறிப் போகிற போது மஞ்சள் நோட்டீஸ் கொடுக்க வேண்டியதுதான் – தனி ஆள் கொடுக்கலாம் – அல்லது பிசினஸ் பார்ட்டி கொடுக்கலாம். ஒரு அரசு கொடுக்க முடியுமா – எனக்குத் தெரியலை – அப்படிக் கொடுக்க முடிந்து அமெரிக்கா மஞ்சள் நோட்டீஸ் குடுத்தால் பாவம் – அதிகமா பாதிக்கப்படுவது இந்தியாவாத் தான் இருக்கும் [ அதிகமா அமெரிக்காவுக்குக் கடன் கொடுத்த நாடுகளில் இந்தியாவும் இருக்கே!]

டாலருக்கு ஏற்பட்ட கதி இன்னும் சில நாட்களில் ஈரோ –வுக்கு ஏற்படும் – ஜோதிடம் ! 

கடன் அன்பை முறிக்கும் என்று நம்ம ஊரில எல்லாம் முன்பு எழுதியிருப்பார்கள் – இன்றைக்கு கடன் இல்லையென்றால் வாழ்வே இல்லை என்ற நிலைக்கு நம்மை எல்லாரும் சேர்ந்து தள்ளியிருக்கிறார்கள் – நாமும் நம்மையே தள்ளிக் கொள்கிறோம்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்