16.5.17

குப்பை லாரியும் ஆட்டோவும்


ஏறக்குறைய மிகச்சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வந்ததற்கான காரணம் கடந்த இரண்டு மாதங்களாக வேலையின்றி சும்மா ஊர் சுற்றியே போரடித்துப் போய் விட்டது என்பதாக இருந்தாலும், இன்றைக்கு ஊர் திரும்பும் வேளையில் சந்தித்த குப்பைலாரியும் ஆட்டோவும் இந்தப் பதிவிற்கான காரணம் என்பதே மிகச்சரி. 
வேலையின்றி இருப்பது ஒரு கலை. வடிவேலு சொல்லுவதை போலவே அது ரொம்பக் கடினமான ஒன்றுதான்.
பேருந்து ஓட்டுனர்களின் வேலை நிமித்தம் காரணமாக ரயில் நிலையமும், ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களும் பிதுங்கி விழுந்து கொண்டிருந்தன. எனது வண்டியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பும் வேளையில் எனக்கு முன் அந்தக் குப்பை லாரி ...

குடிதண்ணீர் லாரிகள் தண்ணீரை வீணாக்காமல் சென்றதாகவோ, விபத்தில்லாமல் சென்றதாகவோ வரலாறு இல்லை. குப்பை லாரிகளும் அதை போலவே தன்பங்குக்கு சில தனித்த பெருமைகளை பதிவு செய்திருக்கின்றன. புகை மூட்டத்தால் அது செல்கிற இடங்களை மாசு படுத்தாமல்சென்றதாக இல்லை. தண்ணீரை வீணடித்து தண்ணீர் கொண்டுவருவதை போல, மாசுபடுத்தித்தான் குப்பைகளை அள்ள  வேண்டியிருக்கிறது.

அப்படிப்பட்ட லாரி ஒன்றுதான் புகையை வாரி இறைத்து எல்லாரும் இருமித் தும்மும் படி செய்தது. வேகமாகச் செல்லும் ஆம்புலன்சுக்கு வழிவிட்டு முன்னே உள்ள வாகனங்கள் ஒதுங்கி வண்டியை நிறுத்து விட வேண்டும். அதே போல அம்புலன்சுக்கு பின்னால் குறைந்தது நூறு மீட்டர் இடைவெளி கிடைத்த பிறகுதான் நிறுத்தப் பட்ட வாகனங்கள் செல்ல வேண்டும். நம்ம ஊரில் ஆம்புலன்சுக்கு வழி விடும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வந்திருக்கிறது. ஆனால் ஆம்புலன்ஸை ஒட்டிக் கொண்டு அவன் பின்னாலேயே செல்லும் பழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை. ஆம்புலன்சுக்கு எங்கே வழி இருக்கிறதோ அங்கே செல்லும். எப்போது பிரேக் விழும் என்று தெரியாது. அப்படிப் போடும் போது பின்னால் வரும் வண்டிகள் மோதி மற்றொரு விபத்து ஏற்பட்டு, இன்னொரு ஆம்புலன்ஸை அழைக்கக் கூடாது என்பதற்காகவே பின்னால் இடைவெளி. ஆனால் அது நம்ம ஊர் ரோட்டில் சாத்தியமே இல்லை. ஆம்புலன்சுக்கு ஒதுங்கி நாம் நிற்கும் வேளையில் நாம் மீண்டும் வண்டியை எடுப்பதற்குள் சர் சர் - என்று நூறு வண்டியாவது போய் விடும். ஆம்புலன்சுக்கு வழி விட்ட நம்ம முட்டாப் பசங்க. அவங்க ரொம்ப அறிவாளிங்க. நிற்க ...

இந்த குப்பை லாரிக்கு பின்னால் நூறு மீட்டருக்கு நாங்கள் யாரும் போக வில்லை. அந்தப் புகை யாரையும் நெருங்கி வரவிடவில்லை. இனிமேல் ஆம்புலன்சுக்குப் பின்புறமும் இப்படி கறுப்புப் புகை வரும் மெக்கானிசம் இருந்தால் பல விபத்துக்களைத் தவிர்க்கலாம். ஆனால் இந்த மெக்கானிசம் வேண்டுமெனில் குப்பைலாரியைத் தான் ஆம்புலன்ஸாக்க வேண்டும் ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. என்ன சிக்கல்? அதற்கு நான் மீண்டும் காலை சந்தித்த குப்பை லாரிக்குத் தான் செல்ல வேண்டும்.

நூறு மீட்டர் இடைவெளியில் நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது ஒரு படத்தில் வடிவேலு காலை எழுந்து சாமி கும்பிட்டு வரும் ஆட்டோ ஓட்டுநர் போல ஒருவர் எனக்கு வலப்புறம் ஓவர்டேக் செய்ய முயல்கிறார். வளசரவாக்கம் ரோட்டில் இடது புறம் வாகனங்கள் நிற்கும் என்பதால் வழிவிட முடியாமல் நான் வண்டி ஓட்டிக் கொண்டிருக்க, வேறு வழியின்றி சற்றே ஒதுங்கி போய்யா போ என்று வழி விட, புகைவிடும் குப்பை லாரிக்குப் பின்னால் இருக்கும் அந்த நூறு மீட்டர் இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்ள வேகமாகச் சென்று அந்த லாரியை நெருங்கும் வேளையில் பிரேக் லைட் இல்லாத அந்தக் குப்பை லாரி பிரேக் போட, சுதாரித்து பிரேக் போட்டு  வலது புறம் திருப்ப, அப்படியே மிகப் பெரும் சத்தத்தோடு, கவிழ்ந்து விழுந்தது அந்த ஆட்டோ. நாங்கள் ஒவ்வொருவரும் பிரேக் போட வேறு எந்த விபத்தும் இல்லாமல் முடிந்தது அந்த விபத்து. 

எங்கிருந்தோ ஓடி வந்த அத்துனை பெரும் ஆட்டோவைத் தூக்கி அந்த ஓட்டுனரையும், அதில் பயணம் செய்த இருவரையும் உடனே வெளியில் தூக்கினார்கள். யாருக்கும் எந்த சிராய்ப்பும் இல்லாமல். 

நிமிர்த்து பார்க்கும் போது எல்லாவற்றிற்கும் காரணமான அந்த குப்பை லாரி புகையை மட்டும் விட்டுவிட்டு கண்ணுக்கெட்டாத தூரம் சென்று விட்டது. 

ஆட்டோ சரிந்து செல்வதை திரைப்படத்தில் மட்டுமே பார்த்த எனக்கு என் கண் முன் பார்த்தது தூக்கிவாரிப் போட்டது. அதன் பின்னால் வந்த நாங்கள் அனைவரும் பிரேக் போட்டது எங்களுக்குள்ளே விழிப்பாய் இருந்த அந்த ஓட்டுனர்தானே தவிர நாங்கள் இல்லை. எல்லா நேரமும் அந்த ஓட்டுநர் விழிப்பாய் இருப்பானா தெரியாது.

ஆம்புலன்சுக்குப் பின்னால் வருவதைத் தவிர்க்க வேண்டுமென்றால் குப்பை லாரியைத்தான் ஆம்புலன்ஸாக்க வேண்டும் என்று சொன்னேன்.  சிக்கல் என்னவென்றால் அதில் பிரேக் லைட்பிக்ஸ் பண்ண வசதி இருக்காது. மேலும் பின்னால் எத்தனை பேர் அடிபட்டுக் கிடந்தாலும் அந்த ஓட்டுனருக்கு எதுவும் தெரியாது.

இதுவே இப்படி இருக்க இதுபோல ஆட்டோ ஓட்டுனர்களை வைத்து அரசுப்பேருந்துகளை இயக்குகிறார்களாம். ஏன் குப்பை லாரி ஓட்டுபவர்களை வைத்துக் கொண்டால் இன்னும் சுகமாக இருக்கும்.....


1 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்