உலகத் தாய் மொழி தினம் இன்று கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி வேலூரில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியவர்களின் கருத்துக்களை அறிய http://thoughtsintamil.blogspot.com/ இங்கே சுட்டவும்.
தமிழின் பழமை பற்றியும் தமிழின் வளமை பற்றியும் அறிஞர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆய்வுகளின் முடிவுகளை நாம் அறிந்து கொள்வது நமது கையில் இருக்கிறது. ஆனால் இன்றிருக்கிற சூழலில், தமிழை வளர்ப்பது ஆட்சியாளர்களின் அதிகாரத்தில்தான் இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நடக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் தமிழகத்தை ஆண்டவர்கள் - ஆள்கிறவர்களின் நோக்கம் தமிழகத்தையோ அல்லது தமிழையோ உயர்த்துவதாக தெரியவில்லை. காரணங்கள் பல.
கல்வித் துறையில் - உலகம் எங்கும் இருக்கிற நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தத்தம் மொழிகளில் தாங்கள் பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கிற போது, நாம் மட்டும் இன்னும் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட விதத்தில் நமது கற்றுக் கொடுத்தலையும் அறிவுறுத்தலையும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.. இந்தக் கட்டுரை எழுதுவதற்கு ஒரு முக்கிய நோக்கம் இருக்கிறது. ஒரு மொழி என்பது ஒவ்வொருவளின் இருப்போடும், அவளது பண்பாட்டோடும், குழுமத்தோடும் பின்னிப் பிணைந்த ஒன்று என்பதை நினைவிறுத்துவதற்காகவும் இதை எழுதுகிறேன்.
பொருளாதாரத்துறை என்பது நமது இருப்பை நிர்ணயம் செய்வதனால், பொருள் ஈட்ட, நான் ஆங்கிலமோ அல்லது இந்தியையோ கற்றுக் கொண்டாக வேண்டும் என்கிற சூழலில், தமிழ் மட்டுமே அறிந்தால் என்னால் என் வாழ் நாளை ஒட்டி விட முடியாது.
நீரா ராடியாவுடன் பேச வேண்டுமென்றால் தமிழில் பேச முடியுமா என்ன?
ஆனால் பொருளாதாரத் துறையில் தமிழை முன்னிறுத்துவதற்கு முயற்சி எடுப்பதில்லை. ஆனால் தாய் மொழி என்று வருகின்ற போது ஒரு உணர்வை நமது மத்தியில் எழுப்ப முடியும் என்பதனாலும் ஒன்றும் செய்யாமல் இருக்க முடியாது என்பதனாலும் - இலக்கிய வளர்ச்சி என்று செம்மொழி மாநாடு நடத்துவதிலும், அல்லது தமிழ் திரைப்படங்களுக்கு தமிழிலில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்பதிலும் அரசு தமது தமிழ் பற்றை வெளிக்காட்டுகிறது.
தமிழ் படித்தால் ஒருவன் வளர முடியாது என்பதைக் கட்டமைத்து விட்டு தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லுவதன் வழியாய் - தமிழனை அழித்துக் கொண்டே, தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்க முடியும். இதன் வழியாய் தமிழை அழித்துவிடவும் முடியும் - பிறகு வெறும் எழுத்துக்களில் மட்டுமே இம்மொழி இருக்கும்.
கணனித் துறையில் கூகுளிலும், விக்கியிலும் தமிழ் வரமுடியும் ஆனால் நமது அரசாங்க ஆணைகளிலும் தமிழ் கலைச் சொற்கள் இல்லை என்று எத்தனை நாளைக்குத் தான் சொல்லிக் கொண்டே பொழுதை ஒட்டிக் கொண்டிருப்பது.
தமிழ் வளர்ப்பது எதோ தமிழ் அறிஞர்கள் மட்டும் முன்னெடுக்க வேண்டும் என்பதைப் போல ஒரு பிரம்மையை நாம் முன்மொழிந்து கொண்டிருக்கிறோம். அல்லது எல்லாச் சொற்களையும் தமிழ் படுத்தக் கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். திரு. இறையன்பு அவர்கள் ஒரு நூலில் இப்படித் தமிழ் படுத்துவது குழப்பத்தை விளைவிக்கும் என்று எழுதியதாக ஞாபகம். அதாவது ரெட் கிராஸ் என்பது ஒரு உலக நிறுவனம் அதனைச் செஞ்சிலுவை என்றெல்லாம் மொழி மாற்று செய்யக் கூடாது என்ற கருத்தை அதில் முன் வைத்திருக்கிறார்.
உலக நிறுவனம்தான் - அனால் இத்தாலியில் அதை ரெட் கிராஸ் என்று எழுதுவதில்லை - Croce Rossa என்றுதான் எழுதிகிறார்கள். பிரெஞ்சில்
Croix-Rouge என்றுதான் எழுதுகிறார்கள் அவர்களுக்கெல்லாம் அது உலக நிறுவனமாகத் தெரியவில்லையா என்ன? நாம் மட்டும் ஆங்கில அடி வருடிகளா என்ன? ஆனால் அதைச் செஞ்சிலுவை என்று மொழி பெயர்ப்பதனால் மட்டும் தமிழ் வளர்ந்து விடுமா என்ன?
உலக மொழிகளில் வெளியாகும் எந்த ஒரு புத்தகத்தையும் அந்தந்த நாடுகளில் அதன் அதன் மொழிகளில் உடனே மொழி பெயர்த்து வெளியிடுகிறார்கள். Dan பிரவுன்-ன் the Lost symbol வாங்கலாம் என்று இத்தாலியக் கடைகளில் தேடினால் நமக்குக் கிடைப்பது "il simbolo perduto ." பிரான்சில் தேடினால் "Le symbole perdu" என பிரெச்ஞ்சுப் பதிப்புதான் கிடைக்கிறது. ஆனால் அவைகள் எவையும் தமிழில் வெளிவருகிறதா எனத் தெரியவில்லை. எந்தப் புத்தகமெனினும் உடனே அவைகள் அவர்கள் மொழிகளிலே மொழி பெயர்க்கிறார்கள். தமிழ் பதிப்பாளர்கள் இதை மிகவும் லாபம் வரும் துறை எனக் கருதி வெறும் பிசினஸ் போலச் செய்தாலே போதும் - தமிழ் ஓரளவுக்காவது வளரும். புத்தகம் விற்காது என்றெல்லாம் பொய் சொல்ல முடியாது. ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சிக்கு வரும் கூட்டம் நமக்குத் தெரியும்.
எல்லாரும் வாங்குகிறார்களே என்று வாங்கும் மக்கள் கூட கொஞ்சம் சிரத்தயோடு படிக்கவும் தொடங்குவார்கள். காசு கொடுத்து வாங்கி சும்மா வைக்க மனது வருமா என்ன? அப்படியே வைத்தாலும் பின் வரும் தலைமுறையாவது அதைப் படிக்கும். எனவே பொருள் ஈட்டும் பதிப்பகங்கள் இதைப் பற்றி சிந்திப்பது நல்லது.
தமிழின் பழமையைப் பற்றி வேறு யாராவது சொன்னால் - அதுவும் ஆங்கில ஆய்வாளன் சொன்னால் மட்டுமே நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதையாது ஏற்றுக் கொள்கிறோமா?
எது எப்படி இருந்தாலும் அரசு முயலாதவரை தமிழ் மொழி வெறும் ஏட்டில் தான் இருக்கும். பொருள் ஈட்ட வழியில்லாத வரை தமிழின் மீது இன்றைய மனிதர்களுக்கு வெறுப்பு இருந்து கொண்டுதான் இருக்கும். இன்னும் ஒட்டு வாங்க மட்டும் - மண் தோன்றிக் கல் தோன்றாக் காலத்தே .... என்று மைக் போட்டுப் பேசலாம்.
3 comments:
தமிழ் மொழி விரோத கட்டுரையாகவே இதை பார்கிறேன் . எந்த வித நற்சிந்தனையும் இல்லாத தமிழ் மொழிக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய கட்டுரை இது .
@வாலறிவன்
திரு. வாலறிவன் அவர்களுக்கு, கட்டுரையை முழுமையாகப் படிக்காமல் மேலோட்டமாக படித்ததனால் தான் உங்களுக்கு தமிழ் விரோத கட்டுரையாகத் தெரிகின்றது. மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். அப்படியும் இது தமிழ் விரோதக் கட்டுரையாகத் தோன்றினால் விவாதிக்கலாம்.
இன்னும் தமிழை எப்படியெல்லாம் செழிப்பாக வழ முடியும், வேண்டும் என்பதைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன். வெறும் கழக தொண்டர்கள் கத்தும் தமிழ் கோஷமில்லை. உண்மையான தமிழ் உணர்வு.
நன்றி.
@வாலறிவன்
தொடர்புடைய சில கட்டுரைகள்
http://unmayapoyya.blogspot.it/2013/04/blog-post.html
http://unmayapoyya.blogspot.it/2013/02/blog-post_13.html
http://unmayapoyya.blogspot.it/2010/03/blog-post_23.html
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்