15.7.11

பாதல் சர்க்கார் - பிறந்த நாள் / நினைவு நாள்

  • காலத்தால் என்றும் அழியாத சில மனிதர்களுள் பாதல் சர்க்கார் என்றும் இடம் பெறுவார் என்பதில் எள்ளளவும் அய்யம் இல்லை. ஆனால் மற்றவர்களைப் போல எல்லா மீடியாக்களின் பக்கங்களில் இவர் இடம் இடம் பிடிக்கவில்லைஎன்பதுதான் உண்மையிலேயே மிகவும் வருத்தமான செய்தி. மம்தா பற்றியும் ஆட்சி மாற்றம் பற்றிய செய்திகள் அதிகமாகக் கவனிக்கப் பட்டு அவைகள் பற்றிய செய்திகள் மட்டுமே தேசிய அளவில் வெளிவந்து கொண்டிருந்த அந்த தருணத்தில் கல்கத்தாவில் பாதல் சர்க்கார் மறைந்தார். இடது சாரிகள் வீழ்ந்த அந்த தருணத்தில் அவர் மறைந்தார். ஆனால் அவர் மறைவு பற்றிய செய்திக்கு எந்தப் பத்திரிக்கையும் இடம் கொடுக்கவில்லை என்பதுதான் வேதனை. கடந்த மே மாதம் பதின்மூன்றாம் தேதி மறைந்தஇந்த வீர மனிதனின் இறப்பு - தேர்தல் முடிவுகளின் ஆர்ப்பாட்டத்தில் அவர் இறந்த செய்தியும் மறைந்தே போனது. 
  • 1925 ஜூலை மாதம் 15 ஆம் தேதி பிறந்த அவர் இந்த ஆண்டு மே மாதம் பதின்மூன்றாம் தேதி மறைந்தார். மாற்றத்திற்கான முன்னெடுப்புகளை முழு மூச்சோடு தொடங்கி அதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தவர் இவர். வீதியே அரங்கம் என்று உள்ளரங்களிலிருந்து மக்களைத் தேடி வந்து மாற்றத்திற்கான விதைகளை விதைத்தவர். தமிழகத்தில் மட்டும் அவரிடம் நேரடியாக பயிற்சி பெற்றவர்கள் ஆயிரக் கணக்கில் உண்டு. அவரிடம் பயிற்சி பெற்றவர்களின் பட்டறைகளில் பயிற்சி பெற்றவர்களில் என்னைப் போன்று பல ஆயிரங்கள் உண்டு.  
  • விடுதலைக்கான போராட்டத்தில் பாதல் சர்க்காரின் பங்கு எப்போதும் ஒரு அங்கம் வகிக்கும்.
  • இந்த மனிதர் - தமிழக மக்களின் ஓட்டு மொத்த விருப்பத்தால் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் குறித்த செய்தி வெளியான நாளில் அவர் இறந்தது தமிழக மக்களுக்குப் பெருமை சேர்ப்பதாகவே இருக்கிறது. அவரது இறப்பைப் பற்றிய செய்திகள் இல்லாமல் போனாலும், வாக்களிப்பதில் மட்டுமாவது தங்களது அதிகாரம் பற்றிய புரிதலோடு இருந்ததுவர்களுக்கு இது பெருமையாக இருக்கும். ஆனால் அதே சமயம் வாக்களிப்பதில் மட்டுமல்ல விடுதலையைப் பற்றிய ஆழமான புரிதல் தமிழக மக்களுக்கு வேண்டும் என்கிற அழைப்பாகவே பதின்மூன்றாம் தேதியின் அவரது மறைவை நான் புரிந்து கொள்கிறேன்.
  • இன்று  அவரது பிறந்த நாள்.மறைவின் போது அவருக்கு நாம் செலுத்தாத மரியாதையை அவர் பிறந்த நாளில் அவருக்கு செலுத்த வேண்டியது அவசியமாகிறது. சென்னையில் நினைவுநாள் கூட்டம் நடத்தும் புவியரங்கத்திற்கு வாழ்த்துக்கள். பாதல் சர்க்காரின் தாக்கம் தமிழகத்திற்கு முன்னெப்போதையும் விட இப்போது இன்னும்  அதிகத் தேவையை இருக்கிறது.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்