4.2.13

கமல், கடன், கருத்து  • கமல் தான் கடன் வாங்கி படம் எடுத்ததாகவும் அதனை சொன்ன தேதியில் வெளியிட முடியாது போனதால் தனது இல்லத்தை இழக்கும் நிலை வந்திருப்பதாகவும், தமிழகத்தை விட்டு மதச் சார்பற்ற ஒரு மாநிலம் தேடுவதாக –காஷ்மீரிலிருந்து கேரளா வரை ஏதாவது ஒரு இடம் தேடப் போவதாவும் வெளியிட்ட அறிவிப்பைப் பார்த்து மனமுடைந்த ரசிகர்கள் பணம் அனுப்பவதாகக் கேள்வி – ம்  ம் - ரசிகர்கள்!
  • கமல் அப்படி ஒரு இடம் தேடினால் அவர் சொன்ன இரு மாநிலங்களிலும் அவர் வசிக்க முடியாது. இரண்டுக்கும் உள்ள காரணங்கள் அவருக்கே தெரியும். எனக்குத் தெரிந்து அன்பும் அமைதியுமே உருவான, மதச்சார்பற்ற [!?] திரு. மோடி ஆட்சி செய்யும் இடமாக அது இருக்கலாம்! ஆனால் அங்கே போக அம்மையார் விட மாட்டார். வேறு எங்கே போக முடியும்? தேவையற்ற விரக்தியில் ஏடாகூடமாய் மீண்டும் தன் வாயைக் கொடுத்தே மாட்டிக் கொண்டார்.
  • சினிமா என்பது வெறும் தொழிலா அல்லது அதையும் தாண்டி அந்தக் கலைஞர்களுக்கு வேறு ஏதாவது பொறுப்பு என்று உள்ளதா என்பதைக் கலைஞர்கள் புரிந்து கொள்ளும் தருணம் என்பதாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும். தொழிலில் இழப்பு, கடன் தொல்லை என்பதெல்லாம் சரியான வாதமா என்பது தெரியவில்லை. இது வெறும் தொழில்தான் என்றால் ஒவ்வொரு தொழிலிலும் எதிரிகள் தடைகள் உண்டு என்கிற விதத்தில் சில அணுகு முறைகளை மேற்கொள்வது அவசியம். இல்லை இது தொழில் இல்லை என்றால் அவர்களின் பொறுப்புகளை உணர்ந்து படம் எடுக்க வேண்டும். இரண்டு விதத்திலும் கமலின் நிலை என்ன என்பது குறித்த சந்தேகமே எழுகிறது. கிங்க்பிஷர் விமானங்கள் நஷ்டத்தில் ஓடுவதாகவும் அதனால் மஞ்சள் பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என்ற போது எல்லாரது உள்ளத்திலும் எழுந்த கேள்வி இதுதான் – உன்னைய யாரு ஓட்டச் சொன்னா? அதே கேள்வியை இப்போதும் கேக்கலாமல்லவா?
  • நீதிமன்றச் சர்ச்சையில் சிக்குவதில் நமக்கு உடன்பாடு இல்லைதான். பண இழப்பு என்பதைக் காரணம் காட்ட முடியாது – நாட்டின் ஒற்றுமையும் நாட்டு அமைதியும்தான் முக்கியம் என்று நீதிபதிகள் சுட்டிகாட்டி தடையை நீட்டித்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆயிரக் கணக்கான மக்களின் உயிருக்கும், பின் வரும் சந்ததிக்கும் மிகப் பெரிய பேராபத்து காத்திருக்கும் கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் பண இழப்பை மட்டுமே முன்னிருத்தியதாக எனக்கு நினைவு. என்ன நடக்கிறது  இங்கே!
  • சுமுகமாய் பிரச்சனை முடிந்திருப்பதாக சொல்கிறார்கள். இனிமேலாவது உலக நாயகன் உஷாராய் இருப்பார் என்று நம்புவோம். ரசிகர்கள் மகிழ்வார்கள்.
குறிப்பு:
என்னுடைய முந்தய பதிவைப் பார்த்து விட்டு என்னை ஒரு நண்பர் பிடி பிடி என்று பிடித்து விட்டார். ஏதோ நான் கமலின் ரசிகன் என்பது போலவும், அவருக்கு நான் ஏதோ கடன் கொடுத்து அது வராதே என்கிற கவலையில் தடை தவறு என்று நான் எழுதியதாக நினைத்து விட்டார். ஒரு வேளை அந்த தொனியில் அந்தப் பதிவு இருந்ததோ என்னவோ!
ஆனால் அதே சமயம் எந்த வித தொடர்பும் இன்றி ஒரு விடயத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்வதும், அதே கருத்தை எல்லாச் சூழ்நிலைகளிலும் ‘சந்தர்ப்ப வாதியாக’ இல்லாமல் பதிவு செய்வதும் அவசியம். நமக்குத் தமிழ் பற்று அதிகம் இருப்பதினால் டேம் 999 ஐத் தடை செய்வது சரி என்றும், இன்னொரு படத்தைத் தடை செய்வது தவறு என்றும் சொல்வது சரி இல்லை என்றே படுகிறது. [ஆனாலும் இன்னொசென்ஸ் ஒப் முஸ்லீம்ஸ் ஐ தடை சொல்வது சரி என்று எழுதியிருந்தேன். அதற்கான காரணம் வெறும் காழ்ப்புணர்ச்சியில் எடுக்கபட்ட படம் என்பதனால்].

அதிசயம் ஆனால் உண்மை. இட்லி வடையில் எப்போதும் இல்லாமல் திடிரென்று ‘சோ’ வின் சந்தர்ப்ப வாதத்தை எடுத்து விட்டிருக்கிறார்கள். அதில் சோவின் சந்தர்ப்ப வாதத்தை பற்றியா தி.மு.க. வின் சந்தர்ப்ப வாதமா என்று புரியவில்லை. அதற்குள் சோவின் பேட்டி - இரண்டு பக்கமும் சால்ரா அடிக்கும் சோ வைப் பார்க்க பாவமாய்த் தான் இருக்கிறது.

4 comments:

செங்கோவி சொன்னது…[பதிலளி]

உண்மை தான்..டேம்999 படத்திற்கு தடை விதித்ததே தவறு. அந்த ஒரு படத்தைப் பார்த்தா, நாம் முல்லைப்பெரியாறு பற்றிய நம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போகிறோம்?

அப்பு சொன்னது…[பதிலளி]

@செங்கோவி

நன்றி செங்கோவி. உங்கள் கருத்தை நிச்சயம் ஆமோதிக்கிறேன். உங்கள் வலையில் வெளியிட்டிருக்கும் பல கருத்துக்களோடும் எனக்கு உடன்பாடு உண்டு.

இன்னும் சில மாதங்களில் இன்னும் சிறப்பாக கருத்துப் பரிமாற்றத்தில் இணைய எனக்கு நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி

s suresh சொன்னது…[பதிலளி]

அருமையாக அலசி உள்ளீர்கள்! பகிர்வுக்கு நன்றி!

அப்பு சொன்னது…[பதிலளி]

@s suresh
நன்றி சுரேஷ்.

கருத்தைப் பகிர நேரம் எடுத்துக் கொண்டதற்கு.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்