2.11.11

நூலகமும் மருத்துவமனையும்


சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்று அரியணையில் அமர்ந்திருக்கும் அம்மா அவர்களின் அடுத்த அறிவிப்பு மிகப் பெரிய நூலகம் ஒன்றை மருத்துவ மனையாக மாற்றுவது குறித்து வெளிவந்திருக்கிறது.

இந்த மிகப் பெரிய வெற்றி, தனது பழிவாங்களை தொடரும் நடவடிக்கையாக இருக்கக் கூடாது என்பதே அனைவரின் விருப்பமாக இருக்க வேண்டும் என்றும் ஆனால் இது எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தோம். உடனடியாக அடுத்த அறிவிப்பை வெளியிட்டு தனது அடுத்த நடவடிக்கையை ஆரம்பித்து இருக்கிறார்.

மருத்துவமனை அமைப்பது தவறொன்றுமில்லை. பயன்படுத்தப் படாத கட்டிடம் ஒன்றை பயனுள்ள விதத்தில் மாற்றுவதும் தவறில்லை. ஆனால் ஒரு நோக்கத்திற்காக வடிவமைக்கப் பட்ட கட்டிடத்தை முற்றிலும் சம்பந்தப் படாத ஒரு நிறுவனமாக மாற்றுவது என்பதில் உள்ள சிக்கலைக் கவனிக்க மறக்கக் கூடாது. மருத்துவமனைகள் காற்றோட்டம் பெருகும் விதத்திலும், அகல வராண்டாக்கள், அவசர வழிகள் நிறைய, நோயாளிகளை ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு கொண்டு செல்லும் விதத்தில் அமைக்கப் பற்றிருக்க வேண்டிய படியற்ற சரிவுப் பாதை, அதுவும் மிகவும் அகலமான மற்றும் பாதுகாப்பான விதத்தில் அமைப்பது: அறுவை சிகிச்சைக்கென அதற்கென வடிவமைக்கப் பட்ட விதத்தில் உள்ள அறைகள், கட்டில்களை ஒரு அறைக்குள்ளே கொண்டு செல்லவும் அதோடு அவர்களை வெளியே கொண்டுவரவும் வேண்டிய அகல கதவுகள் .. இது போன்ற இன்னும் பல விடயங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

ஒரு மருத்துவமனையின் தேவைகளை மனதில் வைத்து ஒரு நூலகத்தை யாரும் கட்டுவது கிடையாது. ஒருவேளை அண்ணா நூற்றாண்டு நூலகம் அந்தக் கூறுகளைக் கொண்டிருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. அப்படி இருக்க வாய்ப்பு இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. அப்படி எனில் எதற்கு இந்த அறிவிப்பு? சட்டசபைக் கட்டிடத்திலாவது அது இன்னும் தயாராக வில்லை என்பது போன்ற காரணங்கள் சொல்லப் பட்டது. இதில் அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்ல - இது கலைஞரின் கனவுத் திட்டம் என்பதைத் தவிர.

ஒவ்வொரு முறையும் மக்களின் வரிப் பணத்தில் ஒரு திட்டம் தீட்டுதலும்  அடுத்து வருகிற அரசு அதை மாற்றுவதும் என்பதும் மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கிற செயலாகவே இருக்கும். இதை நான் கலைஞர் மீதுள்ள அன்பாலோ அல்லது அம்மாவை வெறுக்கிறோம் என்பதற்காகவோ இதைச் சொல்லவில்லை. யாரையும் கண்மூடித்தனமாக நேசிப்பதோ அல்லது வெறுப்பதோ நமக்குத் தேவை அற்றது. நமது பணம் இப்படி ஒருவரின் என்ன ஓட்டத்தை மற்றும் நிறைவேற்றும் எனில் அது தவறே என்று பதிவிடுவதற்காகவே.

  • அம்மாவின் அணுகுமுறையில் ஒரு மாற்றம் தெரிகிறது - முன்பெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அறிவிப்பு வெளியிடுபவர் ஒவ்வொரு முறையும் இப்போது மக்கள் நலனை நிறைவேற்றும் ஒரு நோக்கத்தை முன்னிறுத்தி தனது பழிவாங்களை நடத்துகிறாரோ என்கிற ஐயம் வெளிப் படுகிறது. அதாவது புதிய சட்ட மன்றம் மருத்துவ மனையாக மாற்றப் படும் - நூலகம் மருத்துவ மனையாக மாற்றப் படும், சமச்சீர் கல்வி தவறுகள் நிறைந்தது எனவே நல்ல கல்வியை கொடுக்க தடுத்தல் என்கிற இந்த மேம்போக்கான அறிவிப்புகளால் கலைஞர் மீதுள்ள வெறுப்பில் இவைகளை வரவேற்பார்கள் என்கிற எண்ணத்தோடு செயல் படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

  • இது போன்ற முயற்சிகள் எல்லாம் - கல்வெட்டுகளில் கலைஞரின் பெயரை எடுத்துவிட்டு புதிய கல்வெட்டுகளை நிறுவுவதற்கும், அதில் தனது பெயரைப் பதிவிட்டு வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்யும் முயற்சி என்றே படுகிறது. கலைஞர் திறந்த ஒன்றை வேறு ஒரு நோக்கத்திற்காக மாற்றும் போது புதிய கல்வெட்டே வரும் என்பதை யாரும் மறுக்க முடியாது...
நூல் ஒரு ஆடையின் வடிவை உருவாக்க எவ்வளவு அவசியமோ அதே அளவு நூலகங்கள் ஒரு மனிதனை உருவாக்க மிக அவசியம். நூலகங்கள் ஒரு இனத்தின் சொத்து என்று கூட சொல்ல முடியும். இப்போது நூலகத்தை மாற்றுவதன் மூலம் எத்தனை நூல்கள் மீண்டும் புதிய நூலகங்களுக்குச் செல்லும் என்பதும், எத்தனை நூற்கள் காணாமல் போகும் என்பது யாருக்கும் தெரியாது.

சிங்களர்கள், தமிழ் இனத்தின் வரலாற்றை அழிக்க 1981 மே மாதம் இறுதி நாளில் யாழ் நூலகத்தை எரித்தார்கள். இங்கே நூலகம் மாற்றப் படுகிறது - இதன் பின்புலம் வெறும் பழிவாங்கல் என்றால் சரி. அதற்கு மேலும் ஏதாவது இருக்கிறதா என்பது தெரியவில்லை. புத்தகங்கள் அழியாமல் காக்கப் பட்டால் மித்த மகிழ்ச்சி. அதற்கான உறுதி மொழியை நிச்சயம் இந்த ஆட்சியாளர்கள் கொடுப்பார்கள். ஆனால் இது போன்ற போது நோக்கின் அடிப்படையில் பழி வாங்கல் தொடரும் பட்சத்தில் நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம்...

  • இந்த மாற்றத்திற்கு பெரிதாய் ஒன்றும் எதிர்ப்பு வராது. மருத்துவமனை என்பதை யார் வெறுப்பார். மக்களா அல்லது பார்மசூட்டிகல் கம்பெனிகளா? இது கலைஞரின் மீதுள்ள வெறுப்பே கூட காரணமாக இருக்கலாம். தங்களின் தனிப்பட்ட விருப்புகளுக்காய் சிலவற்றைக் செய்யப் போய் - அவர் செய்த எல்லாவற்றிம் மீதும் வெறுப்பு வந்துவிட்டது கூட காரணமாய் இருக்கலாம்.

  • ஆனால் நிச்சயம் அம்மா தொடர்ந்து ஆட்சிக்கு வரப் போவது இல்லை. அதனால் அம்மா மாற்றிய இவைகளை எல்லாம் அடுத்த அரசு மீண்டும் வேறு ஒன்றாக மாற்றாமல் இருந்தால் சரி.

  • காவல் மையத்திற்குள் நூலகம் அமைத்து அதன் பிறகு பொதுமக்கள் வருவது பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் என அறிவித்து அமைக்கப் படவிருக்கும் நூலகத்தை வெறுமனே காட்சிப் பொருளாக மாற்றி, மக்களுக்கு நூல்கள் கிடைக்காமல் செய்து, அதனால் மீண்டும் அடிமைத்தனத்திலேயே வைத்திருக்காமல் இருந்தால் சரி....

10 comments:

SURYAJEEVA சொன்னது…[பதிலளி]

அம்மையார் ஆட்சியில் வந்ததும் நான் இட்ட முதல் பதிவு முதல் கோணல் என்று, இன்று முற்றும் கோணலாக தான் இருக்கிறது... ஓட்டு போடும் முன் அஞ்சு நிமிஷம் சிலர் யோசிக்காததால் பலர் அனுபவிக்கிறோம்

Unknown சொன்னது…[பதிலளி]

,”சமச்சீரிலிருந்து””நூலகம்” வரை எவ்வளவு பெருந்தன்மையான,காழ்ப்புணர்ச்சியற்ற,மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற அண்ணாவின் எண்ணங்களை பிரதிபலிக்கும் தாயை முதல்வராக இந்த தமிழ்கூறும் நல்லுலகம் பெற்றிருக்கிறது!!!!!!!அவர்களின் மனதை விடவா இந்த நூலகம் பெரிது?வாழ்க தமிழன்,தமிழ்நாடு.......

MANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]

இனி நான்கரை வருஷம் இவிங்க ஆட்டம்தான் ஆட்டம்பாம்ப்'பாக்க வெடிக்க போகுது, ஆக மக்கள் நலன் பெயர் சொல்லி தங்கள் லட்சியத்தை சாதித்துக்கொள்கிரார்கள், வேற என்னத்தை சொல்ல போங்க....

த. ஜார்ஜ் சொன்னது…[பதிலளி]

தமிழகமே நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. மருத்துவமனை அவசியம்தானே..

Unknown சொன்னது…[பதிலளி]

@suryajeeva
ஜீவா, வாக்காளர்களின் தேர்ந்தெடுக்கும் சாய்சஸ் ரொம்பக் கம்மி. அதனால்தான் அப்படி..

Unknown சொன்னது…[பதிலளி]

@ரா.செழியன்.
இந்த காழ்ப்புணர்ச்சி இருக்கும் வரை, தமிழர்களின் நலன் மட்டுமே முன்னிறுத்தப் படும் என்பதெல்லாம் வெளி வேஷம்தானே...

Unknown சொன்னது…[பதிலளி]

@MANO நாஞ்சில் மனோ
மனோ, மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். அடுத்த தேர்தல் வரை நாம் மௌனமாய்த் தான் இருக்க வேண்டும்.

Unknown சொன்னது…[பதிலளி]

@த. ஜார்ஜ்
ஜார்ஜ்,
உங்களின் கிண்டல் மிக அழகு...
உண்மைதான் பலவிதமான நோயாளிகள்.
எனவே யாரும் மருத்துவமனையை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள்.

ராஜா MVS சொன்னது…[பதிலளி]

இவர்கள் வந்தால் அவர்கள் நிறைவேற்றியதை எல்லாத்தையும் ரத்துசெய்வது, அவர்கள் வந்தால் இவர்கள் செய்ததை ரத்துசெய்வது என்பதிலேயே ஐந்தாண்டு முடிந்துவிடுகிறது... இவர்களின் காழ்ப்புணர்ச்சியில் விரயம் ஆவது மக்களின் வரிப்பணம் தான்... இப்படி இருந்தால் எப்பதான் தமிழ்நாடு முன்னேரும்...
எனக்கு நண்டு கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது....

Unknown சொன்னது…[பதிலளி]

@ராஜா MVS

அதே... அதே...

கருத்துரையிடுக

பதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்