5.2.11

தச்சூரில் போராட்டம்

22 ஜனவரி இறந்த வேளாங்கண்ணி என்பவரை முன்னிறுத்தி மீண்டும் தச்சூரில் போராட்டம் தொடங்கியிருக்கிறது.
இதை எப்படி அணுகுவது? அது கிருத்தவ மக்களுக்குள் நடந்த இரு அணிகளுக்கிடையேயான ஒரு பிரச்சனை என்று சொல்லலாம். ஆனால் இதை அங்கிருக்கிற ஒரு சிறு பிரச்சனையாக மட்டுமோ அல்லது கிருத்தவர்களுக்குள்ளேயான   ஒன்றாகக் குறுக்கிவிட முடியாது.

இறந்தவர் தலித் என்பது செய்தி. இறந்த தலித் ஒருவரை ஆலய வளாகத்திற்குள் புதைக்கலாமா இல்லையா என்பதுதான் பிரச்சனை. இது வெறும் கல்லறைப் பிரச்சனையாக மட்டும் பார்த்துவிட முடியாது. திருச்சியில் - நகரமயமாக்கப் பட்டிருக்கிற ஒரு ஊரிலேயே கல்லறைகளுக்கிடையில் உள்ள சுவற்றை அகற்ற முடியாத அவலம் இருக்கிற போது ஒரு கிராமத்தில் இந்தப் பிரச்சனை சர்வ சாதாரணம் என்று சொல்லிவிட முடியாது.

இதில் மிகவும் கொடுமையான செய்தி - தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்கும் போது நிச்சயம் பாதிப்பு இருக்கும். உயிரைக் கூட கொடுக்குமளவுக்கு இருக்கும். ஆலய வளாகத்திற்குள் புதைப்பதற்கு குழி தோண்டிய இராஜேந்திரன் என்பவரை ஆதிக்க எண்ணம் கொண்ட உயர்ந்த சாதி என்ற எண்ணம் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றுவிட மீண்டும் அங்கே விஸ்வரூப பிரச்சனை.



 இது ஒரு ஊருக்கான பிரச்சனை மட்டுமல்ல - இது பிரச்சனையும் அல்ல. இது போராட்டம். சில உயிர்களைக் கொடுத்துத் தான் பின் வரும் சந்ததிக்கென சமத்துவ சமுதாயத்தை நிலை நாட்டும் நீதிக்கான போராட்டம் - உரிமைக்கானப் போராட்டம்.
சாதி இல்லை என்பவர்களும் - சமத்துவ சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பவர்களும் மீண்டும் வெட்கித் தலை குனிய வேண்டிய செயல்.

அகன்ற கண்கொண்டு  எழுதுபவர்கள் எல்லாம் இச்செய்தி பற்றி ஒன்றும் எழுதாமல் இருப்பது எதைக் காட்டுகிறது? இந்தக் கொடுமைஎல்லாம் அவர்கள் கண்களுக்குத் தெரிகிறதா இல்லையா?

மனிதன் ஒன்றாக வாழத் தான் முடியவில்லை - செத்த பிறகும் கூட அருகருகே புதைக்கக் கூட முடியவில்லை என்றால், அதை என்னவென்று சொல்வது. கல்லால் எறிவதே பாவம் என்றவன் இயேசு - இங்கே கல்லும் கொண்டு, ஆளையும் கொள்வது மிகக் கொடுமை.  வழக்கம் போல நீங்கள் செய்வதியே செய்யுங்கள் என்று அமைதி நிலைநாட்டிகள் சொல்வது அதைவிடக் கொடுமை. தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று புத்தகங்களில் மட்டும் எழுதுவது மிகக் கொடுமை.     

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்