1.2.17

புதுமையை நம்புகிறவன் - மெரீனாவிலிருந்து ஒரு செய்தி


புதுமையை நம்புகிறவன் - மெரீனாவிலிருந்து ஒரு செய்தி  
- அ . பிரபாகரன் 
 சில ஆண்டுகளுக்கு முன் இத்தாலியில் படித்த போது அங்கே உள்ள வெரோனாவில் ஒரு பங்கில் விடுமுறைக்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ள பங்குக்குருவுக்கு உதவுவது என் வேலை. அவ்வப்போது அங்கே திருப்பலிக்கு ஒரு வயதான அம்மா பாப் தலையோடு வருவார். ஒவ்வொரு முறையும் திருப்பலி முடிந்தபிறகு என்னைத் தன் வீட்டுக்கு அழைப்பார். வாக்கிங் ஸ்டிக்கோடு வரும் அவரது கணவரும் என்மேல் பிரியமாக இருப்பார். அப்படி ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு நான் சென்றபோது, அந்த அம்மா ஒரு புகைப்பட ஆல்பத்தைக் கொண்டு வந்தார். அதில் வெரோனாவில் உள்ள ஒரு சிற்றாலயத்தில் நற்கருணை ஆராதனை செய்யும் புகைப்படம் இருந்தது. அதைக்காட்டி, “உங்களுக்கு இதில் உன்ன தெரிகிறது?” என்றார். “அப்பம் வெள்ளையாக இருக்கிறது, வேறொன்றும் தெரியவில்லை” என்றேன்.

அவரோ என்னைக் கொஞ்சம் எரிச்சலுடன் பார்த்தார். அவரது கணவர் புன்னகைத்தார். செஞ்சிலுவைச் சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று வீட்டிலிருக்கும் அவரது கணவர் நிறைய வாசிப்பவராக இருக்கக்கூடும். அவரது அறையில் மிகத் தடிமான புத்தகங்களும் முக்கியமான களஞ்சியங்களும் இருந்தன. நமது ரூபாய் மதிப்பில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பு இருக்கலாம் அவை. அவரது கணவர் சிறுபுன்னகையோடு சொன்னார், “இந்த அப்பத்தில் இயேசுவின் உருவம் இவருக்;குத் தெரிகிறது என்று இவள் சொல்கிறாள், உங்களுக்குத் தெரிகிறதா? எனக்கு வெறும் அப்பம் மட்டும்தான் தெரிகிறது” என்றார். அந்தப் பெண்மணி உணர்ந்த இயேசுவின் உருவம் தெரியும் அந்தப் புதுமையை என்னால் அன்று உணர முடியாததுபோல பல தருணங்களில் நிகழ்ந்திருக்கிறது.

இறையியல் படிக்கின்ற காலங்களில் மைக் எவான்ஸ் போன்ற பெந்தகோஸ்து பிரச்சாரகர்களின் சீரணி அரங்கக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். அவை எனக்கு வேடிக்கையாகவும், கொஞ்சம் அதிசயம் மற்றும் வினோதமாகவும், நேர்த்தியாக நடைபெறும் சர்ரியலிச நாடகக் காட்சி போலவும் தோன்றும். அடிப்படையில் இறைநம்பிக்கையாளனாக இருப்பவன் மனித வாழ்வில் இறைவன் அசாதாரணமான ஈடுபடும் சாத்தியங்கள் உண்டு என்பதை நம்புவனாக இருக்கவேண்டும். நான் நம்புகிறேன். இருப்பினும் பெரும்பாலான மாதா கண்சிமிட்டுதல், சிலுவையில் இரத்தம் வடிதல், சுவற்றில் உருவம் தெரிதல் வகையிலான புதுமைகளை நான் பொருட்படுத்தியதில்லை. அது தனி நபர் அனுபவம் சார்ந்தது. அவரவர் மனச்சான்று சார்ந்தது. என்னைப் பொருத்தவரை எனக்கு அது நிகழவில்லை. அவ்வளவுதான்.

ஆனால், என் தனிப்பட்ட வாழ்வின் வழி நடத்துதலிலும் சமூக வரலாற்றின் இயக்கங்களிலும் கடவுள் அற்புதங்கள் செய்பவராக இருக்கிறார் என்பதை உணர்கிறேன். கடந்த சனிக்கிழமை எனக்கு ஏற்பட்ட அனுபவம் அப்படி ஓர் அற்புதமாக அமைந்து போனது. கடந்த சனிக்கிழமையன்று நானும் என் நண்பரும் மெரினாவுக்குச் சென்று போராடும் இளைஞர்களோடு இருந்துவிட்டு வரலாமே என்று புறப்பட்டோம். அது இப்படி ஓர் உன்னதமான அனுபவமாக அமையும் என்று நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. வாழ்வின் அற்புதமான தருணங்களில் ஒன்றாகவும், மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகவும் அது அமைந்து போனது.

உலகில் வேறு எங்கேனும் போராட்டமே கொண்டாட்டமாகவும், கொண்டாட்டமே போராட்டமாகவும்; நிகழ்ந்;திருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. 

இது ஒரு புதுமைதான். ஜல்லிக்கட்டுக்கான ஒரு சாதாரணப் போராட்டம் எப்படி இவ்வளவு தீயாய்ப் பரவியது? ஏதோ கிராமங்களில் மட்டும் நிகழக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு எப்படி இத்தனை ஆதரவு கிடைத்தது. லேப்டாப் இளைஞர்களும் வாட்ஸ் அப் நவநாகரீக யுவதிகளும் எப்படி போராட முன் வந்தார்கள்? வாழ்க்கையிலே ஒருமுறை கூட ஜல்லிக்கட்டு பார்த்திராத நகர்ப்புற மாந்தர்கள் எப்படிக் குடும்பம் குடும்பமாக வந்து போராட்டத்தில் உட்கார்ந்து சென்றார்கள்? மக்களை மந்தைகளாவே வைத்திருக்கும் அரசியல்வாதிகளும், நடிகர்களும் இவர்கள் பின்னால் போக நேரிட்டது எப்படி?

கேள்விகள் எதற்குமே எந்தவிதமான தர்க்கரீதியான பதில்கள் இல்லை. இது நிச்சயமாக என் காலத்தில் நான் கண்ட புதுமைதான். புதுமை என்பது ஏதோ அமானுஷ்யமாக வாழ்வின் இயக்கங்களுக்கு மாற்றாக நடக்க வேண்டியதில்லை. வரலாற்று இயக்கங்களுக்குள் இறைவன் ஊடுருவி பாதிக்கப்பட்டவர்களுக்கு சக்தி தருவதே விவிலியம் கூறும் புதுமைகளிலெல்லாம் பெரிய புதுமை. இஸ்ராயேல் மக்களின் எகிப்திய விடுதலையைவிட வேறு எந்தப் புதுமை உண்டு? அது வரலாற்று நிகழ்வுகளுக்கு ஊடாகத்தானே நடைபெற்றது. மெரினாவில் நிகழ்ந்த புதுமை அனுபவத்தில் ஒருநாள் சஞ்சரித்து வந்த எனக்கு சமகாலச் சமூகத்தின் பன்முகக் கூறுகளை பார்க்கும் அனுபவமாக அது அமைந்து போனது.

ஒரு பின்நவீனத்துவச் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதன் அனைத்துக் குறியீடுகளும் நிறைந்து கிடந்தது மெரீனாக் கடற்கரை பெரிய கூட்டம். கடற்கரை முழுவதும் மணலோடு போட்டி போட்டுக் கொண்டு மக்கள் கூட்டம நின்றது. ஆனால் ஒன்று பட்ட குவியம் இல்லை. வழக்கமாக இப்படிப்பட்ட போராட்டங்களில் எதிர்கொள்ளும் பெரிய தலைமைகள் இல்லை. எங்கும் ஜனத்திரள். ஆங்காங்கே சிறு கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே கொஞ்சம் பொதுக்கூட்டம் போன்ற தோற்றம் இருந்ததே தவிர ஆங்காங்கே அதே போல பல கூட்டங்கள் நடந்தன.

யார் வேண்டுமானாலும் பேசினார்கள். எவருக்கும் மைக் கிடைத்தது. சிறு சிறு குழுக்கள் ஆங்காங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். சிலர் ட்ரம்ஸ் வாசித்தார்கள். சிலர் தப்பு வாசித்தார்கள். சிலர் கரகாட்டம் ஆடினார்கள். சிலம்பாட்டம் நடைபெற்றது. இளம்பெண்கள் ஆர்ப்பாட்டமாக ஆடினார்கள். கோசம் போட்டார்கள்;. சிலர் அமைதியாக பேனர் வைத்துக் கொண்டு நின்றார்கள். சிலர் மைக்கில் பேசினார்கள். சிலர் மைக் இல்லாமலும் பேசினார்கள். சிலர் சாலைகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சிலர் குப்பைகளைப் பொறுக்கிக் கொண்டு இருந்தார்கள். எங்கிருந்தோ பிஸ்கட் பாக்கெட்கள் வந்தன. தண்ணீர் வந்தது. வாழைப்பழத்தார்களை சிலர் சுமந்து வந்து கொண்டிருந்தார்கள். திடீர் டாய்லெட்டுகள் ஆங்காங்கே நின்று கொண்டு மனிதர்களின் கழிவுகளை வாங்கிக் கொண்டு அவர்களை வெளியே அனுப்பின. சில நேரங்களில் குழந்தைகள் காணாமல் போனார்கள். மைக்கில் அறிவிப்புச் செய்ததும் மீண்டும் கிடைத்தார்கள்.

சென்னையில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதில் சென்று பங்கேற்காவிட்டால்;; ஆயுசு குறைந்துவிடும் என்று எண்ணியது போல குடும்பத்தோடு வந்து பார்த்தோ பங்கெடுத்தோ சென்றான் என்று தோன்றியது. மொத்தத்தில் பின்நவீனத்துவத்தின் முக்கிய அம்சமான சிறியவைகளின் உடைபட்ட கொண்டாட்டமாக அது அமைந்தது. இதைக் கடந்து வந்திருந்த மக்கள் யாரென்று பார்த்தால் பெரிய புதுமை காத்திருந்தது. கிராமத்தினர் இருந்தார்கள். கிராமத்தில் இருந்து பெற்றோருக்குத் தெரிந்தோ தெரியாமலோ சென்னை வந்து கம்பெனியிலோ, ஹோட்டலிலோ நிரந்தரமாகவோ, நிரந்தரமில்லாமலோ வேலைபார்க்கும் இளைஞர்கள் ஆட்டம் பாட்டம் என இருந்தார்கள். நல்ல படிப்புப் படித்து நுனிநாக்கு ஆங்கிலம் பேசி, கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பீட்டாவை திட்டிக் கொண்டிருந்தார்கள்.

மூன்று லட்சமோ, ஐந்து லட்சமோ நன்கொடை கொடுத்துக் கல்லூரிகளில் சேர்த்துவிட்ட பிள்ளைகள், பதாகைகளோடும் கோசங்களோடும் நின்றார்கள். பெரியார் கட்சிக்காரர்கள் இருந்தார்கள். தீவிர கம்யூனிசம் பேசுபவர்கள் இருந்தார்கள். தமிழ்த்தேசியவாதிகள் இருந்தார்கள். எந்த இசங்களும் தெரியாத அப்பாவி ஜனங்களும் இருந்தார்கள். திருநீறு, குடுமிகளோடு வந்தவர்களும் இருந்தார்கள். இவர்கள் தமிழ்ப் பெண்களாக இருக்காது என்று தோன்ற வைத்த சிவப்புப் பெண்களும் சுடிதார்களுடன் இருந்தார்கள். சும்மா வந்தவர்களும் இருந்தார்கள். மிகுந்த தீவிர உணர்ச்சியோடு அங்கேயே தங்கி கண்களில் கனலோடு போராடிய இளைஞர்கள் இளம் பெண்களும் இருந்தார்கள். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் பன்மைத்துவத்துக்கான அங்கீகரிப்பாகவும், கொண்டாட்டமாகவும் இருந்தது மெரினாக் கடற்கரை. பின்நவீனத்துவத்தின் நேர்மறை அம்சமே பன்மைத்துவத்தைக் கொண்டாடுவதுதானே!.மொத்தத்தில் ஓர் வித்தியாசமாக அனுபவமாகவும், அற்புதமாகவும், நமது பண்பாட்டு உணர்வையும் அடையாளத்துக்கான தேடலையும், கொண்டாட்ட உணர்வையும் போராட்ட உணர்வையும் தூண்டி எழுப்புவதாக இருந்தது மெரினா அனுபவம். இந்த உணர்வு நிலையிலே சஞ்சரித்துவிடாமல் நாம் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவைகள் நிறைய உண்டு. அவற்றுள் சில. 
  • முன்பு போலத் தூய்மைவாதம் பேசி ஒன்று திரட்டப்பட்ட அணிச்சேர்க்கைகளைக் கொண்டு போராடுவதே விடுதலைக்கு வழி என்று சொல்பவர்கள் தங்கள் வழிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பின் நவீனத்துவ உலகில் பல்வேறு கருத்தியல்கள். நோக்கங்கள் உள்ளவர்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் சேரும் புள்ளிகளை இனம்கண்டு கொள்வதே சாத்தியம் என்பதை மெரீனா கற்றுக் கொடுத்திருக்கிறது. ஜல்லிக்கட்டை எதிர்த்தவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டது ஒரு நல்ல அம்சம். 
  • மற்ற மாநிலங்களில் பம்மாத்துக் காண்பிப்பது போல் தமிழகத்தில் பன்மைத்துவத்தையும், இங்குள்ள பண்பாட்டு வேர்களையும் அழிக்க நினைத்தால் அந்த பருப்பு இங்கே வேகாது. இங்கே “மோடி” மஸ்தான் வேலைகளெல்லாம் பலிக்காது. 
  • இப்போது நடைபெற்ற போராட்டம் வெறுமனே ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல. அமுக்கப்பட்ட பல்வேறு உணர்வு நிலைகளின் வெளிப்பாட்டுக் குவியலே ஜல்லிக்கட்டு. தமிழகம் புறக்கணிக்கப்படுதல், விவசாயிகளின் தற்கொலை, ரூபாய் நோட்டு செல்லாததால் கோபம், வேலையின்மை, ஜெயலலிதா மரணம் எதிர் கொள்ளப்பட்ட விதம் எனப் பல்வேறு பிரச்சனைகளால் நொறுங்கொண்ட தன்னிலைகளின் எதிர்ப்புக் குரலே ஜல்லிக்கட்டுப் போராட்டம். அதிகாரத்தில் உள்ளவர்கள் இதை உணர வேண்டும். 
  • தற்போதைய முதல்வர் ஓ.பி செயலலிதா இறந்த நாளான டிசம்பர் 5ஐ தமிழகத்தின் இருண்ட நாளாக அறிவித்திருக்கிறார். செயலலிதா இருந்திருந்தால் இந்தப் போராட்டம் எப்படி எதிர் கொள்ளப்பட்டிருக்கும் என்பதை நன்கு உணர்ந்வர்களுக்கு ஒப்பீட்டளவில் மென்மையாகத் தெரிந்த ஓ.பி.எஸ் இதை அறிவித்திருப்பது நல்ல நகை முரண். 
  • இந்தப் போராட்டத்தை முன் வைத்து பல்வேறு ஆதர்சங்களும், பிம்பங்களும் தலைமைகளாகக் கட்டமைக்கப்படுவது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. அது மிக மேம் போக்கானதாகவும் நம் சமூகச் சிக்கல்களின் புரியாமை வெளிப்பாடகவும் தெரிகிறது. குறிப்பாக, கலாமின் வழிவந்த கூட்டம் ஒன்று சகாயம் போன்றவர்களைத் தீர்வுகளாவும், இலட்சிய நாயகர்களாவும் கட்டமைக்க முயல்வது தமிழ்ச்சமூகம் அடிப்படையில் தன் பிரபுத்துவ மனநிலையில் இருந்தும் நாயக வழிபாட்டுச் சிந்தனைகளில் இருந்தும் வெளிப்பட விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. 
  • ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழ் அடையாளத்துக்கான போராட்டமாகவும், நமக்கான பண்பாடுகளை நாமே தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரத்துக்கான போராட்டமாகவும் பார்க்கப்பட வேண்டும். மாறிவரும் விஞ்ஞான உலகில் தமிழ்ச்சமூகத்தில் ஜல்லிக்கட்டின் பொருத்தப்பாடு இன்மை, மற்றும் அதில் இருக்கக்கூடிய சனாதன அம்சங்கள் என்றும் கவனத்துக்குரியவை. 
  • இப்போராட்டம் தமிழ்ச் சமூக எதரிகள் யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வாய்ப்பளித்திருப்பது பாராட்டுக்குரியது. இதை யாரெல்லாம் எதிர்த்தார்கள் என்பது யாரெல்லாம் போலிஸ் அட்டூழியத்தை சிவனின் திருவிளையாடலாகப் பார்த்தார்கள் என்பதையும் உணர்ந்தாலே இது புரியும். 
  • இக்கட்டுரையை எழுதி முடிக்கும் இத்தருணத்தில் போராட்டம் காவல் துறையின் அராஜகத்தோடு முடிவுக்கு வந்திருக்கிறது. இருக்கிற பயங்கரவாதத்திலேயே கொடூரமான பயங்கரவாதம் காவல் துறையின் பயங்கரவாதம்தான். காரணம், அது அரசு அங்கீகாரத்தோடு செய்யப்படுகிறது. ஆனால் என்ன ஒன்று, சமூக வலைத்தளங்களால் அது முன்னெப்போதையும்விட இது பயங்கரமாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. 
  • ஜாலியன் வாலாபாக்கிலிருந்து, கூடங்குளம் வரை வரலாறு முழுக்க எல்லாப் போராட்டங்களிலும் இதுதான் உண்மை. ஆனால் செல்போன் யுகத்தில் இது அம்பலப்படுத்தப்பட்டிருப்பதால் காவல் துறையினர் இனி பத்திரிக்கையாளர்களின் காமெராக்களை அணைத்துவிட்டு முன்னெச்சரிக்கையாக தங்கள் அராஜகங்களைத் தொடங்குவார்கள் என்று நம்பலாமே தவிர வேறு எதுவும் நல்லது நடக்கும் என்று தோன்றிவில்லை. 
முடிவாக: 
அற்புதங்களில் ஒரு சிக்கல் இருக்கிறது. அற்புதங்களை அனுபவிப்பவர்கள் அந்த நேரத்தில மட்டும் பரவசப்பட்டுவிட்டு பிறகு வழக்கமான இயல்புநிலைக்குத் திரும்பிவிட வாய்ப்பு இருக்கிறது. இயேசுவின் அற்புதங்களை அதிசயித்து ஆகோ, ஓகோவென ஆர்ப்பரித்தவர்கள் அவரை அரசராக்க விரும்பியவர்கள் (யோவா 6) பிறகு தங்கள் பழைய நிலைக்குத் திரும்பி அவரைச் சிலுவையில் அறையக் கோசமிட்டார்கள். இந்த பின் நவீனத்துவ அற்புதங்களில் ஒன்றான இந்தப் போராட்டத்தின் பங்குதாரர்களும் அப்படிப் போவதற்கான சாத்தியம் இருக்கிறது. வால் ஸ்டிரீட் எழுச்சி நமக்கு ஞாபகம் வரவில்லையா? பின் நவீனத்துவத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று அதன் நெகிழ்வுத்தன்மை (Fluidity) மற்றும் தற்காலத் தன்மை (Momentariness). இந்த ஜல்லிக்கட்டு எழுச்சியும் அப்படிப் போய்விடுமோ என்ற அச்சம் நமக்கு இருக்கிறது. அப்படி இல்லாமல் ஆக்கச் செய்வதே வரலாற்று அற்புதங்களை நம்புகிறவர்களின் பணியாக இருக்க முடியும்.

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்