அணு உலை விஷயத்தைப் பற்றியும் அதில் உள்ள சிக்கல்களை பற்றி எழுதும் போதெல்லாம் பொது மக்கள் கோபப்படுவதைத்தான் பார்க்கிறேன். அணு உலையே வேண்டாம் என்பதுதான் நமது நிலையாக இருந்தாலும், அரசு அதற்கு செவிமடுக்கும் சூழ்நிலையில் இல்லை. இந்த அரசு அவசரப் பட்டு எடுக்கும் எந்த முடிவும் நாட்டை அதல பாதாளத்திற்குத்தான் தள்ளும். நாட்டு மக்களின் பாதுகாப்பை பணயம் வைத்துத்தான் நமது வளர்ச்சி இருக்க வேண்டுமா என்பதைக் கேட்க வேண்டியிருக்கிறது.
ஆனானப் பட்ட ஜப்பானே எல்லா அணு உலைகளையும் மூடியிருக்கிறது. நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
விபத்தினால் ஏற்படும் எந்த நிலையையும் பணம் சரி செய்துவிடாதுதான். அதற்காக விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதில் இருந்து அணுஉலை வழங்கும் நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? தொழில் நுட்பக் கோளாறோ அல்லது சேவைக் குறைபாட்டினாலே விபத்து ஏற்பட்டால் அதை வழங்கிய நிறுவனத்தின் மீதான பொறுப்பை இந்திய அரசு குறைக்கப் பார்க்கிறது.
சாதரணமாக வாங்கும் பொருட்களுக்கே கியாரண்டி எல்லாம் இருக்கும் போது அணு உலைகள் என்பது எவ்வளவு பெரிய விஷயம்... இப்படியே போனால் ஐ.எஸ்.ஐ. க்கெல்லாம் வேலையே இருக்காது. கியரான்டிக்கும் வேலை இருக்காது - சைனாப் பொருட்களைப் போல. ஆனால் உடைத்தால் தூக்கிப் போட இது ஒன்றும் கொசு அடிக்கும் பேட் அல்ல.
விபத்தினால் உயிரிழக்கப் போகிறவர்கள் கையெழுத்து இடப் போகிறவர்களும் அல்ல.
நம்மை பணயம் வைத்து நிறுவனங்களை - அமெரிக்க நிறுவனங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன?
அமேரிக்கா சிரியா மீது கட்டப் பஞ்சாயத்து பண்ணுகிறது? தனது நாட்டு மக்கள் மீதே சிரியா அதிபர் காஸ் பயன்படுத்தினார் என்று. இப்ப இந்தியப் பிரதமரைப் பயன்படுத்தி இந்திய மக்களின் பாதுகாப்பை உசாதீனப் படுத்த வைக்கும் இந்த வேலைக்கு யார் கட்டப் பஞ்சாயத்து பண்ணுவது? இந்தியப் பிரதமர் மீதோ, இதைச் செய்யத் தூண்டும் அமேரிக்கா மீது யார் படையெடுப்பது?
இனி தினமணி தலையங்கம்...
===============================================================
போபால் விஷவாயு விபத்தில், யூனியன் கார்பைடு நிறுவனம் இந்திய மக்களை ஏமாற்றியதைப் போன்ற இழிநிலை இனியும் ஏற்படலாகாது என்பதற்காக, மிகப்பெரும் எதிர்ப்புகள் போராட்டங்களுக்குப் பிறகு, அணுஉலை விபத்திற்கு தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இருந்தால், அணுஉலைகளை வழங்கியவர்கள் பொறுப்பேற்கவும், இழப்பீடு வழங்கவும் செய்யும் சட்ட விதிமுறைகள் ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்டன.
இப்போது, அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால், அணுஉலையை வழங்கிய நிறுவனம் பொறுப்பேற்று, இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற நிபந்தனையை இந்திய அரசு தளர்த்தவிருக்கிறது என்கின்ற செய்தி "கதிர்வீச்சுக் கசிவாக' வந்துகொண்டிருக்கிறது.
அணுஉலை விபத்தில் குடிமை கடப்பாடு சட்டம், பிரிவு 17-ல், விபத்துக்குக் காரணம் அணுஉலை, அல்லது தொழில்நுட்பம், அல்லது சேவைக் குறைபாடு என உறுதிப்படும்போது, அதை வழங்கிய நிறுவனமே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறது.
தற்போது அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி ஆலோசனை கூறியிருப்பதைப் போல, "இந்த பிரிவு 17-யை ஒப்பந்தத்தில் வலியுறுத்துவதோ அல்லது வலியுறுத்தாமல் விட்டுவிடுவதோ அந்த அணுஉலையை நடத்தும் நிறுவனத்தின் விருப்பத்தை சார்ந்தது' என்று மாற்றுவதன் மூலம், அணுஉலை வழங்குபவரைப் பொறுப்பேற்பிலிருந்து விடுவித்துவிட வழியேற்படுகிறது.
இந்தியாவில் அத்தனை அணுஉலைகளையும் தற்போது இயக்குவது இந்திய அணுமின் கழகம் (என்பிசிஐஎல்). இது இந்திய அரசு நிறுவனம். ஆக, பிரிவு 17-யை ஒப்பந்தத்தில் வலியுறுத்தாமல் தவிர்த்தால், முழு பொறுப்பையும் ஏற்க வேண்டிய கடப்பாடு இயல்பாக இந்திய அணுமின் கழகத்தையே சேரும்.
அடுத்த கட்டமாக, அணுமின் நிலையங்களைத் தனியார்மயமாக்கும்போது, ஒப்பந்தத்தில் யாரைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்பது அந்த தனியாரின் விருப்பம். ஆகவேதான் இந்த விதித்தளர்வு என்று இந்திய அரசு எதிர்வாதம் வைக்கக்கூடும்.
அனல்மின் நிலையங்களைப் போல, அணுமின் நிலையங்களையும் தனியார் நடத்துவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். ஆனால், அணுஉலை விபத்தில் குடிமைக் கடப்பாடு சட்டத்தில், இழப்பீடு தொகை அதிகபட்சம் எவ்வளவு? அரசு சார்ந்த நிறுவனம் என்றால் 300 மில்லியன் டாலர், அதாவது, இன்றைய கணக்கில் 1850 கோடி ரூபாய். அதுவே, தனியார் நிறுவனம் என்றால் ரூ.1500 கோடி மட்டுமே! எப்படி இருக்கிறது?
இந்திய அரசுக்கு அதிக தொகையும், தனியாருக்கு குறைந்த தொகையும் இழப்பீடு என்பதே ஒரு ஏமாற்று வேலை. இப்போதைக்கு அரசுதான் அணுஉலைகளை அமைக்கப் போகிறது என்று கூறி மக்களை ஏமாற்றும் வித்தை. இது தவறு என சுட்டிக்காட்டினால், "இந்தத் தொகை அந்தந்த நேரத்துக்கு மாறுதலுக்கு உட்பட்டது' என்பதையே இந்திய அரசு திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது.
இழப்பீடு வழங்குவதில் அதிகபட்ச அளவு என்ற கட்டுப்பாடு கூடாது என்றும், இழப்பின் தன்மையை கணக்கிட்டு முழுமையாகப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கூறிய போதிலும் அதனை அரசு பொருட்படுத்தத் தயாராக இல்லை.
தனியார் நிறுவனங்கள் அணுமின்நிலையங்களை நடத்தும்போது, இழப்பீடு தொகைக்காக காப்பீடு செய்து கொள்வதே வழக்கம். இந்திய அரசு சொல்வதைப் போல, அவர்கள் காப்பீடு செய்து கொண்டால், ரூ.1500 கோடிக்கு மட்டுமே காப்பீடு செய்வார்கள். விபத்து மிகப்பெரியதாக இருப்பின், மீதி செலவினத்தை நமது வரிப்பணத்திலிருந்து இந்திய அரசுதான் ஏற்க வேண்டியிருக்கும்.
இந்தியாவுக்கு அணுஉலைகள் வழங்கப்போகும் அமெரிக்க நிறுவனங்கள் இரண்டு: வெஸ்டிங்ஹவுஸ், ஜிஈ. இதில், புகுஷிமா அணுமின் நிலையத்துக்கு அணுஉலைகள் வழங்கிய ஜிஈ நிறுவனம் அடைந்த லாபம் 5 பில்லியன் டாலர். 2011, மார்ச் 11 ல் அணுஉலைகள் சேதமடைந்தன. இதற்கு ஜிஈ நிறுவனம் பொறுப்பேற்க சட்ட விதிகள் இல்லை. அப்படியே இருந்தாலும், இயற்கை பேரிடருக்கு (இந்திய சட்டத்திலும்கூட) அணுஉலை வழங்கியவர் பொறுப்பாக மாட்டார். இப்போது இந்த அணுமின் நிலையத்தை நடத்திய "டெப்கோ' காப்பீட்டுத்தொகையைவிட இழப்பீடு அதிகமாக இருப்பதால் நட்டத்தில் தத்தளிக்கிறது.
பட்டுத் திருந்துபவன் ஏமாளி. பார்த்துத் திருந்துபவன் அறிவாளி. நாம் அறிவாளியாக இல்லாவிட்டாலும்கூடப் பரவாயில்லை, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களாலேயே கோமாளி ஆக்கப்படுகிறோமே, அதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை!
(ஆசிரியர் தினமணி)
==============================================================================================
0 comments:
கருத்துரையிடுக
பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்