2.4.11

Comman Man - என்பது என்ன?

தடங்கலுக்கு வருந்துகிறேன்... 
கடந்த பதிவில் இக்கட்டுரையின் எழுத்துரு பிரச்சனையால் பலர் படிக்க முடியவில்லை. அந்நிய மொழியில் இருந்தது.  பிரபாகரன் அனுப்பிய கட்டுரையை அப்படியே இணைத்ததால் வந்தது. இப்போது அதை மீண்டும் எழுத்துரு மாற்றி ஒரே கட்டுரையாகத் தருகிறேன்.

பொது மக்களாய் இருங்கள்
சொந்தக் காசில் சூன்யம் வைப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நான் 2009 ஆம் ஆண்டு செய்த ஒரு காரியம்தான் அது. நான் கடந்த சில ஆண்டுகளாக அயல் நாட்டில் இருந்தேன். இடையில் விடுப்பில் வீட்டிற்கு வர வேண்டியிருந்தது. சனவரியில் இருந்து திசம்பர் வரை எத்தனையோ மாதங்கள் இருக்க அனைத்தையும் விட்டுவிட்டு ஏப்ரல் இறுதியை தேர்ந்தெடுத்தேன் பாருங்கள். அதுதான் சொந்தக் காசில் சூன்யம் வைப்பது.
அப்போது இலங்கையில் இறுதிப் போர் உச்சத்தில் இருந்த நேரம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் சண்டையை நிறுத்த உக்கிரமாய் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். முத்துக் குமார் வேறு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார். அயல் நாட்டில் இணையச் செய்தித்தாள்களையும் தமிழ் ஆதரவு வலைப் பக்கங்களையும் மட்டுமே மேய்ந்து கொண்டிருந்த எனக்கும், நண்பர்களுக்கும் தமிழகத்தில் பெரிய அலை ஒன்று இருப்பதான பிரம்மை இருந்தது. மக்களெல்லாம் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உண்மையிலேயே நம்பினோம்.
இங்கே ஊருக்கு வந்த போதுதான் உண்மை நிலை வேறு என்பது எனக்குப் புலப்பட்டது. ஏப்ரல் மாத வெப்பம் தந்த சூட்டை விட மக்களின் மனநிலை மிகப் பெரிய எரிச்சலைத் தந்தது. அப்போதுதான் இணையத்தில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இன்டலிஜென்சியாவுக்கும் சாதாரண மக்களும் உள்ள இடைவெளி உறைத்தது.
இங்கே தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சனை, விலைவாசி, மின்வெட்டு இவைகளை விட, மக்களின் கரிசனைகளும், கருதுகோல்களும் வேறாய் இருந்தன. தேர்தலுக்கு முந்தைய மாதம் வரை ஆற்காட்டார் மின்வெட்டு மூலம் ஏறத்தாழ நான்கு தேர்தலுக்கு தன் கட்சியை வெற்றி பெற விடாதபடியான ஓர் ஏற்பாட்டைச் செய்திருந்தார். ஆனால் தேர்தலை முன்னிட்டு மின்சாரம் ஓரளவு தடையில்லாமல் வழங்கப் பட்டதால் மக்கள் அப்போது அதை மறந்து போனார்கள். அதேபோலத் தான் விலைவாசி பிரச்சனையும். விலைவாசி எப்போதும் ஏறக்கூடியதுதான். மனிதனுக்கு வயதாவதைப் போல என்கிற முடிவுக்கு மக்கள் எப்போதோ வந்து விட்டார்கள். இதைப் போல மற்ற பிரச்சனைகளும் மறந்து போவதற்கு பல யுக்திகள் செய்யப்பட்டன.
தேர்தல் களத்தில் மற்ற பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி ஓட்டுக்கு காசு கொடுப்பதை பற்றிய விவாதங்கள் தான் தேர்தலின் பிரதான அம்சம் போல விவாதிக்கப் பட்டது. எனக்கு அதிர்ச்சியின் உச்சம் வந்தது எப்போதெனில் பக்கத்து வீட்டுக்காரர் பேசிக்கொண்ட சில உரையாடல்கள்தான். “உங்க வீட்டுக்கு காசு வந்திருச்சா? நம்ம தெருவுக்கு கொஞ்சம் கம்மிதான்.” – போன்ற பேச்சுக்களை சர்வ சாதாரணமாகக் கேட்க முடிந்தது. பேசாமல் வேறொரு சமயம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது. சரி எப்படியோ சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோம். அடுத்துள்ள அவலட்சனங்களையும் பாப்போம் என்று முடிவு செய்து கொண்டேன்.
இந்தக் காசு கொடுக்கும் பிரச்சனையில் இரு விஷயங்கள் விநோதமாகப் பட்டது. முதலாவது – “காசை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டை எங்களுக்கு போடுங்கள்” என்று சில கட்சியினர் பிரச்சாரம் செய்தது. இந்தப் பிரச்சாரம் காசு கொடுத்தலை நியாயப் படுத்துவது என்கிற முதல் குற்றத்தையும் கொடுத்த காசுக்கு துரோகம் செய்யுங்கள் என்கிற இரண்டாவது குற்றத்தையும் மக்களைச் செய்யத் தூண்டியது. பணம் கொடுத்தவர்களை விட இவர்கள் தான் எனக்கு ஆபத்தானவர்களாக தெரிந்தார்கள்.
இன்னொன்று – காசு கொடுத்த கட்சியினர், நிச்சயமாக எதிர்க் கட்சியினருக்குத் தான் போடுவார்கள் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் என்று தெரிந்த வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் விட்டது. இந்த இரண்டாவது நிகழ்வுதான் என்னை இப்போதும் சிந்திக்க வைக்கிறது.
எது எப்படியாயினும் இந்தக் கண்றாவிகளைஎல்லாம் பார்க்கும் போதே எனக்குத் தெரிந்துவிட்டது – இந்தத் தேர்தலில் நியாயமான எதையும் எதிர் பார்க்க முடியாது என்பது. அந்தத் தேர்தலில் மட்டுமல்ல எந்தத் தேர்தலிலும் நியாயமான முடிவுகளை எதிர் பார்க்க முடியாது என்கிற முடிவுக்கு நான் இப்போது வந்து விட்டேன்.

இப்போது இந்தியாவுக்கு நிரந்தரமாக வந்து விட்டேன். இப்போது வேறு தேர்தல். ஆனால், அதே காட்சிகளைத் தான் இப்போதும் பார்க்கிறேன். இந்த நடைமுறைகளையெல்லாம் பார்க்கும் போது உண்மையிலேயே விரக்தியும், இயலாமையும், சலிப்பும்தான் தோன்றுகிறது. இந்தத் தேர்தல்களும், ஆட்சி மாற்றங்களும், எனக்கு இந்தியாவில் சனநாயகம் ஒரு தோல்விதான் என்ற கருத்தை விதைத்துக் கொண்டே இருக்கின்றன. சுய கழிவிரக்கமும் எரிச்சலும் தான் பதிலாகத் தோன்றுகின்றன. என்ன செய்வது?
இருந்தாலும், எல்லாம் போய் விட்ட மக்களுக்கு பற்றிக் கொள்ள தாம்புக் கயிறாக சனநாயக ஓட்டுரிமை மட்டுமே இருப்பதால் இதையே நாம் விடாமல் திரும்பத் திரும்ப பேச வேண்டியிருக்கிறது. அதன் நடைமுறைகளை சீர் படுத்துவதை மீண்டும் மீண்டும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆதில் முதலாவதாகத் தோன்றுவது கட்சி சார்பற்ற பொது மக்களை உருவாக்குவதுதான்.
நமது நாட்டின் சனநாயகமும் தேர்தல் முறைகளும் தோல்வியாகத் தென்பட முதன் முதற்காரணம் என்னைப் பொருத்தவரை இந்த நாட்டில் பொது மக்களின் பற்றாக் குறைதான். இந்த நாட்டில், மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொது மக்களாக இருப்பதில்லை. அவர்களில் பெரும்பான்மையினர் கட்சிக்காரர்களாகவே இருக்கிறார்கள். சாதாரணமாக இரண்டு பேர் tea கடையில் சந்தித்துக் கொண்டால் கேட்கப்படும் ஓர் அபத்தமான கேள்வி – நீங்க எந்தக் கட்சி? இதற்கு வரும் பதில் அபத்ஹ்டம், அசிங்கம் , ஆபத்து எல்லாம் சேர்ந்ததாக இருக்கிறது.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், தமிழ் நாட்டில் உள்ள வாக்காளர்களில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் ஏதேனும் ஒரு கட்சி சார்ந்தவர்களாகவோ அல்லது அபிமானிகளாகவோ தான் இருக்கிறார்கள். இப்படி இவர்கள் கட்சி சார்ந்தவர்களாக இருப்பதற்கு எந்த விதமான் நியாயமான காரணங்களோ, தர்க்கப் பூர்வமான முகாந்திரங்களோ இல்லை. ஏதோ ஓர் உணர்ச்சி வேகத்திலோ அல்லது தமக்குத் தாமே கற்பித்துக் கொண்ட உணர்வு சார்ந்த நியாயங்களின் அடிப்படையிலோ இவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். “நான் இந்தக் கட்சிக்குத் தான் ஓட்டுப போடுவேன் ஏனெனில் இந்தக் கட்சிதான் என்  சாதிக்காரனை கொஞ்ச நாளைக்காவது தலைமை அமைச்சர் நாற்காலியில் அமரச் செய்தது” எனப் பட்டதாரி நண்பர் என்னிடம் சொன்னார். “அட மர மண்டையே – உன் சாதிக்காரன் அந்த நாற்காலியில் உட்கார்ந்தால் உனக்கு கால் காசு பிரயோஜனம் இல்லை” என்பதை உனக்கு எப்படி புரிய வைப்பது? இதுதான் இன்றைய நிலைமை.
மக்களில் பெருவரரியானவர்கள் கட்சி சார்ந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி வைத்திருக்கிறது. அந்த வங்கி எப்போதும் மாறாது. எப்போதும் அது தனக்கு விசுவாசமாய் இருக்கும் என்று அக்கட்சி நம்புகிறது. எனவே தேர்தல் நேரத்தில் லாபம் பார்த்து ஓர் அணியோடு கூட்டுச் சேர்ந்து கொள்கிறது. ஒரு கட்சியின் தலைமை எவ்வளவு மாசு பட்டதாக இருந்தாலும், அக்கட்சிக்கென்ற வாக்கு வங்கி எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். இந்த எதார்த்தம்தான் தேர்தலை எப்போதும் நமக்குத் தோல்வியாகவே காட்டிக் கொண்டே இருக்கும். எனவே, பிரச்சினை இதுதான். நம் நாட்டின் மக்கள் பொது மக்களாக இல்லை. ஒரு தேர்தலில் வாக்களிப்பவர்கள் பெரும்பான்மியினர் கட்சி அபிமானிகள். காமன் மேன் எனப்படும் சொல்லப்படும் நடு நிலையாளர்கள் வெறும் ஐந்து சதவீதம் தான். எனவே எப்போது மக்கள் பொது மக்களாக மாறுகிரார்களோ அப்போதுதான் குறைந்த பட்ச ஜனநாயகமாவது சாத்தியம்.
இப்போது தேர்தல் வருகிறது. இந்த நேரத்தில் நாம் நமக்குத் தெரிந்தவர்களிடம் செய்ய வேண்டிய பிரச்சாரம் இதுதான். தயவு செய்து கட்சியை விட்டு வெளியே வாருங்கள். நீங்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைமை ஒவ்வொரு தேர்தலுக்கும் எவ்வித லஜ்ஜையுமின்றி அணி மாறுகிற பொது நீங்கள் மட்டும் ஏன் அந்தக் கட்சியிலேயே இருக்கிறீர்கள்? நாம் ஏன் கட்சியை சார்ந்திருக்க வேண்டும்? நினைத்துப் பாருங்கள். நாம் சார்ந்திருக்கும் எந்தக் கட்சியுமே மக்கள் நலனுக்கானதில்லை என்பது தெரிய வந்த பிறகு ஏன் நாம் மீண்டும் கட்சி அனுதாபிகளாக இருக்க வேண்டும். நீங்கள் இந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்பது கேவலமானது – அறுவருப்பானது என்பதை உணருங்கள். நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் – பரம்பரைக் கட்சிக்காரன் என்று சொல்லும் போது – நீங்கள் பரம்பரையாகவே இழுக்கையும், அவமானத்தையும் சுமந்து வந்திருக்கிறீர்கள் – உங்கள் பரம்பரையே சுய சிந்தனையையும் மரியாதையையும் அடகு வைத்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.
எனவே, இந்தத் தேர்தலாவது கட்சியை விட்டு விட்டு வெளியே வந்து காமன் மேன் ஆக சிந்தியுங்கள். அதற்குப் பிறகு வாக்களிக்க நினைத்தால் யாருக்காவது வாக்களியுங்கள். 

அ. பிரபாகரன்

0 comments:

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்