சளி புடிச்சா சனியன் புடிச்ச மாதிரின்னு சொல்லுவாங்க.
அது வந்தா ஒன்னும் செய்ய முடியாது. வேற யாரும் இதை பங்கு போட்டுக் கொள்ளவும் முடியாது. தனியாய்த் தான் சமாளித்தாக வேண்டும்.
தும்மல் தொடர்ந்து வரும். உட்கார முடியாது. உட்கார்ந்தால் மூக்கு ஒழுகும். படுக்கமுடியாது. படுத்தால் மூக்கடைக்கும். ஒரு பொசிஷன்ல மட்டும் லேசா சுவாசிக்க முடியும். அதைக் கண்டு புடிக்கிற வரைக்கும் வேற எதுவும் செய்ய முடியாது.
யோசிக்க கூட முடியாது [என்னமோ நாம பெரிய சாக்ரடீஸ் மாதிரி அப்படின்னெல்லாம் இல்லை]. என்ன சொல்ல வர்றேன்னா வேற எதைப் பத்தியும் யோசிக்கிறது இல்லைன்னுதான்.
அதாவது மாத்திரை போட்டா ஒருவாரம் - போடலைன்னா ஏழு நாள். அதுனால சளி எப்பப் போகும்னு யோசிக்கிறதே இல்லை. யோசனை எல்லாம் அந்தப் பொசிஷனைக் கண்டு பிடிக்கிறது. இப்படி ஒருக்களிச்சுப் படுத்தா சரியா - இல்லை அப்படியா? ஒன்னும் சரியில்லையே. வேற என்ன செய்யலாம். விக்ஸோ அல்லது அமிர்தாஞ்சனோ மூக்குல தடவி - ஒருக்களிச்சுப் படுத்தா எப்படி இருக்கும். அட! விக்ஸ் தடவிப் படுத்தாப் பரவாயில்லை. ஓகே.
ஒகே. இனி சளி வந்தால் விக்ஸ் (அ) அமிர்தாஞ்சன் மற்றும் ஒரு சரியான பொசிஷன். வேற எதைப் பற்றியும் யோசிக்கக் கூடாது. அந்தச் சரியான சற்றைய நேரம் மட்டுமே கண்ணில் தோன்றி மறையும்.
அதைச் சரியாய் கண்டு பிடித்து உறங்கிவிட்டால் காலை வரைக் கவலை இல்லை.
நாட்டைப் புடிச்ச சனியன் விடவே விடாதான்னும் சொல்லுவாங்க.
அதென்ன நாட்டைப் புடிச்ச சனி ? அது என்னன்னு தெரியாட்டியும் என்ன பண்ணும்னு நமக்குத் தெரியும்.
யாரும் எதையும் பங்குபோட்டுக் கொள்ள முடியாது. சனியனைத் தனியாய்த் தான் எதிர்கொள்ளணும். விலைவாசி உயர்வா, மீனவர் படுகொலையா, சாதியின் ருத்திர தாண்டவத்தால் கொலையா, பெண்கள் அடிமைத்தனமா எதுவாய் இருந்தாலும் தனியாய்த் தான் எதிர் கொண்டாக வேண்டிய சூழலாகிவிட்டது.விலை வாசி விண்ணைத் தாண்டிவிட்டது. மீண்டும் கீழே வருவாயா என்று காத்திருக்க வேண்டியுள்ளது.
இவ்வளவு மோசமாக இருக்கிறதே, என்ன செய்ய முடியும். ஏதாவது செய்ய முடியுமா?
போராடினால் போலிஸ் அடிக்கிறது. சும்மா இருந்தால் மனசாட்சி கொல்கிறது. உட்காரவும் முடியலை, படுக்கவும் முடியலை.
ஏதாவது செய்தாலும் ஐந்து வருடங்கள் கழித்துதான் மாற்றம் நிகழும். இல்லையென்றால் ஆள்பவர்களின் ஆட்சிக்காலம் முடிந்தபின்தான் சரியாகும். மாத்திரி சாப்பிடலாமா வேண்டாமா?
ஆக என்ன செய்யலாம் - அந்தப் பொசிஷன்ல எனக்கு எப்படி ரிலீப் கிடைக்குன்னு பாக்கலாம். சிலசமயம் கிடைக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கினால் ரிலீப் வருகிறது. சிலசமயம் என் ஓட்டுக்கான அந்த சில ஆயிரங்களை வாங்கினால் ரிலீப் கிடைக்கிறது.
அதன்பிறகு காலை வரை கவலையில்லாதது மாதிரி பணம் தீரும் வரை ரிலீப்தான். என்ன சலிக்கு ரிலீப் தினமும் நடக்கலாம். சனியன் ரிலீபுக்கு ஐந்து வருடம் ஆகலாம். அவ்வளவே.
நாட்டைப் பிடிச்ச சனியன் நாமளா - அரசியல்வாதிகளா - அமைப்பு முறையா?
ஆனால் சளி காற்றில் பரவுவது போல; ஒரு ஆளிடம் இருந்து வேறோருவனுக்குப் பரவுவது போல - ஆட்சி மாறினாலும் சனியன் மாறுமா என்பதுதான் தெரியவில்லை.
0 comments:
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்