11.8.12

டெசோ +ஈழம் + கருத்து சுதந்திரம்


டெசோ மாநாடு பற்றி எல்லாரும் எழுதி எழுதி கிழித்து எரிந்து விட்டார்கள். கலைஞர் மட்டும் வலைப்பூக்களைப் படிப்பவராக இருந்தால், எழுதியிருப்பதை படித்து இருந்தால் அவர்மேலே அவருக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கும். நிறையப் படிப்பவர் அவர். அதனால் பத்திரிகைகளில் வந்திருப்பதைப் பார்த்தும் அவர் மேலேயே அவருக்கு வெறுப்பு வந்திருந்தால் கூட கொஞ்சமாவது மாற்றம் தெரிந்திருக்கும். அதற்கெல்லாம் அசருபவர் அல்ல. சரி இது கலைஞர் பற்றிய கட்டுரை அல்ல.  அதுமட்டுமல்லாமல் டெசோ மாநாடு நடத்தும் அருகதை, கலைஞருக்கோ அல்லது வேறு யாருக்கோ இங்கே இருக்கிறதா என்பதைப் பற்றியும் நான் எழுதப் போவதில்லை.

ஆனால் டெசோ மாநாடு நடத்துவதற்கான எதிர்ப்பு ஆள்பவர்களிடமிருந்து வருவதைக் கண்டுதான் எழுதவேண்டுமென்று ஆசைப் படுகிறேன்.

டெசோ மாநாட்டை புறக்கணிப்பதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. அது இதுவரை அவரை நம்பிக் கேட்டோம் என்பது தொடங்கி பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனவே இதை மறுப்பதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. 

ஆனால் அனுமதி மறுப்பதற்கான உரிமை அரசிடம் இல்லை என்றே கருதுகிறேன். ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு அரசு சொல்லுமேயானால், அது எந்த அளவுக்கு இலங்கையின் மீது அனுசரணையோடு இருக்கிறது என்பதை மீண்டும் எடுத்துக் காட்டுகிறது. காங்கிரஸ் கலந்து கொள்ளாது என்று நாராயண சுவாமி சொல்லியிருக்கிறார். கலந்து கொண்டு இரட்டை வேடம் போடுவதற்கு இதுவே மேல்தான். ஆனால் பார்த்துக் கொண்டே இருங்கள் இந்த இலங்கைக்கு கைகட்டும் காங்கிரஸ் அங்கே சீனா வந்து ஆட்டம் போட்ட பிறகுதான் ஆஹா சூடு வைத்துக் கொண்டேமே என்று யோசிக்கும்.

எல்.டி. டி. யை ஆதரிப்பது குற்றம் என்றும் சொன்ன போதும் கூட எல்.டி.டி. ஐ ஆதரித்துப் பேசக்கூடாது என்றுதான் அப்போது சொன்னார்கள். அந்த வார்த்தையைப் பயன்படுத்துவது தவறு என்று சொன்னார்களா என்று தெரியவில்லை.

இப்போது ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது அந்த வார்த்தை எந்த அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்பது புரிகிறது.  கலைஞர் வேடதாரி என்பது எல்லாருக்கும் தெரியுமானால், எதற்கு இந்த அரசாங்கங்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு இதை எதிர்க்கின்றன என்றுதான் புரியவில்லை. இலங்கை அரசு அங்கே பங்கேற்கும் நபர்களை தான் தனியாக கவனிப்பேன் என்கிறது. சிலருக்கு அங்கிருக்கிற இந்தியத் தூதரகம் விசா வழங்க மறுக்கிறது. இந்திய அரசு 'ஈழம்' என்பதை பயன்படுத்தக் கூடாது என்கிறது. தமிழக அரசு சென்னையில் இதை நடத்தக் கூடாது என்கிறது. 

ஆகமொத்தம் காரணம் ஒன்றுதான்: ஈழம் பற்றிப் பேசினால் அதன் விடுதலைக்காக குரல் கொடுக்கும் தமிழர்களின் எண்ணிக்கை வளர்ந்து விடக் கூடாது என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. 

இதில் நாம் கலைஞரை விமர்சிக்கிறோம் என்று இந்த மாநாட்டின் எதிர்ப்பில் -  "ஈழம்" மீது நமக்கு இருக்கும் வேட்கையை குறைத்து விடவும்,இனி யாருமே அந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாமல் போகும் நிலையயைத் தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நாளைக்கு வேறு யாரும் கூட ஈழ மாநாடு என்கிற ஒன்றை நடத்த முடியாது. உண்மையான ஈழ ஆதரவாளர்கள் கூட. 

அரசியல்வாதிகளில் பச்சோந்திகள் தவிர வேறு யாரும் இல்லை. இதில் கலைஞர் மட்டும் விதிவிலக்கா? ஒவ்வொருவருக்கும் வயதுதான் வித்தியாசமே தவிர வேறு ஒன்றும் இல்லை. அம்மாகூட தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதனால் அவர்கள் ஈழ ஆதரவாளர் ஆகிவிட்டாரா? அம்மாவைப் பாராட்டி ஒருவர் மாற்றி ஒருவர் பேசி, பாராட்டி, .... கொஞ்ச நாளிலேயே அம்மா எல்லாருக்கும் ஆப்பு வைத்தார்கள். அதே அம்மா புரானிகள் கூட இப்போது அமைதியாக இருக்கிறார்கள். 

கலைஞர் மாநாடு நடத்த வேண்டும் என்றோ, கூடாது என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு நான் சொல்ல விரும்புவது இதுதான். 

சுதந்திர நாட்டில் ஒருவன் தான் விரும்பிகிற, நம்புகிற கொள்கையை வெளிப்படுத்துவதற்கான உரிமை எல்லாருக்கும் உண்டு. அதை மறுப்பவர்கள் அரக்கர்கள் - அஹிம்சாவாதிகள் என்று சொல்லிக்கொண்டால் கூட.

இந்தக் கருத்துச் சுதந்திரம் மிதிக்கப் படும் நேரத்தில் அது கலைஞருக்கு எதிரானது என்று நாம் மகிழும் வேளையில், மிதிக்கும் கால்கள் நமது தலையின் மேல் இருப்பதை கவனிக்க மறக்கிறோம்.

கருத்துச் சுதந்திரம் கூட இல்லாத இந்த இந்தியா நாடு விரைவில் 
சுதந்திர தினம் கொண்டாட இருக்கிறது. 

4 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…[பதிலளி]

நல்ல அலசல்...

உண்மையை முடிவில் சிறப்பாக சொல்லி உள்ளீர்கள் ஐயா... நன்றி...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…[பதிலளி]

அரசியல்.

அப்பு சொன்னது…[பதிலளி]

@திண்டுக்கல் தனபாலன்

நன்றி திரு தனபாலன் அவர்களே.

அப்பு சொன்னது…[பதிலளி]

@நண்டு @நொரண்டு -ஈரோடு

வருகைக்கு நன்றி தோழரே.

அரசியல் என்கிற ஒருவார்த்தையில் எல்லாவற்றையும் அடக்கி விட்டீர்.
கலைஞர் செய்வதும் அரசியல். அரசு செய்வதும் அரசியல். இடையில் நாம்தான் மாட்டிக் கொண்டோம்.

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்