2.12.13

ச. சசிமா .....


°சச்சின்
அளவுக்கு அதிகமாக புகழப்பட்ட சச்சின் டெண்டுல்கார் இனிமேல் விளையாட மாட்டாரே என்கிற கவலை எனக்கு பல வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது. இது என் தொண்டைக் குழியை இழுக்க இதைத் தாங்க முடியாமல் கிரிக்கெட் பார்ப்பதை விட்டு பல வருடங்களாகி விட்டது. (அப்பவே அவர் ரிட்டயர்டு ஆகியிருக்கனுமான்னு கேள்வி கேக்கப்புடாது).

அவரின் இறுதி விளையாட்டைக் கூட செய்தியாய்த்தான் படித்தேன். ஏதாவது ஒரு ஹீரோ பின்னால் போவதை நம்மால் தடுக்க முடியவில்லை. விடயம் அதுவல்ல.
இந்தியப் பத்திரிக்கைகள் போலவே பாக்கிஸ்தானியப் பத்திரிக்கைகளும் சச்சினை மிகவும் புகழ்ந்து எழுதியதைப் பார்த்த தாலிபான் - இனிமேல் சச்சினைப் புகழ்ந்து எழுதவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. எனக்கென்ன பயமா இருக்குன்னா நானும் தான் இந்தியப் பத்திரிக்கைகள் அளவுக்கு அதிகமாக சச்சினைப் புகழ்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். என்னையும் தலிபான் என்று நினைத்து விடுவார்களோ?

° சங்கரராமன்
சங்கரராமன் கொலைவழக்கில் சங்கராச்சாரியார் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஏறக்குறைய எண்பத்தி ஒரு நபர்கள் பிறழ் சாட்சிகளாக மாறி, ஆவணங்கள் மறைக்கப்பட்டு (அப்படி என்று சில பத்திரிக்கைகள் சொல்லுகின்றன) அனைவரும் விடுதலை செய்யப் பட்டிருக்கின்றனர். பிறழ் சாட்சிகளாவது குற்றம் என்றே இதுவரை நான் நினைத்திருந்தேன். ஆனால் தனியாகவோ ஒட்டு மொத்தமாகவோ அந்தர் பல்டி அடிப்பதெல்லாம் குற்றம் இல்லை என்று இப்போதுதான் தெரிந்திருக்கிறது.  அவர்கள் எல்லாம், உயிருக்குப் பயந்தோ, பணம் விரும்பியோ தங்கள் சாட்சியங்களை மாற்றிக் கொள்ள வில்லை. உண்மையை மட்டுமே சொன்னார்கள் என்றும், அவர்கள் அனைவருக்கும், மறதி இருப்பது உண்மை என்றும், தமிழக மக்கள் அனைவரையும் போல, நான் நம்புகிறேன்.

எண்பதுக்கும் மேற்பட்டோர் மாற்றி சொல்லி பலரை விடுதலை செய்தததும், ஒரு அதிகாரி வாக்கு மூலத்தை மாற்றி எழுதி பல பேர் மரண தண்டனைக் கைதிகளாக இருப்பதும் இந்திய நீதித் துறைக்கு அழகல்ல. பேரறிவாளன் உட்பட பலர் இன்னும் உள்ளே இருப்பது நமக்குத் தான் அவமானம். 

ஒன்று இப்போதும் புரிகிறது. அரசும், அதிகாரமும், சேர்ந்தால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு இவை இரண்டே போதுமானது.


° சிக்கியது - (பணமல்ல) 
ஒவ்வொரு ஆண்டும்  - அதாவது ஓர் ஆண்டு மட்டும், ஆர்.டி.ஓ சோதனைகளில் 22,000 கோடி லஞ்சம் பெறப் பட்டிருக்கிறது என்று ஒரு நிறுவனம் ஓட்டுனர்களிடமிருந்து பெறப்பட்ட ஓர்  ஆய்வு தெரிவிக்கிறதாம். நான் சொல்லலை டைம்ஸ் ஒப் இந்தியா சொல்லுகிறது. 

"சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது, சாட்சிகளான ஓட்டுனர்கள் முன்னுக்குப் பின் முரணாக பிறழ்வதை கருத்தில் கொண்டு அனைத்து அதிகாரிகளையும் விடுதலை செய்கிறோம்." 

° மங்கள்யான் 
மங்கள்யான் - மங்களகரமான பெயர். [எனக்கென்னமோ மங்கள் அண்ட் மங்கல் மெட்டல் மார்ட் என்கிற வானொலி விளம்பரம்தான் நினைவுக்கு வருகிறது.] 
மங்கள்யான் - செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பியிருக்கும் விண்கலம். செப்டம்பர் மாதம் 2014 ஆம் ஆண்டு அங்கு சென்று சேரும் என்று சொல்லப் படுகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியில் தொடர்ந்து இந்தியா காலடி எடுத்து வைப்பது மகிழ்ச்சியே. அதுவெல்லாம் கூடாது என்று கோபித்துக் கொள்ள நாம் யார்? சொன்னால் நாம் பிற்போக்கு வாதி என்று சொல்வதற்கு விளக்கமாத்துக் கட்டையை  தூக்கிக் கொண்டு ஆயிரக் கணக்கில் ஓடிவருவார்கள்.  RTO காரர்களிடம் லஞ்சத்தில் சிக்கிய பணத்தை மீட்டாலே வருடத்திற்கு 42 விண்கலங்களை இந்தியா அனுப்ப முடியும். அதனால அதெல்லாம் கேட்கலை.
ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புறது போல அது போல ஒரே ஒரு போட் இந்திய இலங்கை கடற்பரப்புக்கு அனுப்புங்க. அதைத்தான் கேட்குறோம். இன்னைக்கு நினச்சு உடனே அனுப்பினா அது இன்னைக்கே போய் சேரும். செப்டம்பர் 2014 வரை காத்துக்குட்டு இருக்க வேண்டியது இல்லை பாருங்க. அதை விட்டுட்டு இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி அளிக்கத் தயார் என்று சொல்றீங்களே என்ன நியாயம்?

°°°°°°°°°°​​


அடுத்த பதிவு 
தமிழ் கூறும் நல்லுலகில் 
பின்நவீனத்துவக் கூறுகளை உள்ளடக்கி 
கதை கட்டுரை எழுதும் 
தமிழ் புத்திரன் அ. பிரபாகரனின் - 
(கை) எழுத்தும் நானும் 
என்கிற கட்டுரை... 
எதிர் நீச்சல் என்கிற படத்தின் கரு 
எங்கிருந்து கிடைத்தது என்பதை 
விவரிக்கும் கட்டுரை.

(விளம்பரம்)
இதை தினமணி, தினகரன் 
மற்றும் அனைத்து நாளிதழிலும் வரும் 
விளம்பரமாக நினைத்துக்கொள்ளவும்.
°°°°°°°°°°

1 comments:

Unknown சொன்னது…[பதிலளி]

வர வர நக்கல் ஜாஸ்தியாயிடுச்சு.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்