கடந்த ஒரு வாராக் காய்ச்சலுக்குப் பிறகு
கணினியைத் திறந்தால்
நீட் தேர்வின் கொடூர அரக்கனை எதிர் கொண்டு போராடியும் வெற்றி காண இயலாமல், தன்னை மாய்த்துக் கொண்ட அனிதாவின் தற்கொலை
இதயத்தை இன்னும் கனமாக்கியது.
1196 மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வினை எதிர்த்து உச்ச நீதி மன்றம் வரை போராடிய ஒரு சாதாரண மாணவியால் வேறென்ன செய்ய முடியும்?
தற்கொலைகள் தவறுதான்.
ஆனால் இவைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசுகள் தானே. அவைகள் தவறு செய்யும் போது மக்களுக்கு உதவ வேண்டியவைகள் நீதி மன்றங்கள் தானே.
அரியலூர் மண்ணைச் சேர்ந்த அந்த மாணவி டெல்லி வரை சென்றாள் - தனது வாதத்தை எடுத்து வைத்திருக்கிறாள். ஒரு சாதாரண பிரஜையின் வாதத்தை உணர்ந்து கொள்ளாத அரசு எப்படி மக்கள் அரசாக இருக்க முடியும்?
-
தமிழகத்தில் ஒரு தலைவர் சொல்லுகிறார் - அவள் இன்னும் இரண்டு முறை நீட் எழுதியிருக்க வேண்டுமாம் - அப்படியும் தேர்ச்சி பெறவில்லை என்றால் வேறு ஏதாவது பாடத்திட்டத்தை தேர்வு செய்ய வேண்டுமாம். சமூக நீதி பேசி புகழ் பெற்ற தலைவர்கள் எல்லாம் இப்படிப் பேசத் தொடங்கிவிட்டார்கள். அதாவது 1196 மதிப்பெண் எடுத்தும் நான் விரும்பியதை படிக்க எனக்கு முடியவில்லை என்றால் இந்த பள்ளிகள் எதற்கு இந்தத் தேர்வுகள் எதற்கு?
18 வயது நிறைவில் நீங்கள் நீட் தேர்வு எழுதினால் போதும் என்றால் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மார்க்குகள் வீண் தானே.
என்ன உடுத்த வேண்டும்? என்ன மொழி பேச வேண்டும்? என்ன உண்ண வேண்டும் என்பது வரைக்கும் முடிவு செய்தாயிற்று? இப்போது யார் எதைப் படிக்க வேண்டும் என்று சொல்லுகிற நவீன குருகுலக் கல்வியைத் திணிக்கிறது அரசு. இதையே முன்மொழியும் அரசுகள் இருக்கும் வரை, தலைவர்கள் இருக்கும் வரை அனிதாக்கள் தற்கொலைகளைத் தடுக்க முடியாது.
-
தமிழகத்தின் கவிஞர்
"அனிதா விரும்பியது கிடைக்கவில்லை என்றால்
கிடைப்பதை விரும்ப வேண்டும்" அதற்காக உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று சொன்னதோடு விட்டிருந்தாலாவது பரவாயில்லை - அப்படி இந்தியாவில் விரும்பியது கிடைக்க வில்லை என்று தற்கொலைகள் செய்து கொண்டால் இந்திய ஜனத் தொகையில் பாதிப் பேர் தற்கொலை செய்து கொள்வார்களாம்.
இந்திய ஜனத் தொகையில் பாதிப் பேர் தங்கள் விரும்பியதைச் செய்ய முடியவில்லை என்றால் என்ன நாடு இது? என்ன அரசு இது? என்ன கவிஞர் இவர்?
-
இப்போது கூட தமிழகம் விழிக்க வில்லை என்றால்
பின்னர்
எழுவது மிகக் கடினம்.