14.4.13

சித்திரை பேசுதடி



  • தமிழர் யார் என்பதில் எப்படி பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றனவோ அதோ போலவே தமிழரின் புத்தாண்டு எது என்பதிலும் சிக்கல்கள் பல இருக்கின்றன போல. தை – யா அல்லது சித்திரையா? பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் என்பதில் எனக்கு எள்ளளவும் அய்யம் இல்லை. அதைத் தமிழர் புத்தாண்டு என்று கொண்டாடுவதிலும் எனக்குத் தயக்கம் இல்லை.
  • அதே சமயம் சில கேள்விகளை முன்னிறுத்த வேண்டியது அவசியம். இன்னமும் ஏப்ரல் மாத நடுவில் பல தெற்காசிய நாடுகளில் அந்தந்த நாடுகளின் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றன. வங்காளம், நேபாளம், பர்மா, தாய்லாந்து, சிறிலங்கா, லாவோ போன்ற நாடுகள். இந்தியாவில் சீக்கியர்கள், அஸ்ஸாமியர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளர்கள் என பல இனங்கள் இந்த காலத்தில்தான் புத்தாண்டு கொண்டாடுகின்றன.
  • இதுமட்டுமல்ல. ஐரோப்பிய நாடுகளில் கூட வசந்த காலம் தொடங்கும் இந்த கால கட்டத்தில்தான் புத்தாண்டை கொண்டாடி வந்திருக்கின்றனர். அதாவது கிரகோரியன் காலண்டர் முறை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு முன்பு வரை என்று சிலர்  நினைக்கிறார்கள். அந்தக் காலண்டர் முறையை ஏற்றுக்கொள்ள மறுத்து ஏப்ரல் மாதங்களில் தொடர்ந்து புத்தாண்டைக் கொண்டாடிய மக்களை கேலி செய்வதற்காகவே உருவாக்கப் பட்டது முட்டாள்கள் தினம் என்று ஒரு தியரி உண்டு. அதுவே தொடர்ந்து ஏப்ரலில் புத்தாண்டு கொண்டாடும் அனைவரையும் முட்டாள்கள் என கேலி செய்யும் நாளாக ஆனது என்று வாதிடுபவர்களும் உண்டு. அப்படியானால் தமிழர்களின் புத்தாண்டுதினமும் சித்திரையில்தானா?
  •  எது எப்படியோ நாம் இன்னும் நிறைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழினம் பற்றி வெளிவந்திருக்கிற ஆய்வுகளை சாதாரண மக்கள் வரை கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி – துப்பாக்கி, ஒசத்தி-போடா போடி இவைகளைத் தவிர்த்து தமிழ் மொழி குறித்தோ, இனம் குறித்தோ, சித்திரை குறித்தோ தொலைக்காட்சிகள் ஏதாவது ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் லட்டு தின்ன ஆசையா என்று கேட்டு, தமிழ் தெரியாத நடிகைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து தமிழ் மொழியை வளர்க்கலாம்.
  • அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…[பதிலளி]

கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்