23.4.13

அன்னை தெரசாவும் அபியும்


[அபி இக்கட்டுரை எழுதிய அ. பிரபாகரனைக் குறிக்கிறது.]

************************************************************

ரொம்ப நாளாயிற்று - ஏதேனும் எழுதி. உண்மையா பொய்யாவில் அவ்வப்போது ஏதாவது எழுதச் சொல்லி அப்பு அன்பாய்க் கேட்பார். என் சோம்பேறித்தனம் அதற்கு ஆப்பாய் வந்து நிற்கும். நண்பரும் ஆரம்பத்தில் மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். ஒருமுறை பதிவேற்றம் செய்தால் சுமார் 15 காமேன்ட்டுகளாவது வரும். இப்போது அவரே எப்போதாவதுதான் எழுதுகிறார். எனவே அவரைத் தொடர்ந்தவர்களும் அவரைக் கை விட்டு விட்டார்கள். அவரே எழுதி, அவரே படித்துக் கொண்டு அவரே சிலாகிக்கும் நார்சிச மனோபாவத்திலிருந்து அவரை விடுவிக்கும் கடமை எனக்கு இருப்பதாலும், வெகுநாள் கழித்து அவரை இப்போதுதான் சந்தித்ததாலும் ஏதேனும் எழுத வேண்டுமென்று எனக்குத் தோன்றிற்று. பல மாதங்களுக்கு முன் நானும் அப்துல் கலாமும் என்று எழுதியதாக ஞாபகம். இனி கட்டுரை ....

************************************************************
சமீபத்தில் ஒரு நண்பர் ஒரு புத்தகம் பற்றிய மதிப்புரையை எனக்கு மெயிலில் அனுப்பியிருந்தார். அவர் ஒரு கிறித்தவர் - அன்னை தெரசாவின் அபிமானி. அந்தப் புத்தகம் அன்னைத் தெரசாவைப் பற்றி விமர்சித்து எழுதப் பட்டிருக்கிறது. நண்பருக்கோ அன்னை தெரசாவைப் பற்றி மனதில் மிகப் பெரிய பிம்பம் இருக்கிறது. தற்காலத்தில் வாழ்ந்த தெய்வப் பிறவியாக அவரை நண்பர் பாவித்துக் கொண்டிருக்கிறார். இந்த விமர்சனத்தைப் படித்ததும் அவருக்கு நிலை கொள்ளவில்லை. குழப்பமாகப் போய் விட்டது. பிம்பம் தகர்ந்து விடுமோ என்று பயப்படுகிறார்.

பல நேரங்களில் நாம் பிம்பங்களில்தான் சுகம் கண்டு கொண்டிருக்கிறோம். பிம்பங்கள் நொறுங்குவது நமக்குப் பிடிப்பதில்லை. ஆனால் நொறுங்குகிற பிம்பங்களிருந்துதான் உண்மையின் வாசல் உங்களுக்குக் கொஞ்சமேனும் புலப் படும். ஆனால் உண்மையின் வெளிச்சங்கள் அவர்களது அறிவுக் கண்களை கூசச் செய்யும் என்பதால் மனிதர்கள் அதை விரும்புவதில்லை. பிம்பங்களிலேயே வாழ்ந்து முடிந்து விடுகிறார்கள்.

சிறுவயதில் நம் எல்லோருக்கும் நம் தந்தைதான் ஹீரோ. சிறு வயதில் நாங்கள் கிராமத்தில் வசித்த போது எங்கள் வீடு ஊரின் ஓரத்தில் இருந்தது. என் தந்தை வேலையின் நிமித்தம் இரவு நேரங்களில் அடிக்கடி தாமதமாக வருவார். அவர் வரும் வரை என் தாயார் வீட்டினுள் விழித்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பார். ஒரு கால் ஊனமான எண்பது  வயதான என் தாத்தா பாதுகாவலுக்காக கையில் தடியுடன் திண்ணையில் உட்கார்ந்து இருப்பார். திருடன் யாரேனும் வந்தால் வெளியே ஆம்பிளை உட்கார்ந்திருக்கிறாரே என்று என் அம்மாவுக்குத் தைரியம். என் தந்தை வந்ததும் என் அம்மா இன்னும் தைரியமாகி விடுவார்.

ஆனால் என் தாத்தாவாக இருந்தாலும் தந்தையாக இருந்தாலும் சாதாரணத் திருடன் வந்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது.  இதுதான் உண்மை. சாதாரணத் திருடனை எதிர்ப்பதற்குக் கூட இருவருக்குமே உடல் வலிமை நிச்சயமாய் இல்லை. ஆனால் நாங்கள் எமது இரவுகளை சாந்தமாகக் கழிப்பதற்கு எங்களுக்கு வீரமான என் தாத்தாவின் பிம்பமோ, தந்தையின் பிம்பமோ தேவைப்பட்டது. [ப்ராய்டு கூட கடவுளைப் பற்றி பேசும் போது இது பற்றிக் குறிப்பிடுகின்றார்] இப்போது அந்தப் பிம்பம் உண்மையில்லை என்று தெரிய வந்ததால் என் தந்தை மீதோ அல்லது தாத்தா மீதோ என் அன்போ மரியாதையோ குறைந்து விட வில்லை.

என் நண்பரின் வருத்தத்தைக் கேட்ட போது என் சிறு வயதில் என் அம்மாவும் நாங்களும் உட்கார்ந்திருக்கும் காட்சிதான் ஞாபகம் வந்தது. ஏறத்தாழ எல்லா மனிதர்களின் வாழ்க்கையிலும் பிம்பங்கள் உண்டு. பிம்பங்கள் இன்றி வாழ்க்கையில்லை. பிம்பங்கள் வைத்திருப்பதில் தவறில்லை. பிம்பங்கள் எல்லாருக்கும் கண்டிப்பாகத் தேவை. ஆனால் மனிதப் பிம்பங்களை  அதீதப் புனைவுகளோடு மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகப் பார்க்கிற போதுதான் பிரச்சனை வருகிறது. 

அன்னை தெரசா ஒன்றும் கடவுள் இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் நான் அவரை நேரடியாக ஒரு முறை பார்த்திருக்கிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சென்னை லயோலாக் கல்லூரியில் வைத்து அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் வாகனம் வந்ததும் எல்லாரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடினார்கள். ஆனால் நான் ஓடவில்லை.  சிலர் கை குலுக்கவும், ஆசீர் வாங்கவும் எத்தனித்தார்கள். நான் அதையும் செய்ய வில்லை. ஆனால் கொஞ்சம் அருகிலேயே நின்று பார்த்தேன். இவற்றிலெல்லாம் எனக்கு அப்போது அவ்வளவாக ஆர்வமில்லை. நான் மாணவனாக இருந்தபோது அன்னை தெரேசா குறித்து யாரோ சொன்ன ஒரு சில விமர்சனங்களால் பாதிக்கப் பட்டிருக்கிறேனோ என்று இப்போது தோன்றுகிறது. 

ஆனால், பிறகு வந்த காலங்களில் அவரது சபையினர் நடத்தும் இல்லங்கள் சிலவற்றைப் பார்க்க நேர்ந்தது. அவருடைய ஆளுமையின் தாக்கம் அப்போது புரிந்தது. சித்தாந்த ரீதியாக அவரது சபையினரின் செயல்பாடுகள் ஒரு சிலருக்கு [அமைப்பு ரீதியான மாற்றம் பற்றி {வெறுமனே ! } பேசும் ஒரு சிலருக்கு] பிடிக்காதிருக்கலாம். ஆனால் அந்த சகோதரிகளின் அர்ப்பணமும் , ஏழைகள் மீதான கரிசனையும், சேவையும், துறவு மனப்பான்மையும் நிச்சயமாய்ப் போற்றப்படத் தக்கவை.

இப்போது நண்பர் சொன்ன நூலுக்கு வருவோம். ஒருவர் மிகப் பிரபலமாகி விட்டால் அவரது அடுத்த பக்கத்தைப் பற்றிப் பேசுவதும், விமர்சிப்பதும் பொதுவான நடைமுறைதான். இப்படி விமர்சிப்பதாலேயே விமர்சிப்பவர்களில் சிலர் பிரபலமாகி விடுவார்கள். அந்தவகையில் இந்த நூலும் அன்னை தெரசாவின் அடுத்த பக்கத்தைப் பற்றி பேசுகிறது. நூலினுடைய மொத்த நோக்கமே அதுதான். அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை. 

இது அன்னை தெரசாவிற்கு மகிமையே சேர்க்கிறது. அவர் சாதாரண மனிதர்தான் - கடவுளல்ல என்ற உண்மையை அது தெரிந்தோ தெரியாலோ வலியுறுத்துகிறது. அதனாலேயே அவர் போற்றப்படத்தக்கவர் என்ற உண்மை இதன் மூலம் புலப்படுகிறது. அதாவது - குறைகளோடு வாழ்ந்த மனிதராய் இருந்தும் - தனது குறைகளைக் கடந்து அன்பை விதைத்து இவ்வளவு பெரிய தாக்கத்தைப் பலரிலே ஏற்படுத்தியிருக்கிறாரே  என்பது வியப்பாய் இருக்கிறது.

ஒருவரைப் பற்றிய மதிப்பீடுகள் அவர் மனிதராக எத்தனை குறைபாடுகளைக் கொண்டிருந்தார் என்பதை வைத்துச் செய்யப்பட முடியாது. மாறாக அவர் வரலாற்றில்  அவரைப் பின்பற்றுவர்களிடம் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதைப் பொறுத்தே செய்யப்பட வேண்டும். இது காந்தியிலிருந்து பிரபாகரன் வரை எல்லாருக்கும் பொருந்தும்.

எனவே அந்த நண்பரிடம் நான் இப்படிச் சொன்னேன் - "ஒரு மனிதர் மீது விமர்சனங்கள் வைப்பதால் அவரது  மனிதத்தன்மை மென்மேலும் வெளிச்சத்துக்கு வருகிறது. அந்த மனிதத்தன்மையோடு அவர் செய்த பெரிய காரியங்களாலேயே அவர் மகானாகிறார் - விட்டுத்தள்ளுங்கள்."
                                                                                                         
                                                                                                            - அ . பிரபாகரன் 
*********************************************************

அபிக்கு
நார்சிச மனோபாவத்திலிருந்து என்னை மீட்டெடுக்க வேண்டிய கடமை உணர்ந்து கொண்டதனால் இன்றிலிருந்து நீர்
நார்சிசம் மீட்ட சுந்தர பாண்டியன் என்று அழைக்கப் படுவாயாக!


[அபி என்பது திகப் பிரசங்கி என்பதையும் குறிக்கும்]
*********************************************************

1 comments:

Antony சொன்னது…[பதிலளி]

Very nicely explained the truth behind the recent mudslinging activity on Mother Theresa and her noble experience on this planet. Thanks Mr.Prabhakarn for posting this.
Antony Raj

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்