24.2.15

இந்தி. வாழ்க. தமிழ் இந்து வின் கட்டுரை

இந்தி மொழிக்குக்கூடப் பயன்படாத இந்தியாவின் மொழிக்கொள்கை! இதை வைத்துக்கொண்டு என்ன செய்வார் மோடி?
தமிழர்கள் என்றால் இந்தியை எதிர்த்துத்தான் பேச வேண்டுமா என்ன? நஹி. உலக தாய்மொழிகள் நாளான இன்று, எல்லா தாய்மொழிகளுக்கும் ஆதரவாகப் பேசலாமே! குறிப்பாக, இந்திக்கு ஆதரவாக. அதுவும் இது மோடி அரசின் கணக்குப்படி இது ‘மாத்ரிபாஷா திவஸ்’ அல்லவா? 
கடந்த வாரம் ட்விட்டரில் இந்திய மொழிகளுக்கான ஹேஷ்டேகுகள் புதிய போக்கை உருவாக்கின. உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றவுடன், #ஜெய்ஹிந்த் என்கிற இந்தி வாசகம் ட்விட்டரின் (இந்தியப் பதிப்பில்) டிரெண்டிங் பட்டியலில் முதலாவதாக வந்தது. ஆனால், மறுநாளே தமிழ்ப் பயனர்கள் #தமிழ்வாழ்க என்றொரு ஹேஷ்டேகை ட்விட்டரில் வெளியிட்டு அதை ட்விட்டர் டிரெண்டிங் பட்டியலில் முதலிடத்துக்குக் கொண்டுவந்தார்கள். இது வேறு ஒரு விளையாட்டு! 
இந்தியின் மீது தமிழர்கள் சற்றுக் கரிசனம் காட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. பாவம், இந்தி! இந்தியாவில் இந்தியை முதல் மொழியாகப் பேசுவோர் 18 கோடிப் பேர் என்றும், இரண்டாம் மொழியாகப் பேசுவோர் 30 கோடிப் பேர் என்றும் மத்திய இந்தி இயக்குநரகம் சொல்கிறது. இவ்வகையில், உலகில் ஏழாவது பெரிய மொழியாக இந்தி இருக்கிறது. ஆனால், வட இந்தியாவின் சில தனிப்பட்ட மொழிகளை இந்தியின் கிளைமொழிகளாகக் காட்டி, 26 கோடிப் பேர் அதைப் பேசுவதாக மற்றொரு கணக்கும் உண்டு. இந்த அடிப்படையில், எத்தனோலாக் என்கிற அமைப்பின் புள்ளிவிவரப்படி சீனம், ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகியவற்றுக்கு அடுத்து உலகின் நான்காவது பெரிய மொழி இந்தி. 
வெற்றிகரமான மொழியா இந்தி? 
மொழிகளின் மதிப்பை அதன் வளர்ச்சி, சந்தை மதிப்பு, அவற்றினூடாக வெளிப்படும் அறிவுச்செல்வங்களின் மதிப்பு, பயன்பாட்டு மதிப்பு போன்றவற்றின் மூல மாகவே நாம் அளவிட முடியும். இந்திய அரசும் இந்தி மாநிலங்களின் அரசியல் தலைவர்களும் சுதந்திரத் துக்கு முன்பிருந்தே இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக, தேசிய மொழியாக ஆக்குவதற்காகப் படாத பாடுபட்டார்கள் என்பதை அறிவோம். ஆனால், அவர் களால் இந்தியை ‘வெற்றிகரமான ஒரு மொழியாக’ இன்னமும் ஆக்க முடியவில்லை. உலக மொழிகளின் மத்தியில் தலைநிமிர்ந்து நிற்கும் தகைமை பெற்றிராத ஒரு மொழியாகத்தான் இந்தி மொழி இன்றும் இருந்து வருகிறது என்கிற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? 
இந்தியின் இன்றைய பெறுமதி என்ன? விக்கிபீடியாவில் 287 மொழிகளில் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்கிலம் முதலாவது இடத்தில் சுமார் 47 லட்சம் கட்டுரைகளோடு இருக்கிறது. இந்தப் பட்டியலில் இந்தி 49-வது இடத்தில்தான் வருகிறது. வளர்ந்த மேலைநாட்டு மொழிகளை விட்டுவிடுங்கள், வளரும் நாடுகளின் மொழிகளான துருக்கி, கசாக், ஆர்மீனியன், இந்தோனேஷியன் போன்ற மொழிகள்கூட இந்திக்கு முன்னால் இருக்கின்றன. 1.17 லட்சம் கட்டுரைகள் மட்டுமே இந்தியில் உள்ளன. (சுமார் 67 ஆயிரம் கட்டுரைகளோடு 61-வது இடத்தில் தமிழ் இருக்கிறது. மற்ற இந்தியத் துணைக்கண்ட மொழிகள் இதற்கும் கீழேதான் இருக்கின்றன). இந்தப் புள்ளிவிவரத்துக்குப் பின்னால் எத்தனையோ தோல்விகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. 
3,700 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள உலக மொழிபெயர்ப்புத் துறை மற்றுமொரு மறைமுக ஆதாரம். இந்தச் சந்தையில் இந்தி உட்பட எல்லா இந்திய மொழிகளையும் சேர்த்தாலும் உலகச் சந்தை மதிப்பில் ஒரு சதவீதம்கூட அவை வராது. பெரும்பாலான தகவல் தொழில்நுட்பங்களும் இணையச் சேவைகளும் இந்தியாவில் இந்தி உட்பட எந்த மொழிகளுக்கும் உள்ளார்ந்த ஏற்பை (நேட்டிவ் சப்போர்ட்) அளிப்பதில்லை. இந்திய மொழிக் கொள்கை அதை உத்தரவாதப்படுத்துவதில்லை. இது சீனாவில் நடக்காது. அதனால்தான் சீனாவில் தனியார் சந்தையின் தேவைக்கான சீன மொழிபெயர்ப்பாளர்களில் பதிவுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்தைத் தாண்டுகிறது. இந்தியாவில் இந்திக்கு அது சில ஆயிரங்களைத் தாண்டாது. 
5 ஆயிரமும் 26 கோடியும்! 
கடந்த ஆண்டு புதுடெல்லி பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியின்போது, 50 ஆண்டு கால அனுபவமுள்ள இந்திப் பதிப்பாளர் ஒருவரிடம் கேட்டேன்: “இந்தியில் ஒரு புத்தகம் பெஸ்ட் செல்லர் என்றால், எத்தனை பிரதிகள் விற்கும்?” அவரது பதில்: “அதிகபட்சம் 5 ஆயிரம்.” 
26 கோடிப் பேர் 5,000 பிரதிகள். தமிழ்ப் பதிப்பாளர்களே, சந்தோஷப்படுங்கள்! இந்தி மொழியில் இணையதளங்களின் நிலைமை என்ன? நல்லது. இதைப் பற்றிப் பேசாமலேயே விட்டுவிடுவோம். அமேசானில் இந்தி மின்னூல்களின் கதி என்ன? மன்னிக்கவும். 
கோடிக் கணக்கில் கொட்டி அழுது, மற்றவர்கள் தலைமீது திணித்தும்கூட, இந்தி நவீன உலகில் ஒரு கேட்பாரற்ற மொழியாகத்தான் இருக்கிறது. அதற்குக் காரணம், வேறு யாரும் அல்ல, இந்திய அரசுதான். டெல்லியில் அதிகாரத்தைக் குவித்துவைப்பதற்கான ஒரு அதிகார உத்திதான் இந்தியாவின் மொழிக்கொள்கையே தவிர, மற்றபடி அது எந்த மக்களுக்கும் - இந்தி பேசும் மக்கள் உட்பட - பயன்தரக்கூடிய ஒரு மொழிக் கொள்கை அல்ல. தொடக்கம் முதலே இந்தி ஒரு அரசியல் கருவியாகவே இங்கே பயன்படுத்தப்பட்டது. அதுவும் ஒரு சமூக ஆதிக்கக் கருவியாகவே அது வடிவமைக்கப்பட்டது. அதனால்தான் பிற நாடுகளைப் போல இந்தியாவில் ‘வட்டார மொழிகள்’ மட்டுமல்ல ‘தேசிய மொழி’கூட வளரவில்லை. 
சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட ராஷ்ட்ரபாஷா! 
இதிலும்கூட இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். 1950-களில், சீனாவில் சீன மொழியை ஆட்சிமொழியாக ஆக்கும்போது, அந்த மொழியை எளிமைப்படுத்துவதிலிருந்துதான் மாவோ அரசு தொடங்கியது. ஆனால், நேரு அரசு என்ன செய்தது? பாமர மக்களின் இந்துஸ்தானியை சம்ஸ்கிருதமயமாக்கி, அதைப் பண்டித மக்களின் மொழியாக அவரது அரசு ஆக்கியது. அதன் விளைவாக இந்தி பேசுகிற மக்களுக்கே ராஷ்ட்டிரபாஷா இரண்டாம் மொழியாக மாறிவிட்டது. அதுமட்டுல்ல, போஜ்புரி, மைதிலி, மகதி, சத்தீஸ்கரி, கார்வாலி, ராஜஸ்தானி போன்ற 50-க்கும் மேற்பட்ட தனித்தனி மொழிகளை (அவற்றில் பல இந்தியைவிட மூத்தவை, செவ்வியல் மரபுகளை உடையவை) வலுக்கட்டாயமாக இணைத்து, அவற்றின் மீது சம்ஸ்கிருத ஞானஸ்நானம் செய்து, அதன் கையில் அரசியல் சாசனக் குண்டாந்தடியைக் கொடுத்து, என்னவெல்லாமோ செய்துபார்த்தார்கள். இறுதியில் பல கோடி மக்கள் பேசிய இந்துஸ்தானியையும் சக மொழிகளையும் ஊனமாக்கியதுதான் மிச்சம். 
இந்தியைப் பரப்புவதில் நமது பிரதமர் அலாதிப் பிரியம் காட்டுகிறார் என்பதை நாம் அறிவோம். ஆனால், அவருக்கு அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு செய்தி, சில நாளிதழ்களில் ஜனவரி 2-ம் வாரம் வெளிவந்தது. செய்தியின் சாரம்சம் இதுதான்: உத்தரப் பிரதேசத்தில் வாராணசியில் புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜீவ் சங்லா, மருத்துவம், பொறியியல் துறைகளுக்கான பாடநூல்களை போஜ்புரி, மைதிலி, மகஹி ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து இணையதளத்தில் வெளியிட்டார். வாராணசியில் உள்ள அந்தப் பல்கலைக்கழகத்துக்கு வரக்கூடிய மாணவர்களில் பெரும்பாலானோர் கிழக்கு உத்திரப் பிரதேசம், பிஹார் ஆகிய இடங்களிலிருந்து வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு ஆங்கிலமோ இந்தியோ சரிவரத் தெரியவில்லை என்றும், அந்த மொழிகளில் பாடம் நடத்தினால்கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் சங்லா குறிப்பிடுகிறார். எனவே, வேறு வழியின்றி பூர்வாஞ்சல் என்று அழைக்கப்படுகிற அந்த பகுதி மக்களின் உண்மையான தாய்மொழிகளான போஜ்புரி உள்ளிட்ட மொழிகளில் அவர் பாடங்களை மொழிபெயர்த்திருக்கிறார்! 
‘இந்திக்காரர்களுக்கு’ ஆங்கிலம் தெரியவில்லை என்றால் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது, இந்தியிலும் அவர்களால் பாடம் படிக்க முடியவில்லை என்றால்? அதுவும் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக மாணவர்களால்? மண்டையில் பளீரென இறங்கவில்லையா இந்தச் செய்தி? 
‘இந்தியே இந்தியாவின் தேசிய மொழி’, ‘இந்தியே இந்தியாவில் பெரும்பான்மையோர் பேசும் மொழி’, ‘உத்தரப் பிரதேசத்திலும் பிஹாரிலும் இந்திதான் பேசுகிறார்கள்’ என்கிற எல்லா ‘உண்மை’களையும் இந்தச் செய்தி உடைத்தெறிகிறதே! 
மோடிஜி, பூர்வாஞ்சலிகளின் மொழிகளை இனியாவது மதித்து, அவற்றை அங்கீகரியுங்கள். இல்லையென்றால், உங்கள் தொகுதியான வாரணாசியில் ஓர் இந்திப் பிரச்சார சபாவையாவது தொடங்குங்கள்! #இந்திவாழ்க. 
- ஆழி செந்தில்நாதன், 
தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், தொடர்புக்கு: zsenthil@gmail.com

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்