26.7.13

நம் ஒரே நம்பிக்கை

மக்களாட்சி அரசமைப்பின் மிகப் பெரிய தூண் நீதித் துறை. இந்த நாட்டின் மக்கள் நல வாழ்விற்கும், தங்கள் உரிமைகள், பாதுகாப்பிற்கும் மக்கள் இறுதியாக நம்பியிருக்கும் ஒரே நிறுவனம் இந்த நீதித் துறைதான். இன்னும் அதன் மீதான நம்பிக்கையை, கணம் பொருந்திய நீதிபதிகள் மீது கொண்டிருக்கிற நம்பிக்கையை நான் இழக்க விரும்பவில்லை.

கணம் பொருந்திய நீதிபதிகள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குத் தடை கிடையாது என்று சொல்லியிருக்கிறார்கள்.இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். சொல்வதற்கு என்ன இருக்கிறது?

நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வும் அவர்களது எல்லைகளும் வரையறுக்கப் பட வேண்டியது அவசியம்... இது நிச்சயம் நீதித் துறைக்கும் மக்களாட்சிக்கும் நல்ல விஷயம் இல்லை... ஆனாலும் சில செயல்பாடுகள் இது அவசியமோ என்று சொல்ல வைக்கின்றன...

நீதிபதிகள் ஒன்று சட்டம் என்ன சொல்கிறதோ அதை மட்டும் கேட்கிறவர்களாக இருக்க வேண்டும். சட்டத்தை சரியாக அர்த்தமுள்ள விதத்தில் விளக்க வேண்டியது மட்டும் அதன் கடமையாக இருக்க வேண்டும். 

அதைத் தாண்டி என்றால் மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்க்கை, நாகரிக வாழ்க்கை இவற்றில் எல்லாம் பங்காற்றுவதற்கு நீதித்துறைக்கு அவசியம் இருக்கிறது என்று கருதினால், அதை பாரபட்சம் இன்றி செயல் படுத்துவது அவசியம். 

மக்களின் நலன் என்பது முன்வைக்கப் பட்டால், முதலில் மக்களின் பாதுகாப்பும், கவுரவுமும் முதலிடம் பெற வேண்டும். ஆனால் நடப்பது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நமது நல வாழ்க்கைக்கு அவசியமானதாகத் தெரியவில்லை.

காவேரி நீர் விவகாரம் எத்தனை ஆண்டுகள் விவகாரம் அதில் இன்னும் உறுதியான இறுதியான முடிவைத் தர நீதி மன்றத்தால் முடியவில்லை... கொடுத்த தீர்ப்பை பிறர் பின்பற்றாத நிலையிலும் அரசுகள் கூடி ஒரு சுமூகமான முடிவு எடுக்க வேண்டுமாம்.... 
முல்லைப் பெரியாறு அணையில் சரியான முடிவுகள் இல்லை... ஆனால் கூடங்குளம் விடயத்தில் மட்டும் விரைவான முடிவு...

எல்லா வழக்குகளுக்கும் வாய்தா .... ஆனால் இதற்கு மட்டும் இறுதியான முடிவு... 
உண்மையில் நீதித் துறை மக்களின் பாதுகாப்பின் மேல் அக்கறை கொண்டிருந்தால், பாதுகாப்பு நடவடிக்கைகள் முடியும் வரை அணு உலைகள் திறக்க தடை விதித்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் அவகாசம்... இன்னும் எத்தனை நாட்களுக்கு...

கணம் பொருந்திய நீதிபதிகள் தங்களது தீர்ப்போடு முடித்திருந்தால் பரவாயில்லை... ஆனால் நாட்டின் பொருளாதராத்திற்கும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும், இந்தியா நாட்டு மக்களின் அத்தியாவசியத் தேவைக்கும் இது மிக அவசியமானது என்று தங்களது கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். நாட்டின் தேசிய ஒருமைப் பாடு...

காவிரி நீர்க்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் இல்லாத, அதற்கு வராத ஒருமைப்பாடு இதற்கு மட்டும் வேகமாய் வந்திருக்கிறது. மற்ற வழக்குகளுக்கு மட்டும் பேசி சுமூகமான முடிவு எடுக்க அரசுகள் முன்வர வேண்டும்... மக்கள் போராட்டங்களில் மக்களோடு அரசுகள் பேச்சு வார்த்தை தேவையில்லையா?

இந்திய நாட்டின் மக்களின் வளர்ச்சிக்காக, தமிழ் நாட்டின் தென்கோடியில் கூடங்குளத்திலும், வடக்கில் கல்பாக்கத்திலும், இன்றைய மற்றும் நாளைய தலை முறையின் வாழ்கையை அடமானம் வைத்து இந்தியாவிற்கு ஒளியேற்றுவோம்... ஆனால் இந்த மக்களின் வாழ்வாதார விவசாயத்திற்கும், மீன் பிடித் தொழிலுக்கும் எந்த வித உத்தரவாதமும் இன்றி... இன்னும் சில ஆண்டுகளில், இந்திய நாட்டின் இந்தப் பகுதி மக்களின்நாடு பாலைவனமான பின்பு இந்தியாவின் எல்லா மாநிலங்களும் ஒளியில் பிரகாசிக்கட்டும்...

வெறும் சட்ட விளக்கம் கொடுப்பவர்களாக இல்லாமல் அதைத்தாண்டி நாட்டின் வளர்ச்சி என்று நீதிபதிகள் சிந்திப்பது நல்லதுதான்... ஆனால் இதில் வெறும் மேல்நாட்டு பொருளாதார வளர்ச்சியைப் போல இந்திய நாடும் அணுவின் வளர்ச்சியில் வளர்வதுதான் வளர்ச்சி என்று சிந்திப்பதையும், நாட்டு மக்களின் பாதுகாப்பும் மிக முக்கியம் என்று சிந்திப்பதையும், நமக்கான வளர்ச்சி முறையை நாமே நிர்ணயிக்க வேண்டும் என்று சிந்திப்பதும் மிக நல்லது.  

அப்படியே இல்லை என்றால்கூட வெளி நாட்டில் அனு மின் நிலையங்கள், அவற்றின் பாதுகாப்பு அரண்கள், அணு உலையைச் சுற்றி எத்தனை ஆயிரம் மக்கள் இருக்கிறார்கள் அது ஏன் கூடங்குளத்தில் அதிகமாக இருக்கிறது .... ஏன் வளர்ச்சி பெற்ற ஜெர்மனி போன்ற நாடுகள் அனு உலைகளை மூட முடிவு எடுத்திருக்கின்றன? .. மாதத்தில் ஆறு மாதங்கள் வெயிலே இல்லாத நாடுகள் கூட என் சூரியஒளி வழியாக மின்சக்தி தயாரிக்கின்றன? ... வருடம் முழுவதும் சூரிய ஒளியில் குளிக்கிற நாம் ஏன் இன்னும் அதை அதிகப் படுத்தாமல் இருக்கிறோம்?.... அப்படி செயல்படுபவர்களும் ஏன் எப்போதும் போல ஊழலியே திளைத்து இருக்கிறார்கள்... எல்லாவ்ற்றளிலும் ஊழல் என்றால்.... கூடங்குள அணு மின் நிலையத்திலும் தரக்குறைவான சாதனங்கள் இருக்கின்றனவா....  எதனால் அரசு மக்களின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை? அவர்களின் நியாயமான கோரிக்கைகள் என்ன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளையும் நீதித் துறை ஒவ்வொரு மிகப் பெரிய தீர்ப்புக்கு முன்பும் எழுப்ப வேண்டியது அவசியம்... 
இல்லையெனில் கூடங்குளத்தில் இன்னும் இன்னும் அதிக அதிக உலைகள் தொடங்கப்படும் ஒட்டு மொத்த தமிழகத்திற்குமான அபாயம் இன்னும் அதிகமாகும்.

இன்னும் நீதித் துறையிடம் நம்பிக்கை இருக்கிறது... ஏனெனில் மக்களாட்சியின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது... 
0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்