4.9.10

உலகத்தின் நோக்கம் - 6

உலகத்திற்கு நோக்கம் உண்டா நோக்கம் இல்லையா என்கிற விவாதம் நேற்று இன்று பிறந்ததல்ல. பல நூற்றாண்டுகளாக இருக்கின்ற ஒரு விவாதம்.

நமது கேள்விகள் ஒன்றும் புதியவை அல்ல. எல்லாம் ஏற்கனவே விவாதிக்கப் பட்டவைகள்தான்.

நம் நாக்கு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் பேசும். ஏனெனில், அதை எப்படியும் பயன்படுத்த நமக்குள்ள அறிவு பலம் கொடுக்கிறது.
அதுதான் அறிவின் பலவீனமும்.

அறிவின் வழி எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாது.
ஏதாவது ஒரு இடத்தில் அறிவால் நிரப்பப் பட முடியாத வெற்றிடம் எப்போதும் இருக்கும்.

அதனை வெறும் வெற்றிடம் என்று சொல்பவர்கள் நோக்கம் இல்லை என்கிறார்கள்.
அதனை மிஸ்டரி என்று புரிந்து கொள்கிறவர்கள் ஒரு நோக்கத்தினால் ஒருவனால் படைக்கப் பட்டது என்று சொல்கிறார்கள்.

அந்த நோக்கம் இதுதான் என்று சொல்வதும்
அதை நிறைவேற்றாமல் இருப்பது பாவம் என்று சொல்கிற போதும்,
நோக்கம் கற்பிக்கிறவன் எல்லாவற்றையும் அறிந்தவனாக -
தனது ஆளுமையை அனைவர் மீதும் திணிக்கப் பார்க்கிறான்.

இது மனிதனின் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் - அறிவால் தானே தீர்மானிக்கும் நிலையில் இருக்கும் மனிதனை கட்டுப் படுத்தி சிறுவனாகவே பாவிக்கும் மனநிலை தவறு என்கிற நிலையில் - இது ஒரு கருத்தை மற்றவர் மீது திணிக்கும் மேலாதிக்கம் என்பதனாலும், நோக்கத்தையே மறுக்கும் நிலைக்கு நாம் கொணரப்படுகிறோம்.

இந்த அடிமை நிலையிலிருந்து நான் விடுபட -
நோக்கம் இல்லை என்றும் எல்லாவற்றையும் நமது அறிவால் அறிந்து கொள்ள முடியும் என்கிற எண்ணம் தோன்றுகிறது.
ஆனாலும் எல்லாவற்றையும் அறிவால் விளக்க முடிய வில்லை.

நமது உடலைப் பற்றிய புரிதலும்,
இந்த உலகில் எந்திரத் தனமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகமும்,
பரந்து விரிந்த கடலும்,
விண்ணைத் தொடும் இமய மலையும்,
அங்கிருந்து பார்க்கிறபோது அது கொடுக்கிற பயம் கலந்த வியப்பும்,
நம் உடலோடு உறவாடும் தென்றல் வருடும் சுகமும் -

மெல்லிசை கொடுக்கிற திளைப்பும்,
கவிதை கொடுக்கிற மகிழ்ச்சியும்,
நட்பு கொடுக்கிற ஆனந்தமும்,
அன்பு கொடுக்கிற திருப்தியும்
-------- ........................................................

அறிவால் புரிந்து கொள்ள முடியுமா என்பதுதான் புரியவில்லை.

இயற்கை கொடுக்கிற இன்பத்துக்காகவே நாம் சுற்றுலா செல்கிறோம்.
வெறும் கட்டிடங்களைப் பார்ப்பது மிகவும் குறைவு...
மலையகங்களுக்குச் செல்வதும்,
நீர் வீழ்சிகளுக்குச் செல்வதும்,
கடற்கரைகளுக்குச் செல்வதும்,
இயற்கையின் இன்ப வனத்தில் நாம் நம்மை மறப்பதற்காகவும் - அது கொடுக்கும் கிளர்ச்சிக்காகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம் - பார்க்கலாம் - அனுபவிக்கலாம்....
அறிவால் இதில் பயனில்லை.


எழுத்தில் திளைப்பவனுக்கும் - கவிஞனுக்கும் அறிவு தேவை என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனாலும் வெறும் அறிவு மட்டுமே ஒருவனை கவிஞனாக்கி விடும் என்பதை எந்த கவிஞனும் சொல்ல மாட்டான்.
கவிஞன் அறிவு கடந்தவன் -
அறிவால் அவ்வளவு பயனில்லை.

ஆனால் அறிவு இல்லையெனில்,
தெரிந்தவன் ஆள்பவனாகவும் தெரியாதவன் அடிமையாகவுக் இருக்க நேரிடும் என்பதை வரலாறு சொல்வதனால் அறிவின் செயல்பாட்டை அடியோடு மறுப்பதற்கும் இல்லை.
ஆனாலும் அறிவால் அனைத்தையும் அறிந்து கொள்ளவும் முடியாது -
வெற்றிடம் இல்லாமல் பேசவும் முடியாது.
மேலும்...

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்