27.1.13

தடை: விஸ்வரூப வெற்றி


கமல்ஹாசன்
ஒவ்வொரு திரைப் படம் எடுக்கும் போதும் 
ஏதாவது ஒரு சிக்கல், தடை என்று ஏடாகூடமாக 
மனிதன் மாட்டிப் போகிறார். 
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல 
எனக்கு ஒண்ணுமே ஆகுறதில்ல - ன்னு 
சொன்ன மனுஷனுக்குத் தான் இப்படி ஆகுது.

  • சண்டியர், ஹே ராம், விஸ்வரூபம் - வரிசையா வந்து மாட்டுது. ஒவ்வொன்றின் பின்புலத்திலும் உள்ள சிக்கல்கள் வெவ்வேறு என்றாலும், இந்த நேரத்தில் ஒரே ஒரு செய்திதான்.  திரைப்படங்களுக்குத் தடை என்பது நமது நாட்டிற்கு ஒன்றும் புதிதில்லை. 
  • திரைப்பங்களையே தடை செய்வதே நல்லதாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். என்னைப் போல பல பிரபல அரசியல் வாதிகளும் நினைப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும் அது சாத்தியப் படாது என்பதனால் சில திரைப் படங்களை தடை செய்வோம் அல்லது சில வாரங்கள் தடை செய்வோம் என்றெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள். இது நல்ல எண்ணத்தினால் அல்ல - அரசியல் தந்திரம், மற்றும் வியாபார நஷ்டம், அரசியல் பழி வாங்கல் என்பதெல்லாம் இதன் பின் அடக்கம். 
  • இதில் கமல் 'நல்லவரா கெட்டவரா' என்பதெல்லாம் இந்த விவாதத்திற்கு உட்பட்டதல்ல. இந்தத் திரைப் படத்திற்கு தடை சரியா இல்லையா என்பதுதான். டாம் படத்திற்குத் தடை என்ற போதும் எனது கருத்து இதுவாகவே இருந்தது. கேரளா அரசின் கொள்கை, அது விரிக்கும் வலை தவறு என்பது தெரிந்தாலும் அதற்கானத் தீர்வு என்பது படத்தை தடை செய்வதில் இல்லை, அல்லது தீர்வு அது இல்லை என்றே சொல்லியிருந்தோம்.
  • ஒரு படத்தை தடை செய்வதினால் இஸ்லாமியர்களின் சுதந்திரம் இங்கே பாதுகாக்கப் பட்டு விடுமா? இந்தத் திரைப் படத்தை தடை செய்வதினால் இஸ்லாமியர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று நினைத்து விட முடியுமா? அதுதான் உண்மையெனில் அயோத்திக்கு எப்போதோ தீர்வு கிடைத்திருக்கும். அரசியல்வாதிகள் மக்களை ஒரு மாயையில் வைப்பதற்கு இது போன்ற உப்புச் சப்பில்லாத விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாமியர்களின் கருத்துக்குச் செவி கொடுக்கிறோம் என்ற ஒரு செய்தியை வெளியில் செய்து விட்டு மறைமுகமாய் தங்களது அரசு இயந்திரங்களை அவர்களுக்கு எதிராய் முடுக்கி விடுவார்கள். திரைப் படங்களைத் தடை செய்வதோடு நமது தார்மிகக் கடமை முடிந்து விட்டது என்று நாமும் ஒதுங்கிப் போவோம். இதைத் தானே அவர்கள் நினைக்கிறார்கள். இனி அடுத்த முறை தேர்தலில் இஸ்லாமிய நண்பர்களின் ஒட்டு ஒட்டு மொத்தமாய் மோடியின் சகோதரிக்கு கிடைக்கும்.
  • இன்னொசென்ஸ் ஒப் முஸ்லீம்ஸ் என்ற ஒரு கேவலமான ஒரு படத்தை அமெரிக்க நிறுவனம் தயாரித்த போது அதில் நபிகளை மிகவும் தவறாகச் சித்தரித்து இருக்கிறார்கள் என்பதில் ஒரு நியாயம் இருந்தது. அது எந்த விதமான தயாரிப்பும் இன்றி, அசிங்கமாக சித்தரிக்கப் பட்ட படம் என்பதில் அதன் தடையை நாம் நியாயப் படுத்த முடியும். எந்த விதமான காத்திர முகாந்திரமும் இன்றி கமலின் திரைப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்பது எந்த விதத்தில் சரி என்பது தெரியவில்லை. 
  • ஒரு படத்தில் ஒரு மதத்தவரை எப்போதும் திவிரவாதிகளாகக் காட்டுவது தவறு. ஆனால் ஒரு திரைப் படத்தில் ஒரு விஷயத்தை சொல்லி விட்டால் அது அப்படியே உண்மை என்ற அர்த்தம் இல்லை. அல்லது இந்திய இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் படங்கள் வந்தால் அதற்கான எதிர்ப்புக் குரல் நிச்சயமாய் எல்லாரிடமிருந்தும் வரும். 
  • சரி ஒரு கேள்வி - இந்தியத் தமிழக அரசியல் வாதிகள் எல்லாரையும், கேவலமான பொறுக்கிகளாக, லஞ்சத்தில் ஊறிப் பெருத்த பெருச்சாளிகலாக காட்டும் திரைப் படங்கள் அனைத்தும் உண்மைதானே.   காவலர்கள் பெரும் கேடிகளா...அப்புறம் ஏன் எல்லாத் தமிழ் படங்களையும் தடை செய்யச் சொல்லி எந்த அரசியல்வாதியும் வரிந்து கட்டுவதில்லை?
  • எல்லாருக்கும் எல்லாருடைய கருத்துக்களோடும் உடன்பாடு இருப்பதில்லை. கமலின் பல கருத்துக்கள் எனக்கு உடன்படாதவைகளே. பல திரைப் படங்களின் கருத்துக்கள், அதன் கருத்து இவைகளோடு கூட உடன் பாடு இல்லைதான். அதற்காக அந்த மனிதன் ஒரு கருத்தை சொல்லக் கூடாது என்கிற உரிமை நமக்கில்லை என்றே கருதுகிறேன். அதே சமயத்தில் அந்தக் கருத்தை எதிர்க்கும் உரிமையும் எல்லாருக்கும் உண்டு. ஆனால் எதிர்ப்பு என்பது தடையில் இல்லை... 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்த நேரத்தில கமல் பாடின இந்தப் பாட்டை
பாக்கணும் போல இருக்கு,
"அடமேன்ட்டா நாங்க நடை போட்டா 
தடை போட நீங்க கவர்ன்மெண்டா 
தடா உனக்குத் தடா" 

இதே நேரத்தில் கமலைப் பார்த்து 
இந்தப் பாடலைப் பாட வேண்டும் போல இருக்கிறது.

"போனா போகுதுன்னு விட்டின்னா 
கேனன்னு ஆப்பு வப்பாண்டா"
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குறிப்பு: 
பதிவு என்ன ஒரே குழப்பமாக இருக்கிறது என்பவர்கள் இதைக் கமல் பற்றிய பதிவு என்பதை மனதில் இருத்திக் கொள்வது நல்லது.
[அவசரத்துல ஒழுங்கா எழுதலை என்பதை மறைக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது.]

தொடர்புடைய சில பதிவுகள் :

அன்பின் வன்முறை இன்னொசென்ஸ் ஒப் முஸ்லீம்ஸ் பற்றியது 

டாம் படத்தை தடை செய்தது தவறு


19.1.13

எனக்கு பொங்கல் இல்லை....


எனக்கு பொங்கல் இல்லை 


இரமன கிரி வாசன் 


என் இனம் அழிந்த வலி இன்னும் மிச்சமிருக்கிறது...

முள்வேலி முகாமில் உயிரை தவிர இழக்க ஏதுமின்றி
ஓடுங்கி கிடக்கும் என் சகோதரனையும் சகோதரியையும் 
நினைக்கையில் கரும்பு கசக்கிறது.

காவிரி தண்ணீருக்காய் காத்திருந்து காத்திருந்து கருகிப்
போன என் நெற்களஞ்சியம் மனசை அழுத்துகிறது ...

தலை சாய்ந்து கிடக்கும் வயற்வெளியெல்லாம் 
காங்கீரிட் கதிர்கள் முளைத்து ஸ்கொயர் பீட் இவ்வளவு
என்று வியாபாரத்திற்கு தயாராக நிற்கிறது.

உம்மன சாண்டிக்கு பென்னி குயிக்கே பரவாயில்லை 
என்கிற போது சுதந்திரம் வாங்கி தந்தவர்கள் மேல்
எனக்கு கோபம் வருகிறது.

கடற்கரையோரம் ஆண்டுகளை தாண்டி தொடரும் 
பட்டினிப்போராட்டத்தை நினைக்கையில் என் பொங்கல் பானை
பொங்க மறுக்குறது .

தரையில் தண்ணீர் இல்ல....
எம் கண்ணீரை வழித்து எடுக்க கூட மோட்டாருக்கு கரண்டு இல்லை...

உழவர்கள் எல்லாம் தினக்கூலியாக எம் உழவு மாடுகள் எல்லாம்
அடிமாடுகளாய் ஏலம் போல நீயும் நானும் எஸ் எம் எஸில் பொங்கல்
வாழ்த்து சொல்லிக் கொள்வதில் உடன்பாடு இல்லை எனக்கு...

இனமும் , மொழியும் , உழவும் அழிந்து கொண்டிருக்கையில்
ஏது உழவர் திருநாள் ? ஏது தமிழர் திருநாள் ? 

இரண்டு நாள் விடுமுறையும் , தமன்னாவின் நேர்காணலும்
எந்திரன் சினிமாவும் தான் பொங்கல் என நினைத்தால்
அதை நீயே கொண்டாடிவிட்டு போ......

எனக்கு பொங்கல் இல்லை....

                                                                             இரமன கிரி வாசன் 

********************************************************************
என்  வலையில் வெளியிட
இசைந்ததற்கு 
நன்றி 
அப்பு 
*********************************************************************






14.1.13

பொங்கல் வாழ்த்துகளா!


  • இந்த ஆண்டு வரிசையாய் புத்தாண்டு விழாக்கள். ஒன்று மாற்றி ஒன்று. முதல் புத்தாண்டு கடந்த டிசம்பர் 22 - ஆம் தேதி தொடங்கியது.  - மாயனில் மயங்கிப் போனவர்கள் கொண்டாடிய புத்தாண்டு அது. அதன் பிறகு உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடினார்கள்.  என்ன வித்தியாசம் என்றால், மாயன் காலண்டரின் ஆண்டுக் கணக்கு உலகம் முழுவதும் தெரிந்து விட்டது. அதனால் உலகம் முழுவதும் கொண்டாடினார்கள். ஆங்கிலப் புத்தாண்டும் உலகம்  முழுதும் கொண்டாடப் பட்டது. ஆனால் தமிழ் புத்தாண்டை தமிழர்கள் கூட கொண்டாட மாட்டார்கள். நமக்கு இன்னும் தை தானா - ஆண்டின் தொடக்கம் என்கிற கேள்வியே முதலில் வந்து நிற்கிறது.
  • எதுவாய் இருந்து விட்டுப் போகட்டும் பொங்கல் கொண்டாடுவதில் தமிழர்கள் ஒன்றிணைந்தால் நல்லதுதானே!
  • நண்பர் ஒருவர் முகநூலில் பின்வரும் கருத்தை சொல்லியிருந்தார். இந்தியா முழுவதும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு பலியான பிறகு இந்தியா முழுவதும் பத்திரிக்கைகள் அதை டெல்லிக்கும் உலகத்திற்கும் கொன்று சென்றது. ஆனால் ஈழத்தில் இறந்த ஆயிரக்கணக்கான உயிர்கள் டெல்லியைக் கூட எட்ட வில்லை.  
  • அது எப்படி எட்டும்? தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகள், கூடங்குளம் எதிர் நோக்கும் அபாயம், வரிசையாச் சுட்டுக் கொள்ளப்படும் தமிழ் மீனவர்கள் இவர்களைப் பற்றிய செய்தியைக் கூட வெளியிட மறுக்கும் தமிழ் பத்திரிக்கைகள், அல்லது இந்தியப் பத்திரிக்கைகள் இருக்கும் வரை, அது எங்கும் சென்று சேராது. ஒரு மீனவன் இறந்தால் அவன் தமிழ் மீனவன். இறந்தால் அவன் தமிழன். தமிழ் நாட்டு தமிழனைப் பற்றியே கவலைப் படாத டெல்லி எப்படி ஈழம் பற்றிக் கவலைப் படும்?
  • உழும் நிலம் வறண்டு நிற்கிற போது , இந்திய நீதி மன்றம் வரையறுத்து இருக்கிற தண்ணீரைத் தருவதற்குக் கூட கர்நாடகம் மறுத்து நிற்கிற அவலம் இந்த டெல்லியை எட்டாது. எட்டா உயரத்தில் இருக்கும் டெல்லியை ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால், வடிவேலு சொல்லுவது மாதிரி - இங்க இருக்குற தமிழ் நாட்டை எடுத்து அப்படியே டெல்லி பக்கத்துல வச்சுட்டா ரொம்ப சுலபமாக் கேட்கும்.
  • பொங்கல் கொண்டாடுவோம்.

27.11.12

வாழ்க தேசிய ஒற்றுமை

நேற்றுதான் துப்பாக்கி பார்த்தேன். உடனேயே துப்பார்க்குத் துப்பாய குறள்தான் நினைவுக்கு வந்தது. எழுதலாமென்று வலைப் பக்கம் வந்தால் அதிஷாவின் துப்பார்க்குத் துப்பாய டாஸ் போர்டில் நின்றது. எனவே துப்பாக்கியைத் தூரவைத்து விட்டு இன்னொரு தேசிய ஒற்றுமை பற்றி எழுதுவோம் என்று தோன்றியது.
***********

சில நாட்களுக்கு முன்பு கூடங்குளம் அணு உலைகளின் கழிவுகளை மூடிக் கிடக்கும் கோலார் தங்க வயலில் கொட்டுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது. அது மட்டுமல்ல. அங்கு மட்டுமல்ல கர்னாடக எல்லையின் எந்த ஒரு இடத்திலும் அதைக் கொட்ட அனுமதிக்க மாட்டோம். 

இவர்கள் தான் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து மின்சாரம் நாங்கள் பெறுவோம் என்று சொன்னவர்கள். இங்கே சுற்றி இருக்கும் எல்லாரும் வயித்தில புளியைக் கரைச்சுக்கிட்டு இருக்கணும். இங்க உற்பத்தியாகிற மின்சாரத்தை கேரளா வாங்குமாம் - கர்நாடகா வாங்குமாம். ஆனால் கழிவு கூட அவர்கள் மண்ணை மிதிக்கக் கூடாதாம். 

 இந்தப் பக்கம் ஒரு அரசு வருகிற கொஞ்ச நஞ்ச தண்ணிக்கும் உலை வைக்கப் பார்க்குது. அந்தப் பக்கம் தண்ணீர் தரவே மாட்டோம் - ன்னு அடம் பிடிக்குது ஒரு அரசு. ஆனால் இரண்டு பேருக்கும் இங்கேயிருந்து மின்சாரம் வேணுமாம். ஏன்னா நாமெல்லால் ஒரே தேசம். பக்கத்தில இருக்கவுங்க என்ன செய்தாலும் நாம மட்டும் எல்லாருக்கும் அனுசரணையா இருக்கனுமாம். அவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கூட மீறலாம். அதெல்லாம் ஒன்றுமில்லை. நாம் மட்டும் ஏதாவது சொன்னால் நாட்டைப் பிளக்க சதின்னு தமிழ் நாட்டுல இருக்கவந்தான் சொல்றான்.

இப்ப உச்ச நீதி மன்றம் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்து விட்டது. எதுக்கு நம்ம தீர்ப்பு குடுத்து - அத அவங்க மதிக்காம போனாலும் நம்ம ஒன்னும் செய்ய முடியாம இருக்கோம். அதுனால இனி தீர்ப்பே வேண்டாம் அப்படின்னு முடிவுக்கு வந்து விட்டது. இப்ப என்னடான்னா உச்ச நீதி மன்றம் - காவிரி நீர்ப் பிரச்னைக்கு இரு மாநில முதல்வர்களும் பேசித்தீர்க்க வேண்டும் என்று  யோசனை தெரிவித்து இருக்கிறதாம். அப்படியே கோர்ட்டுக்கு வர்ற எல்லா கேசுகளுக்கும் யோசனை மட்டும் சொன்னா நல்லா இருக்கும்.


மாண்பு மிகு நாராயண சாமி அவர்கள் "கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் ஒப்பந்தப் படி நான்கு மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என்று திருவாய் மலர்ந்த்திருக்கிறார். யாரோடோ போட்ட ஒப்பந்தம். எங்க சொல்லிப் போட்டாங்க? இதென்ன கொடுமை சரவணா? எல்லாத் துன்பங்களையும் நம்ம அனுபவிக்கனும், அவர்கள் எதையுமே விட்டுக் கொடுக்காமல் எல்லாத்தையும் பெறனும்னா நல்ல தேசியம் நல்ல ஒற்றுமை.

என்ன செய்றது!

**********
பேசாம விஜய் சாரை மிலிட்டரிலேர்ந்து ஒரு நாற்பது நாள் லீவுல தமிழ்நாட்டுக்கு வரச் சொல்லி ஏதாவது செய்ய முடியுமான்னு கேக்கலாம். அவர் லீவுல மும்பைக்குப் போனதுனால இந்த விவகாரத்துல நமக்கு என்ன நடக்குதுன்னே தெரியலை.



27.10.12

சூப்பர் சிங்கர் ஜூனியர் த்ரி - ஆஜித் - விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

எனக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நிச்சயமாய் சூப்பர் சிங்கர். இந்த முறை ஜூனியர் என்பதனால் இன்னும் அதிகமான நெருக்கம்.
குழல் இனிது யாழ் இனிது என்பர் மழலைச் சொல் கேளாதவர் ... 
அற்புதமான குழந்தைகளின் குரல்களில் ஏற்கனவே கேட்ட பாடல்கள் கூட இன்னும் இனிதாகவே இருந்தது.

பைனலில் திரு. ஏ. ஆர். ரகுமான் அவர்கள் முன்னிலையில், தம்பி அஜீத் வெற்றி பெற்றது நிச்சயமாய் அவனுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும். உண்மையில் வெற்றி பெறுவதற்கான நபர் அவர்தான் என்றே நான் கருதியிருந்தேன். அப்படி இல்லையென்றாலும் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றே கருதியிருந்தேன். ஏனெனில் டாப் ஐந்தில் வராதவர் பைனலில் வெற்றி பெற்றால் தானே ஒரு கிக்.

என்னதான் குரல்களின் மயக்கம் நம்மை யோசிக்க விடாமல் செய்தாலும் நம்மால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை... விஜய் தொலைக் காட்சி தனது சில்மிஷங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. கடந்த முறை அதிக எஸ் எம் எஸ்கள் பெற்று சாய் வெற்றி பெற்றார் என்று மட்டும்தான் சொன்னது. இந்த முறையும் அதே போல அதிக வாக்கு என்னிக்கையில் இவர் வெற்றி பெற்றார் என்றுதான்  சொன்னார்கள். இந்த முறை வைல்ட் கார்டில் எண்ணிக்கை சொன்னவர்கள் பைனலில் எண்ணிக்கைகளைச் சொல்ல வில்லை.  இருந்தாலும் கடந்த முறையைக் காட்டிலும் இந்த முறை ரிசல்ட் சரியாக இருந்தது போலவே தோன்றியது - இருந்தாலும் சில கேள்விகள் இல்லாமல் இல்லை.

ஏற்கனவே மூன்று இந்து தம்பி தங்கைகள் பைனலில் சேர்ந்து விட்ட பிறகு வைல்ட் கார்டில் இருந்து பைனலில் வர வேண்டியது ஒரு இஸ்லாமிய மற்றும் கிறித்தவ குழந்தை.... அது அப்படியே நடந்தது.  இப்படித்தான் நடக்கும் என்பதை நான் எதிர் பார்த்திருந்தேன். என் நண்பர் ஒருவரிடம் அதைப் பற்றி முண்பே சொல்லியிருந்தேன். அது அப்படியே நடந்ததைப் பார்த்த பிறகு ஒன்று  ஜோசியம் சொல்லலாம் அல்லது ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சி நடத்தும் தகுதி எனக்கு இருக்கிறது என்பதை நினைத்து எனக்கு பெருமையாக இருந்தது.   இது போல எத்தனை பேர் பெருமைப் பட்டிருக்கிறிர்களோ, யாருக்குத் தெரியும்? 
வைல்ட் கார்டில் இருந்து பைனலுக்கு வரும் நபர்களுக்கு வாக்குகள் அதிகம் பெற வாய்ப்பு இருக்கிறது. அது நேரடியாக பைனலுக்கு நுழையும் நபர்களுக்கு இல்லை.  காரணம் நிறைய இருக்கின்றது. 

இந்த முறை நிச்சயமாய் சுகன்யாவும் கவுதமும் ஒழுங்காக பாட வில்லை. இருவரின்  வாய்சும்    ஒத்துழைக்க வில்லை என்பது மட்டுமலாமல் பல இடங்களில் சுருதி சேர வில்லை என்பதும் உண்மை. உண்மையிலேயே சுருதி சேரவில்லையா சேர விட வில்லையா என்பது தெரிய வில்லை. மிகவும் கடினமான பாடல்களையே தேர்ந்தெடுக்கும் சுகன்யா இந்த முறை கொஞ்சம் இலகுவான பாடலையே தேர்ந்தெடுத்தது போலவே இருந்தது. சரி ...அப்படியே அவர்கள் மிக நன்றாகப் பாடி இருந்தாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே தோன்றியது...  இது எப்போதும் நடப்பது தானே. அடுத்த முறையில் இருந்து முதலில் நேரடியாக பைனலுக்குத் தேர்ந்தெடுக்கப் படும் நபர் நிச்சயமாய் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே யோசிப்பார் இப்போது சுகன்யா யோசித்துக் கொண்டிருப்பதைப் போல.

வழக்கம் போல திரு மனோ அவர்கள் ஏதாவது சொல்லி அவர்கள் எதையும் கணக்கு பண்ணுவதில்லை என்பதை நமக்குத் தெளிவு படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். 
ஒவ்வொரு முறையும் யாராவது வெளியேற்றப் படும் போது புள்ளி ஐந்து மதிப்பெண்களில் தான் வெளியேறி இருக்கிறார்கள். அதற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ பெற்று யாரும் உள்ளேயும் இல்லை வெளியேவும் போகவில்லை.  அப்படித் தான் திரு மனோ அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த ரவுண்டில் இந்த இடத்தில் சுருதி சேரலை .. உங்கள் இரண்டு பேரில் நீ இதில் சரியில்லை... அதில் சரியில்லை என்று யாரும் சுட்டிக் காட்டுவதில்லை. ஆனால் மதிப்பெண்கள் மட்டும் புள்ளி. ஐந்துதான் வித்தியாசம் இருக்கும்.
அது எப்போதுமே பொய் என்பதை அவராக மைக்கைப் புடுங்கி பைனல் மேடையில் பேசி மீண்டும் நிருபித்து விட்டார். அதாவது - அஜூத் மற்றும் பிரகதி இருவரும் அனைத்து நடுவர்களிடமிருந்து ஒரே மதிப்பெண்களைப் பெற்றதாகவும், எஸ். எம். எஸ் களில் மட்டும் புள்ளி ஐந்து மதிப்பெண் கூடப் பெற்று ஆஜித் வெற்றி பெற்றதாகவும் திரு. மனோ சொன்னது தாங்கள் ஏற்கனவே இது போல ஒவ்வொரு வாரக் கடைசியிலும் சொன்னது உண்மையில்லை என்பதை நிருபித்து இருக்கிறார்.

அந்த புள்ளி பாதி எஸ். எம். எஸ் அனுப்புன அந்தப் புண்ணியாவான் யார்ன்னு தெரிந்தா அந்த மாதிரி பாதி எஸ். எம். எஸ். எப்படி அனுப்பு றதுன்னு சொன்னா நல்லா இருக்கும். ஒருவேளை அவரே புள்ளி. ஐந்து எஸ். எம். எஸ். அனுப்புனாரோ என்னவோ.

என்னதான் உள்ளே அரசியல் நடந்தாலும் இந்த நிகழ்ச்சியின் அடுத்த பாகத்தைப் பார்க்க மாட்டேன் என்கிற உறுதியை மட்டும் என்னால் வழங்க முடியாது. இசைக்கு மயங்காதவர்கள் யாரவது உண்டா... என்ன?

****************************************************

ஆனால் இந்த முறை இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களை ஊமைப் படம் பார்க்க வைத்த பெருமை விஜய் டிவிக்கே சேரும். இதை தெரியாமல் நடந்த பிழையாகக் கருத முடிய வில்லை.