10.2.17

தற்காலிக முதல்வரின் திராவிட வீரம்

தற்காலிக முதல்வரின் திராவிட வீரம்

மன்னார்குடி மாபியாவிடமிருந்து தமிழகத்தை மீட்கத்தான் வேண்டும். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அதற்கான மாற்று / தீர்வு, தற்காலிக முதல்வரின் தற்காலிக வீரம்தானா?

 • மெரீனா மீண்டும் பொங்கி எழுந்திருக்கிறது. கடந்த முறை லட்சக்கணக்கான இளைஞர்களினால் எழுந்த எழுச்சியை, காவல்துறையைக் கட்டவிழ்த்து, கலங்கரை விளக்கை களங்கப்படுத்தியதற்காக  வெகுண்டெழாத தற்காலிக முதல்வர், தான் அவமானப்படுத்தப்பட்டதால், சீறிப் பாய்ந்திருக்கிறார். அம்மாவே எதிர்க்காத தனது தோழியை அவரது சீடர் எதிர்த்திருக்கிறார். அவருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.
 • எம் இளைஞர்களை நீங்கள் அடித்து நொறுக்கிய போது சொல்லியிருக்க வேண்டாமா, மாண்புமிகு முதல்வர் அவர்களே – நீங்களும் ஜல்லிக்கட்டு வீரன் என்று? இப்போதுதானே சொல்கிறீர்கள். அதையும் சொல்லக் கூடாது என்று யாரவது கட்டாயப்படுத்தினார்களா? போராட்ட வீரர்களைத் துரோகிகள் என்று, பின்லேடனின் சீடர்கள் என்று ஒரு போட்டோ காட்டும் போது உங்கள் மனசாட்சி துடித்திருக்க வேண்டாமா?
 • பணிவு என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அறியாத அப்பாவியான நீங்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்து அறுபது நாட்கள் கழித்து, அம்மாவின் ஆன்மா உங்களை எழுப்பியது குறித்து எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ராஜினாமா செய்த பிறகுதான் உங்களுக்கு அம்மாவின் மரணம் குறித்து சந்தேகம் வந்திருக்கிறதா, மாண்புமிகு முதல்வர் அவர்களே? அப்படி அம்மாவின் உண்மைத் தொண்டன் என்றால், உங்களின் முதல் அறிவிப்பே அம்மாவின் மரணம் குறித்து அறிய விசாரணைக் கமிஷன் இருப்பதாய் இருந்திருக்க வேண்டாமா முதல்வர் அவர்களே? இப்போதுதான் இதை பற்றி உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கிறது என்றால் எங்களுக்கு உங்கள் மீது சந்தேகம் வராதா முதல்வரே?
 • மன்னார்குடி மாபியா என்று எல்லாராலும் அழைக்கப்படுகிறவர்கள் பற்றி உங்களுக்கு முன்பே தெரியாதா? இதுவரைக்கும் அவர்கள் உங்களையும் மற்றவர்களையும் மரியாதையோடுதான் நடத்தி வந்தார்களா? இதுவரைக்கும் அவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியாதது போல இப்போதுதான் இதைப் பற்றியே உங்களுக்குத் தெரிந்தது போலவும் சொல்லுகிறீர்களே முதல்வரே, சின்னம்மா காலில் விழச்சொல்லி உங்களைக் கட்டாய படுத்தினார்களா? அவர்கள் காலில் எல்லாம் விழுந்த போது  வராத அவமானமா இப்பொது உங்களுக்கு வந்துவிட்டது முதல்வர் அவர்களே? எத்தனை பேர் அவர்கள் காலில் விழுந்திருந்தாலும் நீங்கள் நிமிர்ந்து நின்றிருக்க வேண்டாமா?
 • ராஜினாமா செய்த கையோடே நீங்கள் அம்மா கல்லறை சென்று ஆழ்நிலைத் தியானம் சென்றிருந்தால் நாங்கள், நீங்கள் சொல்வதை உண்மை என்றே ஒத்துக் கொண்டிருப்போம். என் இளம் தம்பி தங்கைகளை, அக்காக்கள், அம்மாக்களை அடித்து நொறுக்கிய போது சொல்லியிருந்தால் நாங்கள் நம்பியிருப்போம். ஆனால் இப்போது கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறதே தற்காலிக முதல்வரே?
 • சரி அப்படியே இந்த மிரட்டல்கள், அம்மாவின் ஆட்சி என்றெல்லாம் நீங்கள் நினைத்திருந்தால், இந்நேரம் அதை ஏதாவது ஒரு வழியில் சட்டமன்றத்தில் பதிவு செய்திருக்க வேண்டாமா?
 •  உங்களின் இந்த நிலைப்பாட்டிற்கு எல்லாரும் தி. மு. க. காரணம் என்று சொல்கிறார்கள். ஸ்டாலின் பன்னீரைப் பார்த்துப் புன்னகைக்கிறார் என்று நீங்களே காலில் விழுந்து சொன்ன சின்னம்மாவும், சசிகலாவை நான் பார்த்ததே இல்லை என்று சொன்ன நாஞ்சில் சம்பத்தும் சொல்லுகிறார்கள். அவர்கள் கூட உங்களை யார் ஆட்டுவிக்கிறார் என்று தெரியாமல் இருக்கிறார்களா? அல்லது அதைப் பற்றி பேசி இன்னும் ஆபத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைக்கிறார்களா? ஒரு சில ஊடகங்கள் தவிர வேறு யாரும் உங்களை ஆட்டுவிப்பவர் யார் என்று சொல்ல யோசிக்கிறார்கள்.

 • உங்கள் அம்மா இறந்த போது ஒருவர் நெஞ்சில் ஓடிச்சாய்ந்து அழுதீர்களே நினைவு இருக்கிறதா?
 • உங்கள் அம்மா இறந்ததாக அறிவிக்கப்படும் முன்னரே நமது பொன்னார் என்ன சொன்னார் என்பது நினைவிருக்கிறதா? அக்டோபர் மாதம் இருபத்தி மூன்றாம் தேதி – உங்கள் அம்மாவை மருத்துவமனையில் சேர்த்து முப்பத்தி ஒரு நாட்கள் கழித்து – தமிழக அரசியலில் மிகப் பெரும் மாற்றம் வரப் போகிறது, அதை வைத்து நமது ஆளும் அதிகாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னாரே – அது உங்களுக்குத் தெரியாதா? • உங்களுக்கும் சேகர் ரெட்டிக்கும் என்ன தொடர்பு முதல்வரே – சசிகலாவையே தெரியாது, பேசியதில்லை என்று சொன்ன  நீங்கள் இவரையும் தெரியாது என்று சொல்வீர்களா? இவருக்கும் சசிகலாவிற்கும் தொடர்பு இல்லையென்றால் இவருக்கும் உங்களுக்கும்தான் தொடர்பு இருக்க வேண்டும். அதனால்தான் மத்திய அரசின் பிடியில் நீங்கள் இருக்கிறீர்களோ என்கிற சந்தேகம் வருகிறது. அவருக்கும் சசிகலாவிற்கும்தான் தொடர்பு என்றால் இந்நேரம் அவைரைத் தூக்கி உள்ளே வைத்திருக்காதா மத்திய அரசு?
 • காந்தியைக் கொன்ற ஓர் அமைப்பு, ஏறக்குறைய பதினான்குஆண்டுகளுக்கும் மேலாக ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படாத ஓர் அமைப்பிற்கு நீங்கள் அனுமதி வழங்கியிருக்கிறீர்களே இது எதனால் என்று எங்களால் ஊகம செய்து விட முடியாதா? நீங்கள் யார் நெஞ்சில் சாய்ந்திருக்கிறீர்கள் என்பதுதெரியாதா?
 • உங்களுக்கென்று திரு விசு அவர்கள் குரல் எழுப்புகிறார். கையெடுத்துக் கும்பிடுகிறார். குருமூர்த்திகள் இருக்கிறார்கள். கணேசன்கள் இருக்கிறார்கள். உங்களுக்காக யார் யாரெல்லாம் பேசுகிறார்கள் என்பதை பார்க்கும் போதுதான் உங்களின் திராவிட வீரம் மீது சந்தேகம் வருகிறது முதல்வரே. உங்களின் தன்மானம் மீதும் எங்களுக்கு ஐயம் வருகிறது.
 • நீங்கள் இன்னொரு மாபியா ஆகவோ, அல்லது இன்னொரு இடத்தில் கூழைக்கும்பிடு போடும் திராவிட முதல்வராகவோ இருக்க மாட்டீர்கள் என்று எங்களை நம்ப வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். ஒரு நாள் பேசி விட்டீர்கள் என்பதற்காக உங்களுக்கு உண்மையிலேயே வீரம் வந்து விட்டது என்று நம்பத்தயாரில்லை. 
 • நீங்கள் உண்மையிலேயே ஜல்லிக்கட்டு வீரன் என்றால் மத்திய அரசிடமும் மல்லுக்கட்டுங்கள்..... நாங்கள் சொல்வது பொய் என்று நிரூபியுங்கள்.
மக்களின் தீர்ப்பு இப்போது தேவையில்லையா? 
இன்னொரு தேர்தல் வந்தால் நல்லதில்லையா?
  


  

4 comments:

ப.கந்தசாமி சொன்னது…[பதிலளி]

எப்படியோ, திரு.ஸடாலின் முதல் மந்திரியாவதற்கு கடக்கால் போட்டாயிற்று.

Appu U சொன்னது…[பதிலளி]

@ப.கந்தசாமி

தி.மு.க, வருதோ வராம போகுதோ யாருக்குத் தெரியும். அவர்களே தற்காலிக முதல்வருக்கு ஆதரவு கொடுக்கலாம். தமிழக காங்கிரஸ் சசிகலா பக்கம் செல்வதால் தி.மு.க. பா.ஜ.க பக்கம் செல்லலாம். என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும். திடீர்னு காளைகள் கூட வரலாம்...

Selva சொன்னது…[பதிலளி]

Superb. Valid questions.

Appu U சொன்னது…[பதிலளி]

@Selva

nanri selva

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்