27.7.15

அப்துல்கலாம்

சற்று நேரத்திற்கு முன்பு, உயர் திரு அப்துல் கலாம் இறந்து போனார் என்ற துயரச் செய்தியைக் கேட்டபோது அவரது அன்பான, கனிவான முகம் கண்முன்னே வந்து நின்றது. அவரைப் பற்றி எழுதலாம்  என்று அமர்வதற்குள் அத்துனை  கட்டுரைகள் வந்து விட்டன. 

எஸ் எம் எஸ்கள்  / வாட்ஸ் அப்  செய்திகள், வீடியோக்கள் பரிமாற்றம் என தேசம் முழுவதும் அவரைப் பற்றி பேசும் ஒன்றே அந்த மனிதர் மாமனிதர்  என்பதற்கு சாட்சியாகும். ஒரு அரசியல் தலைவர் திடீரென இறந்து போனால் கூட இத்தகைய பரிமாற்றங்கள் நிகழத்தான் செய்யும். ஆனால் இந்த பரிமாற்றம், மாநிலம் கடந்து, மதம் கடந்து, கட்சி கடந்து நடக்கிறபோதும், பகிர்ந்து கொள்ளப்படும் செய்திகளைப் பார்க்கிற போதும், எவ்வளவு மாசில்லாத மனிதராக அவர் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் மற்ற தலைவர்களைக் காட்டிலும், எவ்வளவு  மேலானவர்,என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. 

ஒரு மனிதன் இவ்வளவு உயரத்திற்கு சென்ற பிறகும் இவ்வளவு தாழ்ச்சியோடு இருக்க  முடியும் என்பதற்கு, நம் காலத்தில் இவரை விடச் சிறந்த ஒரு உதாரணத்தைத் தர முடியாது. 

அவரது அறிவிற்கும், படைப்புத்திறனுக்கும் இந்தியத துறையில் அவர் ஆற்றிய பணிகள் சான்றாக  இருக்கும்.

தமிழ்வழிக் கல்வியில், தன் பயணத்தைத் தொடங்கிய அவர் தொட்ட உச்சம் ஒன்றே போதுமானது - தாய் மொழிக் கல்வி ஒன்றும் எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்று காட்ட.

தனது பதவிக் காலத்தில், குடியரசுத் தலைவருக்கு உண்டான பகட்டைக் களைந்து விட்டு மக்கள் தலைவராக இருந்ததை ஒரு போதும் மறக்க முடியாது.

எத்தனை குறைகள் நம்மிடத்தில் இருந்தாலும் நேர்மறையான விடயங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தியா முதன்மையான நாடு என்று சொல்லும் அந்த மனிதரின் பாஸிடிவ் அணுகுமுறை நம் ஒவ்வொருவருக்குமே இன்று தேவைப்படுகிறது.

பிரம்மச்சார்யம் உலகிலுள்ள எல்லார் மேலும் அன்பு காட்ட உதவும் என்பதற்கும் சான்றே அப்துல்கலாம்.

அவர் செல்லாத பள்ளிகள்,  கல்லூரிகள் மிகக் குறைவே. ஒவ்வொரு முறையும், சில குழந்தைகளையாவது ஊக்கப் படுத்துவதில் அயராது இருந்தார் என்பதற்கு சான்றாகவே பேசிக் கொண்டிருக்கையிலேயே அவர் உடல் தளர்ந்தது.

நீங்கள் விஞ்ஞானியாய், இந்தியராய், ஆசிரியராய், எழுத்தாளராய், பேச்சாளராய், அன்பான மனிதராய், உண்மைப் பற்றாளராய் எல்லாருக்கும் ருக்கும் உத்வேகம்  தந்திருந்தாலும், எங்களுக்கு நீர் தமிழராய் இருக்க வும் உத்வேகம் தந்திருக்கிறீர் என்பதும் மிகப் பெருமையே. 
எங்கு சென்றாலும் தமிழின்  பெருமையையும், தமிழ் இலக்கியங்களையும் உலகிற்குச் சொன்னவரே, உங்கள் நம்பிக்கை உங்களை வாழ்விக்கும்.




2 comments:

rmn சொன்னது…[பதிலளி]

ஈடு இணையற்ற இந்தியர்
அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்

”தளிர் சுரேஷ்” சொன்னது…[பதிலளி]

மறைந்தாலும் மறக்க முடியா மாமனிதர்! ஆழ்ந்த இரங்கல்கள்கள்!

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்