21.11.11

நேர்மை + எளிமை = கலாம் ! ?


நேர்மை + எளிமை = கலாம் ! ?        
                           -    அ. பிரபாகரன் 
அப்துல் கலாம் குறித்து எனக்கு எப்போதுமே பெரிய ஈடுபாடு இருந்தது இல்லை. உங்களில் சிலருக்கு அவர் ஆதர்சமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இல்லை. எனக்கு எப்போதுமே மனிதர்கள் அதீதமாக சிலாகிக்கப்படுவதில் உடன்பாடு இருந்ததில்லை. அதனால்தானோ என்னவோ எனக்கென்று பிடித்த தலைவர் என்றோ, நடிகர் என்றோ, கட்சி என்றோ யாரும் இல்லை. எல்லா மனிதர்களுமே குறைகளோடும் நிறைகளோடும் வாழ்ந்து செல்கிறார்கள். சிலர் தம் குறைகளை நேர்மையான விதத்தில் அணுகுவதாலேயே உயர்ந்து நிற்கின்றார்கள்

அப்துல் கலாம் சில மாதங்களுக்கு முன் எம் கல்லூரியில் விழா ஒன்றிற்கு வந்தார். அவர் வருகை குறித்து எங்கள் நிறுவனம் மிகவும் பரபரப்பாயிருந்தது. பல முன்னேற்பாடுகள் நடந்தன. அவர் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே அவரது பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் வந்து பார்த்து சென்றார்கள். அவர் வருவதற்கு சில மணி நேரங்கள் முன்பிருந்தே மெட்டல் டிடெக்டர்களோடும், பயமுறுத்தும் மோப்ப நாயோடும் வந்து நின்று எல்லோரையும் சோதித்துக் கொண்டிருந்தனர். அவர் உரை நிகழ்த்தப்பட்ட அரங்கின் வாயிலில் தற்காலிக சோதனை வாயில்கள் அமைத்து, உடல் முழுவதையும் தடவிப் பார்த்து அனுப்பினர். முழுவதும் நிரம்பியிருந்த அரங்கத்தில் அங்கு பயிற்றுவிக்கும் எங்கள் எல்லோருக்கும் முதல் வரிசை ஒதுக்கப்பட்டிருந்தது.
நான் ஏதோ ஒரு விதத்தில் கொஞ்சம் பரபரப்பும், நிறைய அலட்சியமுமாக அமர்ந்திருந்தேன். குறித்த நேரத்திற்கு கொஞ்சமும் தவறாமல் இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் வந்தார். மேடையில் ஏறியவுடனேயே தனக்கென்று தனியாகப் போடப்பட்டிருந்த வி. . பி. நாற்காலியை கோபத்துடன் பார்த்து அதை அப்புறப்படுத்தச் சொன்னார். மேடையில் மற்றவர்களுக்குப் போடப்பட்டிருந்த சாதாரண நாற்காலி கொண்டுவரப்பட்டது. எல்லோரும் அதிசயித்தார்கள் 'எவ்வளவு எளிமையாய் இருக்கிறார்' என்று. எனக்கு இதில் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் இப்படிப்பட்ட gimmick களை வியப்போடு பார்ப்பதில்லை
காரணம், சமூகத்தில் உங்களது அந்தஸ்து உயர உயர உங்களது எளிமை பாராட்டப்படும். காரணம் காலப்போக்கில் அதுவே உங்களது ஆளுமையின் மூலதனமாகிவிடும். சமூக அடுக்கின் கீழ்நிலையில் உள்ளவனின் எளிமை தரித்திரமாகப் பார்க்கப்படும்
 காந்தியின் வெற்றுடும்பு ஆராதிக்கப் படுவதும், ஒரு தலித்தின் வெற்றுடம்பு கேவலப்படுத்தப் படுவதும் இச் சமூகத்தின் அருவருப்பான நகை முரண்களில் ஒன்று.

கலாமின் ஆளுமை குறித்து ஏதோ ஒரு விதத்தில் விமர்சன மனநிலையோடு உட்கார்ந்திருந்த என்னை அவரது பேச்சு ஈர்த்தது. அன்று அவர் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பற்றிப் பேசினார். ஏறத்தாழ ஒருமணிநேரம் நிகழ்த்தப்பட்ட உரையில் நான் முழுவதுமாக மூழ்கிப் போனேன். நான் என் வாழ்க்கையில் மிகவும் ஈடுபாட்டோடு கவனித்த உரைகளில் ஒன்றாக அது அமைந்தது. பிறகு யோசித்துப் பார்த்தபோதுதான் உண்மை புலப்பட்டது.

அவரது உரையின் ஈர்ப்புக்குக் காரணம் அதில் அடிப்படையான நேர்மை இருந்தது. வெறுமனே கோசங்களாக அமையாமல் அவரது நம்பிக்கைகளின் வெளிப்பாடாக அவரது பேச்சு இருந்தது. பலருக்கும் அவரது உரை பிடித்திருந்தாலும் எனக்கு அதில் ஈர்ப்பு ஏற்பட்டது இப்போதும் வியப்புதான். பிறகு விழா இறுதியில் அவரோடு குழுவாக புகைப்படம் எடுக்க அவரருகில் வந்தபோது புன்னகைத்தார். அதுவும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இப்போது அந்த கலாம் கடந்த வாரம் கூடங்குளம் சென்று அதே போன்ற ஓர் உரையைப் பத்திரிகையாளர்கள் முன்பு செய்திருக்கிறார். அதற்கு கண்டனங்களும் ஆதரவுக் குரல்களும் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கின்றன.
கூடங்குளம் பற்றி நான் பேசப்போவதில்லை. அதுகுறித்த உள் விவகாரங்களில் நான் சென்று விவாதிக்கிற அளவுக்கு எனக்கு விபரமில்லை. அதை மக்கள் மேல் உண்மையிலேயே அக்கறையுள்ள நிபுணர்களுக்கு விட்டுவிடுவோம். இப்போது நான் சொல்ல வந்தது கலாமின் கருத்து பற்றி
 கலாம் சொன்ன கருத்துகளில் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. காரணம் ஏனென்று (16 . 11 11 ) தினமணியில் வந்திருந்த நெடுமாறனின் கடிதத்தையும், கடந்த வாரம் கல்கியில் வந்திருந்த ஞாநியின் கடிதத்தையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இருப்பினும் கலாமின் இந்தப் பேட்டியிலும்கூட ஒரு நேர்மை இருப்பதாக உணர்கிறேன். கருணாநிதியும் ஜெயலலிதாவும் இந்தக் கருத்து உள்ளவர்கள்தான். ஆனால் சொல்ல மாட்டார்கள். கலாம் நேர்மையாகத் தன கருத்தைச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவரைச்சொல்லவைத்தவர்கள் நேர்மையில்லாதவர்கள். அடிப்படையில் நாணயமோ மக்கள் கரிசனையோ இல்லாதவர்கள். தாங்கள் சொல்லும் ஒரு கருத்தை இப்படி அடிப்படை நாணயமில்லாமல் மக்கள் மத்தியில் பிரபலமான பிம்பங்களைக்கொண்டு சொல்ல வைப்பது ஜனநாயகத்தில் அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். கலாம் போன்ற பிம்பங்கள் இதற்குதான் பயன் படுத்தப்படுகிறார்கள்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி (அவரது முகத்தை தொலைக்காட்சியில் பாரத்தால் ........................  என்னால் தவிர்க்க முடியவில்லை) காரசாரமாகப் பேட்டி கொடுக்கிறார். கொஞ்சம்கூட நேர்மையற்றதாகவும் அருவருப்பானதாகவும் இருக்கிறது அவரது பேட்டி. இந்திய ஜனநாயகம் எவ்வளவு பாரபட்சமானது என்பதைச் சொல்லுவதாக அவரது பேட்டி அமைகிறது. கூடங்குளம் போராட்டத்தின் பின்னணியில் உள்ளவர்களின் கணக்கு வழக்கை ஆராயவேண்டும் என்கிறார். இப்படிப் பேட்டி கொடுக்கின்ற அந்த நொடியில் அவரது கணக்கு வழக்கை ஆராய்ந்தால் ஒரு அரசியல்வாதியான அவரிடம் எவ்வளவு பொய்கள் இருக்கும்! ஆனால் அதிகாரம் தந்த கொழுப்பிலும் இந்திய ஜனநாயகத்தின் பாரபட்ச அமைப்பிலும் நம்பிக்கைகொண்டு எந்த லஜ்ஜையுமின்றி திராணியோடு பேசுகிறார்.
கூடங்குளத்தை எதிர்ப்பவர்களின் கணக்கைதோண்டுவதைபோலவே ஆதரிப்பவர்களின் கணக்கையும் தோண்டுவோமா? எல்லா காங்கிரஸ்காரர்களின் வருமானவரியையும் கொண்டு வாருங்கள். பாப்போம்.

என்னைப் பொறுத்தவரையில் கூடங்குளத்தின் நியாயம் எளிமையானது.
அது நம் நாட்டின் ஜனநாயகம் சம்பந்தப்பட்டது.
இந்தப் பிரச்சினையை நாம் ஒரு ஜனநாயகப் பிரச்சினையாக அணுகவேண்டும்.
அணுமின்நிலையம் வேண்டுமா, வேண்டாமா என்பது ஒரு புறம் இருக்க, இதைப் பத்து லட்சம் (சொல்லப் போனால் 17 லட்சம்) மக்களின் ஜனநாயகப் பிரச்சினையாகவும், வாழ்க்கைப் பிரச்சினையாகவும் பார்க்கவேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் பத்து லட்சம் மக்கள் உரேனியம் பயத்தோடே அன்றாடம் தூங்கி எழுந்து, பல் துலக்கி, கடலுக்கும், வயலுக்கும் இன்ன பிற காரியங்களுக்கும் சென்று வந்து வாழ வேண்டுமென்பது எவ்வளவு கொடுமை. இந்தப் பயமெல்லாம் தேவையற்றது என்று அணுமின்நிலையத்தை ஆதரிப்பவர்கள் சொல்லக்கூடும்.ஆனால், பெரும்பான்மையினர் அங்கு அப்படிதானே நினைக்கிறார்கள்.
அவர்களெல்லாம் முட்டாள்கள் அறியாமையினால் சொல்கிறார்கள் என்று நீங்கள் வாதிட்டீர்களேன்றால் அது முடியாது. பெரும்பான்மையினர் குரலை நீங்கள் மதிக்கத்தான் வேண்டும். ஜனநாயகம் என்பதே நம் நாட்டில் பெரும்பான்மை வாதம்தான். இந்தப்பெரும்பான்மையினரின் அறியாமையினால்தானே நாரயணசாமி போன்ற .... களெல்லாம் ஜெயித்து அமைச்சராகி பேட்டி எல்லாம் கொடுக்க முடிகிறது. கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், இலங்கை கொலைப் புகழ் சோனியா, பேடி எல்லாம் அதிகாரத்தை சுவைக்க முடிகிறது. அப்போது மட்டும் பெரும்பான்யினரின் அறியாமை இனிக்கிறது, இப்போது கசக்கிறதா?
பி. கு. இப்படியெல்லாம் நான் சொல்லுவதால் அணு எதிர்ப்புக்கு வலு சேர்க்க வேறு கருத்து இல்லையென்று தவறாகப் புரியாதீர்கள்.
                                         - அ. பிரபாகரன்
அப்துல்கலாமைப் பார்க்கச் சென்ற உங்களைத் தடவிப் பார்த்தார்கள். அமேரிக்கா சென்ற அப்துல்கலாமை அங்கே தடவிப் பார்த்தார்களாம்ல...

21 comments:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]

கூடங்குளத்தை எதிர்ப்பவர்களின் கணக்கைதோண்டுவதைபோலவே ஆதரிப்பவர்களின் கணக்கையும் தோண்டுவோமா? //

செமையா பரேடு நடத்திட்டீங்க போங்க....!!!

Sankar Gurusamy சொன்னது…[பதிலளி]

ஜனநாயகத்தின் வினோதங்களில் இதுவும் ஒன்று. ஆட்சியாளர்களுக்கு தேவையானபோது மட்டுமே ஜனநாயகம் பேசுவார்கள். மற்றபடி எல்லோரும் சர்வாதிகாரிதான்.

அற்புதமான கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

சூனிய விகடன் சொன்னது…[பதிலளி]

ஒரு ரெண்டு நாயித்துக்கிழமை ஏசப்பாவைக் கும்பிடுற பிராத்தனைக்கூட்டத்தில பாதிரிமாரு அணு ஒலையினால ஆபத்தில்லைன்னு சொன்னா.............. பாதர் சொல்லறாரு ஒரு ஆபத்துமில்லைன்னு கூவப்போற கூட்டத்துக்கு அஞ்சு லட்சம் பத்து லட்சம்னேல்லாம் ஒரு கணக்கில்லை பிரதர். இது மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டம்.....
இவர்களின் போராட்டம் அணு உலையே வேண்டாம் என்றா...இல்லை எங்கள் கூடங்குளத்தில் வேண்டாம் ..வேறு எங்காவது கட்டிகொள்ளுங்கள் என்றா...அச்சம் அச்சம் என்ற தெனாலிபுலம்பலைத் தீர்த்து வைக்க எவனாலும் ஆகாது பரமண்டலத்திலிருந்து தான் வர வேண்டும் ..மத்திய மாநில அரசுகளுக்கிடையே உள்ள கண்டும் காணாத போக்கால் தான் இந்த போராட்டம் வெற்றிகரமாக நடக்கிறது....இல்லையெனில் எப்போதே நோண்டியிருக்கும்.

நல்லதாக ஒரு முடிவெடுக்கச்சொல்லுங்கள் ...கூடங்குளம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது இது இயங்கட்டும்..இனி அணு மின் சக்தி என்ற பேச்சே கூடாது.....இனியொரு அணு உலை இந்த இந்தியாவில் தொடங்கக்கூடாது என்று போராடுங்கள்....அல்லது இப்போது தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணு உலையை இப்போதே மூடவும் என்று போராட சொல்லுங்கள் ....அப்புறம் இந்தியாவில் இயக்க நிலையில் இருக்கும் எல்லா அணு உலைகளையும் மூடுங்கள் என்று போராட சொல்லுங்கள் ...

SURYAJEEVA சொன்னது…[பதிலளி]

அணு உலை எதிர்ப்பவர்கள் எத்தனையோ கோணங்களில் பார்க்க முடிகிறது என்பதும்... அணு உலை ஆதரவாளர்கள் ஒரே ஒரு கோணத்தில் பார்த்து கொண்டிருப்பதும் புலனாகிறது...
முடிவில் இன்குலாப் ஜிந்தாபாத்

சித்திரகுள்ளன் சொன்னது…[பதிலளி]

அப்துல் கலாம் பற்றி ஞானி அவர்கள், ”நீங்கள் அணு விஞ்ஞானி இல்லை என்பது எனக்குத் தெரியும். எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏரோநாட்டிகல் எஞ்சினீயரிங் படித்துவிட்டு ராக்கெட் விடுவது, ஆயுத ஏவுகணைகள் தயாரிப்பது முதலிய துறைகளில் வேலை பார்த்தவர் நீங்கள். அதிலும் பெரும்பாலும் உங்கள் வேலை நிர்வாக வேலை. ஆராய்ச்சி வேலை அல்ல. வேலை செய்யும் விஞ்ஞானிகளை மேற்பார்வையிடும் மேஸ்திரியாக இருந்தீர்கள். அணுகுண்டு தயாரிப்பதற்கு உதவி செய்தீர்கள். எனவே நீங்கள் அணுமின்சாரம் என்ற முகமூடியை பலமாக ஆதரிப்பீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜா MVS சொன்னது…[பதிலளி]

~*~சமூகத்தில் உங்களது அந்தஸ்து உயர உயர உங்களது எளிமை பாராட்டப்படும். காரணம் காலப்போக்கில் அதுவே உங்களது ஆளுமையின் மூலதனமாகிவிடும். சமூக அடுக்கின் கீழ்நிலையில் உள்ளவனின் எளிமை தரித்திரமாகப் பார்க்கப்படும்.
காந்தியின் வெற்றுடும்பு ஆராதிக்கப் படுவதும், ஒரு தலித்தின் வெற்றுடம்பு கேவலப்படுத்தப் படுவதும் இச் சமூகத்தின் அருவருப்பான நகை முரண்களில் ஒன்று.~*~

நிதர்சனமான உண்மை...
பலருக்கு இது புரியாமல்தான் ஒருவரை தலைக்கு மேல் தூக்கி கொண்டாடுவதும், மற்றவரை காலால் மிதிப்பதும் சமூகத்தில் தொடரும் அவலநிலைக்கு காரணம்...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…[பதிலளி]

அருமை.

நிரூபன் சொன்னது…[பதிலளி]

நல்லதோர் கட்டுரைப் பகிர்வு அண்ணா,
மக்களின் உணர்வுகளைப் புரிந்தும் மக்களுக்குத் தீமை ஏதும் இல்லையே என்று சொல்லுவோருக்கு உணர்வே வராதா எனும் ஏக்கத்தினைத் தான் இந்தக் கட்டுரை தருகின்றது.

Unknown சொன்னது…[பதிலளி]

@MANO நாஞ்சில் மனோ

நன்றி, மனோ,
வருக.
நம்ம பரேடு நடத்தி, என்ன ஆகப் போகுது?
இருந்தாலும், எறும்பூரக் கல்லும் தேயும் அல்லவா...

Unknown சொன்னது…[பதிலளி]

@Sankar Gurusamy
வணக்கம்,
நாம் ஜன நாயக நாட்டில் இருக்கிறோம். இதெல்லாம் அதில் அடக்கம்தானே..

Unknown சொன்னது…[பதிலளி]

@suryajeeva
பல கோணங்கள் இருக்கிறது. இருந்தாலும் உடனடி மின்சாரத்தேவையை இந்த அணு உலைதான் தீர்த்து வைக்கும் என்ற மாய பிரச்சாரத்தை எப்படி எதிர் கொள்வது என்றே தெரியவில்லை.

Unknown சொன்னது…[பதிலளி]

@சித்திரகுள்ளன்

வருக - வணக்கம்.
ஞானியின் கருத்தை எடுத்து சொன்னதற்கு நன்றி.
இதே கருத்தை - திரு அப்துல் கலாம் பத்து நாட்கள் அவகாசம் கேட்டிருந்த போதே நானும் எழுதியிருந்தேன். என்னுடைய அப்துல் கலாமும் அணு உலையும் பழைய பதிவைப் படியுங்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown சொன்னது…[பதிலளி]

@ராஜா MVS
ராஜா, நன்றி...
புகழின் உச்சியில் இருப்பவர்கள் எது சொன்னாலும், செய்தாலும் அது மிகவும் நன்றாக மட்டுமே பேசப் படுகிறது. அதனால் அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது கூட கடினமாகி விடுகிறது.

Unknown சொன்னது…[பதிலளி]

@நண்டு @நொரண்டு -ஈரோடு
நன்றி - உங்களுடைய வரலாற்றுப் பதிவுகள் அருமை...

Unknown சொன்னது…[பதிலளி]

@நிரூபன்
தம்பி நிரூபன்,
வணக்கம்.
சில வலிகளை அந்தச் சூழலில் இருப்பவர்கள்தான் முழுமையைப் புரிந்து கொள்ள முடியும். அதை மற்றவர்கள் உணர அந்த சூழலையும் உணர்ந்து கொள்ளுகிற மன நிலையில் இருந்தால்தான் அந்த வேதனையை சிறிதளவாவது புரிந்து கொள்ள முடியும். அது இல்லையென்றால் கடினம்தானே. எப்படி ஈழத்தமிழர்களின் வேதனையை எங்களில் சிலர் உணர்ந்தது கொள்ளவும் புரிந்து கொள்ளவும் மறுத்தொமோ அப்படியே எங்களில் சிலர் கூடங்குளம் வேதனையை உணர மறுக்கிறார்கள்.
நன்றி..

Unknown சொன்னது…[பதிலளி]

@சூனிய விகடன்
வணக்கம் சூனிய விகடன்,
வருகைக்கும் உங்கள் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.
நீங்கள் சொல்லலுகிற குற்றச் சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியாது. இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு சென்றுவந்த என் நண்பர் - இது முழுக்க முழுக்க மக்கள் போராட்டமாக இருக்கிறது - பாதிரியாரோ பூசாரியோ யார் எது சொல்லியும் அங்கே நடப்பதில்லை - இந்தப் போராட்டம் அவர்களின் கட்டுக்குள் இல்லையென்பதையும் அவர் மூலமாக அறிந்து கொண்டேன் - அதை இங்கே பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.
உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமெனில் நேரடியாகச் சென்று பார்த்தால் ஒரு வேலை உண்மை நிலவரம் தெரியலாம்.

அடுத்தது - எதற்காக இன்னமும் இதில் மதச் சாயம் பூசிப் பார்க்கனும். அணு உலை வெடித்தால் எந்த மதம் சார்ந்தவன் அங்கே இருக்கிறான் என்பதைப் பார்த்தெல்லாம் கதிர் வீச்சு பரவுவதில்லை. காற்றில் பரவுவதை ஒரு சாரார் மட்டும் சுவாசிப்பதில்லை. இப்படி கருத்து வேறுபாடுகளை விவாதிக்காமல் நாம் போனால் எல்லாவற்றையுமே கேள்வி கேட்க நேரிடும். என்னுடைய பழைய பதிவு ஒன்றை நீங்கள் வாசிக்க இணைப்பைத் தருகிறேன்.
ஆனால் உங்களின் வேண்டுதலோ என்னவோ - எல்லாப் பக்கங்களிலும் அணு உலையே வேண்டாம் என்கிற போராட்டம் தான் வலுப் பெற்றுக் கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு - மே பதினேழு என்ற இயக்கம் நேற்று முன்தினம் சென்னையில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் இரண்டிலுமே வேண்டாம் என்கிற பிரச்சாரம் நடந்தது.
கடைசியாக நீங்கள் இந்தப் போராட்டத்தை தள்ளியே நின்று பார்ப்பது என்னை வேதனைக்குள்ளாக்குகிறது. எதற்கு இப்படிப் போராட்டக் காரர்கள் மீது வெறுப்பு. அவர்கள் சொல்லுகிற கருத்துக்களுக்கு உங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வையுங்கள். அதை விட்டு - அவர்களையும் எப்படி நமக்காகப் போராடச் சொல்ல முடியும். அவர்கள் ஒரு துணிவோடு தங்கள் வாதங்களை எடுத்து வைக்கிறார்கள் - நாம்தான் இங்கு இந்தப் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும். அவர்கள் என்ன சினிமா நடிகர்களா - தங்கள் வீட்டில் பிரச்சனை ஒன்றில் பாதிக்கப் பட்டவுடன் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்குப் போராட....
கடைசியில் - கட்டி வைத்த அணு உலை இயங்கட்டும் அதன் பிறகு எல்லாவற்றையும் மூடப் போராட்டம் நடத்தச் சொல்லுங்கள் என்பதில் உள்ள பகடியை ரசிக்கும் அதே வேளையில் - இதை இயங்கவிட்டு அதன் பிறகு எல்லாவற்றையும் மூட போராடுவதற்கு - இதை இயக்காமலே மற்றவைகளையும் நிறுத்தப் போராடலாமே என்பதில் உள்ள உண்மையையும் உணருவீர்கள் என்று நம்புகிறேன்.

http://unmayapoyya.blogspot.com/2011/10/blog-post_31.html கல்பாக்கம் பாதுகாப்பானதா?

http://unmayapoyya.blogspot.com/2011/10/blog-post_04.html">

பெயரில்லா சொன்னது…[பதிலளி]

@சூனிய விகடன்...

நீங்க நம்ம சொந்தக்காரர் தான்னு முதல் வரியிலேயே சொல்லீட்டீங்க...
ஒன்னு சாதி சாயம்...இல்லாட்டி மதம்...இப்படியே எத்தனை நூற்றாண்டு ஓட்டுவீங்க...

முதல்ல அறிவியல் படிங்க..அப்புறம் வாழ்வியல் படிங்க.....அப்புறம் உலகம் படிங்க...
அப்புறமா பேனாவை கையில பிடிங்க...அதுவரை எவ்வளவு தான் உதறி எழுதுனாலும் இந்த விசயத்துல உங்களுக்கு ..உங்க பேனால இருந்து பிதற்றல் மட்டுமே வரும்...

BTW,நல்லொதொரு...நடுநிலை நோக்கோடு உள்ள பதிவு...வாழ்த்துக்கள்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…[பதிலளி]

வணக்கம் நண்பரே! அருமையான பதிவு! தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

Unknown சொன்னது…[பதிலளி]

@ரெவெரி


வாங்க ரெவரி,
வலை மீட்டதற்கு வாழ்த்துக்கள்.
என்ன செய்வது... பதிவாளர் எவைகளைஎல்லாம் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

Unknown சொன்னது…[பதிலளி]

@திண்டுக்கல் தனபாலன்
வணக்கம் நண்பரே,
வருகைக்கும் உங்கள் ஊட்டத்திற்கும் நன்றி

ஊரான் சொன்னது…[பதிலளி]

"காந்தியின் வெற்றுடும்பு ஆராதிக்கப் படுவதும், ஒரு தலித்தின் வெற்றுடம்பு கேவலப்படுத்தப் படுவதும் இச் சமூகத்தின் அருவருப்பான நகை முரண்களில் ஒன்று."

”பத்து லட்சம் மக்கள் உரேனியம் பயத்தோடே அன்றாடம் தூங்கி எழுந்து, பல் துலக்கி, கடலுக்கும், வயலுக்கும் இன்ன பிற காரியங்களுக்கும் சென்று வந்து வாழ வேண்டுமென்பது...”

எதார்த்தமான பதிவு. வாழ்த்துகள்!

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்