1.6.10

சாலை மரணம் - நவீன கொடை

முன்பெல்லாம் யாராவது இறந்தால் எப்போது இறந்தார் என்று கேட்பார்கள். அவர் காலையில் இறந்தார் அல்லது மாலையில் இறந்தார் என்று பதில் கிடைக்கும். இப்போது யாரவது இறந்தால் - எங்கே இறந்தார் என்கிற கேள்வியும் அதற்கு பதிலாக - சாலையில் இறந்தார், அல்லது ஓடு பாதையில் இறந்தார் அல்லது ரயில் பாதையில் இறந்தார் என்கிற பதிலே கிடைக்கிறது.

முன்பு இறந்தவர் - இயற்கை எய்தினார் என்று சொல்வோம். ஆனால் இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால் இயற்கை எய்தினார் என்று சொல்வதற்கு மனம் ஒப்பவில்லை, ஏனெனில், பலரது வாழ்க்கை முடிதல் என்பது செயற்கையாகவே முடிகிறது அல்லது முடிக்கப்படுகிறது.

மானிட உயிர் விலை மதிப்பற்றது. ஆனால் ஏன்தான் நமது ஊர்களில் இப்படி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்பது தெரியவில்லை.

1. சாலை ஒழுங்குகள் இன்னும் சரிவர கடைபிடிக்கப் படுவதில்லை என்பதைக் காட்டிலும், அதை நடைமுறைப் படுத்துவதற்கு அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிற குற்றச் சாட்டை முதன்மைப் படுத்தலாம். உள்ள விதிகளை எல்லாரும் கடைப் பிடிப்பதற்கும் அல்லது அனைவரும் அறிந்து கொள்வதற்கும் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. எதெற்கெல்லாமோ இந்த அரசுகள் விளம்பரம் மேற்கொள்கின்றார்கள். அதைத் திறக்கிறார்கள், இதற்கு மாலையிடுகிறார்கள், அவருக்குப் பிறந்த நாள், இவருக்கு நினைவு நாள் - சாலை விதிகளை மதித்தது நடப்பது பற்றி விளம்பரம் குடுத்தால் குறைந்தா போவார்கள். சரி கஜானாவில் காசு இல்லையென்றால், உள்ள அனைத்து ஊடகங்களும் இதை வெளியிட வேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால் செய்ய முடியாதா என்ன?

2. சரி - ஒழுங்காக ஓட்டுனர்களுக்கான உரிமம் வழங்கப் படுகிறதா? அதுவும் இல்லை. இந்தியன் படம் வந்தபிறகு - ஒவ்வொருவனும் தங்களது உரிமம் எப்படிப் பெற்றார்கள் என்பதை நினைவு படுத்தி அதோடு அனைவரும் RTO அலுவலகம் எப்படி நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள உதவியும் செய்தது. ஆனாலும் இதுவரையும் RTO அலுவலகங்கள் அப்படித்தான் இருக்கின்றன. படிக்காதவர்களுக்கு உரிமம் மறுக்கப் படக் கூடாதுதான் - ஆனால் விதிகளே தெரியாமல் உரிமம் பெறலாம் என்கிற நிலை இருந்தால் எப்படி விதிகளை கடைப் பிடிப்பதைப் பற்றி பேச முடியும்?

3. சரி. சாலைகளில் விதிமுறைகளைக் கடைபிடிக்காத ஓட்டுனர்களை எப்படி சரிசெய்ய முடியும். காவல் துறை நண்பர்கள் - மிகவும் பாராட்டப் பட வேண்டியவர்கள். சென்னை சாலைகளில் - அனல் பறக்கும் வெயிலிலும் தார்ச் சாலையின் நடுவில் வியர்க்க வியர்க்க நிற்கும் அவர்களையும் மீறி
தங்கள் விருப்பம் போல வண்டி ஓட்டுபவர்களை நாம் என்ன செய்ய முடியும். எல்லாருக்கும்தான் அவசரம்.

4. அரசுப் பேருந்துகளை அதிகப் படுத்தி மக்கள் அவைகளைப் பயன்படுத்த ஊக்கப் படுத்த வேண்டும். சென்னையைச் சுற்றி எத்தனை கல்லூரிகள், எத்தனை தொழிற்சாலைகள் - ஒவ்வொன்றிற்கும் எத்தனை சொகுசுப் பேருந்துகள் - சென்னையின் போக்குவரத்து இப்படி இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் இப்படி ஆயிரக்கணக்கில் இயங்கும் பேருந்துகள்தான். இத்தகைய பேருந்துகளை தாம்பரம், பூந்தமல்லி எண்ணூர் போன்ற இடங்களுக்குப் பிறகு அனுமதிக்கக் கூடாது. அரசுப் பேருந்துகளையோ அல்லது மின்சார இரயிலைப் பயன்படுத்தி சென்னையின் போக்குவரத்து கூட்டத்தைக் கொஞ்சம் குறைக்கலாம். விதிகளை மீறி ஓட்டுவதிலும், தடம் மாறி ஓட்டுவதிலும், சொகுசுப் பேருந்து என்பதனால் அதிக இட ஆக்கிரமிப்புச் செய்வதிலும், அரசுப் பேருந்து நின்று செல்கிற இடங்களில் எல்லாம் இவர்களும் அவ்விடங்களை ஆக்கிரமிப்புச் செய்து...ஆனால் அவர்களிடமிருந்து வரும் பணத்திற்காக அரசு அதைச் செய்யாமல் இருக்கலாம் ?


5. எப்படித்தான் அனைவரையும் சாலை விதிகளை மதிக்கச் செய்வது - சாலை விதிகளை மதித்தால் விபத்துக்கள் தானாய் குறையும். ஒழுங்காகத் திட்டமிடுவது, நேரத்தோடு கிளம்புவது, சிறிது தாமதமானாலும் அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போடும் தைரியம், சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதனால் நமது பாதுகாப்பை முதன்மைப் படுத்துவது ... நாம் நினைத்தால் முடியும் - அரசு நினைத்தால் முடித்துக் காட்டலாம்...

சாலை விதிகள் மதிக்கப் பட்டால், சாலைகள் நன்றாய் இருந்தால், நாடும் வளம் பெரும் - நாமும் வளம் பெறலாம்.

1 comments:

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…[பதிலளி]

தங்களின் இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழே உள்ள முகவரிக்கு வந்து பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/10/6102011.html

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்